June

யூன் 14

யூன் 14

….. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18).

உபத்திரவம் பொறுமையைக் கொடுக்கிறது. இளம் விசுவாசிகளாக இருக்கும்வரை, நாம் துன்பத்திலும், பாடுகளிலிருந்தும் தேவன் நம்மை விடுதலையாக்குகிறார் என்று உணருகிறோம். அதன் பின்பு, நம் வாழ்வின் கருத்தாழமிக்க பாடங்களை, வாழ்வில் புயல் சூழும் வேளையிலும் இருண்ட சூழ்நிலையிலும், தேவனாலும் பிறராலும் கைவிடப்பட்டு விட்டோம் என்று உணரும் வேளையிலும்தான் கற்றுக்கொள்ள முடிகிறது என்று உணருவோம். அப்பொழுதுதான் ஆவியானவர் அளிக்கும் ஈவுகளைக் காணலாம். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசா.40:29-31). தேவன் பேரிலுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி நம்மைப் பக்குவப்படுத்துவது பொறுமை என்னும் கருவிதான்!

பொறுமைதான் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதி செய்கிறது. வேதவாக்கியங்கள் யாவும் தேவ ஆவியினால் அருளப்பட்டு, நமது பிரயோஜனத்திற்கென எழுதப்பட்டுள்ளன. பரிசுத்தவான்களின் பொறுமையின்மூலம் நாம் அநேக காரியங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆபிரகாம், யோசேப்பு, தாவீது, யோபு, பவுல் போன்றோரின் வாழ்வில் தேவன் வாக்களித்தததை நிறைவேற்றியுள்ளார். நமக்கு அவர் அநேக வாக்குத்தத்தங்களை அளித்துள்ளார். விசுவாசத்தோடு பொறுமையுடன் காத்திருந்தால் நாமும்கூட அவற்றை நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

பொறுமையின் குழப்பங்களைத் தவிர்க முடியும். எரேமியா இராஜாவின் அரண்மனையில் கைதியாக வைக்கப்பட்டிருந்தான். அவனைப் பார்த்து தேவன், இதோ, உன் பெரிய தகப்பன் மகன் உன்னிடத்தில் வந்து ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள். அதைக் கொள்கிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்லுவான் என்றார் (எரேமி.32:7). எரேமியாவிற்கு அந்தச் சொத்து தேவையற்றது. ஆகவே அவன் உடனே எதையும் செய்யாமல் பொறுமையுடன் இருந்தான். அனாமேயேல் தேவன் முன்னுரைத்தபடியே எரேமியாவிடம் வந்து கெஞ்சினான். எரேமியாவோ, அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன் (வச.8) என்கிறார்.

பொறுமையுடனிருந்தால் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் கடந்து, வாக்களிக்கப்பட்டதற்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ளலாம். அவரில் சார்ந்து, தற்போது முடியாது எனக் கருதுபவைகளை முடித்துக் கொடுக்கும்வரை பொறுமையுடனிருக்க வேண்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் அவருடைய வேளையில், அவருடைய சித்தத்தின்படி தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றி முடிப்பார். தேவனில் காத்திருப்போம். இதனால் நாம் பலத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் தவிர்க்கமுடியும்.