June

யூன் 30

யூன் 30

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? (சங்.42:5).

மார்ட்டின் லூத்தரின் மகன் ஒருநாள் காலையில் துக்க ஆடையுடன் சாப்பிட வந்தாராம். உடனே அங்கிருந்த சீர்த்திருத்தவாதி, எதற்காக இந்த உடை? எனக் கேட்டாராம். தேவன் இறந்துவிட்டார் என்ற பதில் கிடைத்தது. உடனே அவர், அதாவது நீ அவரைத் தள்ளிவிட்டிருக்க வேண்டும் அல்லது உன் ஆழ்ந்த துக்கம் அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கும் என்றாராம்.

ஆம், தேவன் இறந்துவிடுகிறவரல்ல. அவர் அப்படி இறந்துபோயிருந்தால் காலமெல்லாம் நாம் ஆறுதலின்றி, உற்சாகமின்றி, சோர்ந்து தோல்வியில் உழன்றுகொண்டிருப்போம்.

சரீர பலவீனத்தால் நாம் தளர்ந்து போய்விடுகிறோம். கர்மேல் மலையின்மேல் பாகாலின் பூசாரிகளுடன் போரிட்ட எலியா, செயற்கரியன செய்து மிகவும் களைத்துவிட்டான். அதன் பின்பு மழை பெய்ய வேண்டுமென ஊக்கமுடன் ஜெபித்தான். பின் யெஸ்ரயேலுக்கு வருமளவும் ஆகாபின் இரத்தத்திற்கு முன்பாக ஓடினான். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த அவன் சரீரத்தில் பலவீனப்பட்டு, சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டு சாகவிரும்பினான் (1.இராஜா.18:17-19:5). அவனது ஆத்துமா சோர்ந்துபோயிற்று. ஏனெனில் எலியாவிற்கு ஓய்வும் புத்துணர்வும் தேவைப்பட்டது. நீங்களும் இதே நிலையில்தான் இருக்கிறீர்களா?

மற்றவர்கள் காட்டுகிற பயத்தினாலும் சோர்ந்துவிடுவது இயல்பு. பத்து வேவுகாரரும் கானான் நல்ல செழிப்பான தேசம் என்று ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் அவர்கள் அந்நாட்டு மக்கள் இராட்சதராயும், அரண் சூழ்ந்த பட்டணங்களில் வாழ்கின்றனர் என்றும் மலைத்தனர். இதனால் அவர்கள் கொடுத்த செய்தியைக் கேட்ட சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள். ஜனங்கள் அன்று இராமுழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள் (எண்.14:1). இப்படிப்பட்டவர்களில் யோசுவாவும், காலேபும் கொடுத்த செய்தியை நம்புவது யார்? பத்து பெரிய தலைவர்கள்தான் மாறான செய்தியைக் கூறுகின்றனரே! எண்ணிக்கையில் அதிகமுள்ளவர்கள் அமலேக்கியரைப் பார்த்து வந்து கூறும்போது நாம் பயப்படுகிறோமா? அல்லது சர்வ வல்ல தேவன் பேரில் நம்பிக்கையுடன் ஒருசிலர் கூறும் உண்மையான செய்தியை ஏற்றுக் விசுவாசிக்கிறோமா? தேவனிடத்தில் விசுவாசமாயிரு! உண்மையாயிரு! பயத்தை நீக்கி அவர் உன்னை உயர்த்துவார்.