June

யூன் 24

யூன் 24

….. யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் (மத்.16:17).

சர்வ வல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தினபடியால், பேதுரு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மெய்யான தன்மையினை அறிந்தான். ஆராய்ந்தும், தேடியும், கேள்வி கேட்டும் கண்டு பிடிக்கக்கூடியதல்ல இந்த வெளிப்பாடு. பரலோகத்திலிருக்கிற தேவன் மனிதர்களின் உள்ளத்திலும், ஆத்துமாவிலும் அறியும்படி அருளிச் செய்யும் கிறிஸ்து தான் வெளிப்படுத்தல்.

பேதுரு பாக்கியவான் என்று இயேசு கிறிஸ்து ஏன் கூறினார்? முதலாவது அவனுக்குத் தேவன் போதித்து, வெளிப்படுத்தினார். இரண்டாவதாக அவன் தன் ஆண்டவரும், இரட்கருமானவரை வெளியரங்கமாக அறிக்கையிட்டான். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளால் அறிய இயலாதவற்றைப் பரிசுத்தாவியானவர் அவனுக்குப் போதித்தார். அதனால்த்தான் அவன் தனக்குள்ளேயுள்ள அந்த மகிமையின் நம்பிக்கையைக் குறித்து சாட்சி கொடுக்க முடிந்தது (1.பேது.3:15).

இந்த சீடனைப்பற்றி இன்னும் ஏதாகிலும் கூறினாரா? ஆம், நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத்.16:18). இதற்குப் பேதுருவே நீ பெரிய பாறையிலிருந்து உடைக்கப்பட்ட ஒரு பகுதியாக இருக்கிறாய். இதில் நான் என் சபையைக் கட்டுவேன் என்றும் பொருள் கூறலாம். மற்ற கிறிஸ்தவர்களைக் காட்டிலும் தான் முதன்மையானவன் என்றோ உயர்வானவன் என்றோ பேதுரு தன்னை மேன்மை பாராட்டிக் கூறியதாக வேதாகமத்தில் எங்கும் காணமுடியாது. இதற்கு மாறாக அவன் தன்னைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்றும், ஆகவே சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவனாக அல்ல, பிரதான மேய்பருக்கேற்ற மந்தைக்கு மாதிரியாக இருக்கவேண்டும்மென்று தன்னைப்பற்றி கூறியுள்ளார் (1.பேது.1:1, 5:3).

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அவன் தைரியமாக அவரைப்பற்றி வெளியரங்கமாக சாட்சி பகர்ந்தான். நாமும்கூட பேதுருவைப் போன்ற பாக்கியம் பெற அவரைப்பற்றி சாட்சி கொடுப்போமாக.