June

யூன் 17

யூன் 17

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் (மத்.5:5).

மற்றவர்களைச் சரியான வழியில் நடத்துவதற்குச் சாந்தகுணமே சிறந்தமுறை. துரோகம் செய்து தன் உள்ளத்தை அதிக வேதனைப்படுத்தியவர்களுக்கு தலைசிறந்த அப்போஸ்தலன் எழுதுகிறார். பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும், தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன் (2.கொரி.10:1). அவருக்கு அதிகாரம் செலுத்தவும், புத்தி சொல்லவும், கடிந்துகொள்ளவும், உக்கிரகோபம் கொள்ளவும் உரிமையுண்டு. ஆயினும் சாந்தத்துடன், அவர்கைளத் தேவனுடைய வழிகளில் நடக்கும்படி கெஞ்சுகிறார்.

நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மோசே, கொடுங்கோலைனப்போல கட்டளையிடாமல் வழிநடத்தினான். மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான் (எண்.12:3) என்று யாவரும் அறிவர். கலககுணமும், அவிசுவாசமும், குறை கூறுதலும், முறுமுறுக்கும் தன்மையுமுள்ள மக்கள் நடுவே சாந்த குணமுள்ளவனாயிருந்தான். அவனது சொந்த வீட்டார் இழிவாகப் பேசினபோதும் அவன் உன்னதமான தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி வாழ்நாள் முழுவதும் அவருக்கென அன்பின் அடிமையாகவே செயல்ப்பட்டான்.

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுத்தரித்துக்கொள்வார்கள் என்று ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். அவர்கள் இதைப் பிறப்புரிமையினாலோ, போராட்டத்தினாலோ, திட்டமிட்டதினாலோ சுதந்தரிக்காமல், தேவனுக்கும், மனுஷருக்கும் முன்பாக தாழ்மையுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதினால் மட்டுமே சுதந்தரிப்பார்கள். அவர்கள் கர்த்தரை நோக்கி அமர்ந்து அவருக்குக் காத்திருப்பார்கள். பொல்லாதவர்களின் வளம் பெருகுவதைக் கண்டு பெருமைப்படார். ஏனெனில் பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இன்னும் கொஞ்ச நேரந்தான். அப்போது துன்மார்க்கன் இரான்…. இந்தக் குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் என்று சங்கீதம் (37:7-11) கூறுகிறது.