June

யூன் 15

யூன் 15

அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை (சங்.34:5).

மற்றவர்களுடைய சாட்சி நம்மை அதிகமாக ஊக்குவிக்கிறது. ஆண்டவரை நம்பி, அவர்கள் வெட்கப்பட்டுப் போகாதிருந்தனர் எனக் கேள்விப்படும்போது நம் உள்ளங்களும் உற்சாகமடைகிறதல்லவா?

ஏனோக்கு தேவனோடு நடந்தான். அவனது விசுவாசத்தைக் கண்டு நமது பரமபிதா மகிழ்ந்தார் என்று நாம் அறிகிறோம். அதரிசனமானவரை மோசே கண்டு உயிரோடு இருந்தான். தேவன் தனக்கு வாக்களித்தததை நிறைவேற்றுவார் என்று நம்பி தன் விசுவாசத்தில் ஆபிரகாம் உறுதியாக நின்றான். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென பவுல் அறிந்திருந்தார். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று தங்கள் வாழ்வில் ஐhர்ஜ் முல்லர், கட்சன் டெய்லர் இன்னும் இவர்களைப் போன்ற எண்ணற்றோர் கண்டுகொண்டுள்ளனர்.

இந்த ஊழியர்கள் யாவரும் வாழ்வில் இருள் சூழ்ந்த வேளையில், துன்பத்தின் நடுவில் இருந்துகொண்டு சர்வ வல்ல தேவனை நோக்கிப் பார்த்தனர். மற்றவர்களோ வேதனையில் தவித்தனர். விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமானவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தனர். அவரை நோக்கிப் பார்த்த வேளையில் இருள் மறைந்து ஒளி வீசிற்று. துன்பங்கள் யாவும் துரிதமாய் நீங்கின. கவலைகள் கரைந்து போயிற்று. பயங்கள் யாவும் பயந்தோடின. அவரை நோக்கிப் பார்ப்போமாகில் நாமும் வெளிச்சத்தில் நடப்போம். வெட்கப்படாதிருப்போம்.