June

யூன் 18

யூன் 18

… உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது (சங்.36:5).

ஆதியந்தமில்லாத தேவனின் பண்புகளை நம்மால் அளவிடவோ, கற்பனை செய்யவோ இயலாது. அவரது உண்மையும், இரக்கங்களையும் நம்மால் அளக்க முடியுமா? குறைபாடுள்ள மனிதர்களாகிய நம்மால் பரிபூரணமுள்ள தேவனைப்பற்றி அளவிட்டுக் கூறமுடியாது, ஆகவே நமக்குத் தெரிந்த அளவுமுறைகளால் மட்டுமே கூறமுடியும். இதையே சங்கீதக்காரன், பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரியதாயிருக்கிறது எனத் தன்னால் முடிந்த அளவு கோலைக் கொண்டு அளவிட்டுள்ளான். வானம் எவ்வளவு உயரத்திலிருந்கிறது? இதே கேள்வியைத்தான் நானும் கேட்டேன். ஒருநாள் பதில் கிடைத்தது. என் மகனுக்கு நான்கு வயதாயிருந்தபோது, அவனுக்கு இரண்டாம் முறiயாக ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிருந்தது. வேதனை நிறைந்த இவ்வேளையில்தான் பூமிக்கும், வானத்திற்கும் உள்ள தூரத்தைப்போன்ற அவரது கிருபையினை உணர்ந்தேன். விசுவாசத்தில் உறுதிப்பட்டேன். என் மகனும் சுகம் பெற்று வீடு திரும்பினான்.

இதே போன்று சங்கீதக்காரன் தேவனுடைய அதிசயங்களை விவரிக்கிறான். கர்த்தாவே உமது கிருபை வானங்களில் விளங்குகிறது. உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது (சங்.36:5). அவரது அளவற்ற கிருபைக்கு முன்பு நமது மிகுதியான தேவைகள் நிறைவேற்றப்படாமற் போய்விடுமோ? சத்தியமுள்ள அவருக்கு முன்பு நாம் ஏன் பயத்துடன், நெருங்க வேண்டும்? மனிதனால் தீர்வுகாண இயலாத பிரச்சனை, வேதனையை அதிகரிக்கும் நெருக்கமான இக்கட்டு, பிறருக்கு இழைத்த பெருந்தவறு, மறைவாக விரித்த வலை, கபடம், மாய்மாலம், வேதனைப்படுத்தும் தோல்வி போன்ற யாவற்றையும் அவருடைய கிருபையுடன் ஒப்பிட்டுப்பார். என் கிருபை உனக்குப் போதும் எனக் கூறிய (2.கொரி.12:9) அவர் நம்மைக் கைவிடாமல் நடத்துகிறவர். வாக்கு மாறாதவர் என்று கண்டு கொள்ளலாமே!