June

யூன் 11

யூன் 11

…. நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும். உம்மை நம்பியிருக்கிறேன் (சங்.25:20).

கிறிஸ்தவனுக்கு விரோதிகள் அதிகம். கொடிய வார்த்தைகளைக் கூறி அவனை வேதனைப்படுத்துகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல. நமது அயலார். நமக்கு அறிமுகமானோர். பாவத்தை விரும்பி இயேசுவின் நாமத்தைத் தரித்திருப்போரை வெறுப்பவர், நம் குடும்பத்தில் உள்ள இரட்சிக்கப்படாதவர்கள் முதலியோர்தான். இதை அனுபவித்த தாவீது தேவனை நோக்கி, என் சத்துருக்களைப் பாரும். அவர்கள் பெருகியிருந்து, உக்கிர பகையாய் என்னைப் பகைக்கிறார்கள் (சங்.25:19) என்று முறையிடுகிறான்.

பன்யன் எழுதிய மோட்சப் பிரயாணத்தில் அந்தப் பயணி தன் பயணத்தின்போது அப்பொல்லியோன் என்பவனைச் சந்திக்கிறான். அவன் சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டார் என்று குற்றம்சாட்டி நிந்திக்கிறான். ஆனால் இயேசுவின் வீரரான கிறிஸ்தியான் தம்முடைய பிள்ளைகள் முடிவுவரை தன்னைப் பற்றிக்கொண்டு, தன்னிடத்தில் அன்பு கூருகிறார்களா இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகவே அவர் மவுனமாய் இருக்கிறார் எனக் கூறுகிறான். இப்படிப்பட்ட உறுதியுடன் இருந்தால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் எதிர்ப்புகளைச் சமாளித்து பெருமூச்சும் கதறலும் நிறைந்த சூழ்நிலையிலும், வெற்றிகொள்ள முடியும்.

துயரங்கள் பெருகி, பலமுள்ள விரோதிகள் பெருகி சூழந்து கொண்டு நெருக்குகையில் தாவீதைப்போன்று நாமும் பொறுமையுடன் காத்திருப்போம். என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது வச.15). தொடர்ந்து ஜெபிப்போம் (என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும் வச.16). தேவன் பேரில் நம்பிக்கை கொண்டிருப்போமாகில், நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. நாமும்கூட உத்தமமும், நேர்மையும் நம்மைக் காப்பதை (வச.21) உணரமுடியும்.