June

யூன் 7

யூன் 7

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:5-6).

இவ்வசனத்தில் “உன்” என்கிற சொல் நான்கு முறை வந்திருப்பதைச் சற்றுக் கவனியுங்கள். வேதாகமம் உனக்கு வழி காட்டும் நூல் என்பதற்கு இதுதான் சிறந்த சான்று. இவ்வசனம் நாம் செல்லவேண்டிய வழி இதுவெனத் தெளிவாகக் கூறுகிறது.

நாம் முழு இருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அரைகுறையான, மாறுபாடான இருதயம் வேதனையையும், பயத்தையும் கொடுக்கும். ஆகவேதான் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று வேதம் நமக்குக் கூறியுள்ளது.

நாம் நமது சுயபுத்தியின்மேல் சாயாதிருக்கவேண்டும். எங்கும் நிறைந்துள்ள தேவன் எல்லாம் அறிந்தவர். அவர் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு நமக்குப் போதித்து உணர்த்துகிறார். அவர் சித்தம் செய்ய நம்மை ஏவுகிறார். அவிசுவாசம் என்பது நமது அறிவினால் ஏற்படும் ஒன்று என்றால் மிகையாகாது. தேவனுடைய வழிநடத்துதலும், அவர் நமது ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதும், நமது விசுவாசமும் காரணமற்றதல்ல. ஆயினும் இவை யாவும் நமது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என உணரவேண்டும்.

உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துக்கொள். ஒவ்வொரு செய்கையிலும் ஆண்டவருக்கு முதலிடம் கொடு என்பதுதான் இதன் பொருள். தடைகள் பல ஏற்படுவது அவரது சித்தத்திற்கு முரணானவை என்று வெளிப்படையாகக் காண்பிக்கிறது. நாம் முழு இருதயத்தோடும் அவரில் நம்பிக்கை வைப்போமாகில் அவரை நமது ஆண்டவராகக் கொண்டு செயல்ப்படுவோம் என்பது நிச்சயம்.

அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். ஆம், நி;ச்சயமாக! நம்பிக்கையுடன் நம்மிடம் விளக்கம் கேட்கும் குழந்தைக்கு நாம் அறிந்தவற்றை விட்டு விலகி தவறான வழியில் இட்டுச் செல்வோமா? மாட்டோம். நிச்சயமாக அவர் நம்மை வழி நடத்தவார். நமக்கு முன்பாக திறந்த வாசலை வைப்பார். வசனத்தின்மூலம் வழிநடத்துவார். சில வேளைகளில் மவுனத்தின் மூலமாயும் வழிநடத்துவார். நாம் நம் கடமையைச் செய்தால், அதாவது அவரில் நம்பிக்கை வைத்து, கீழ்ப்படிந்தால் அவர் தமது பங்கை நிறைவேற்றுவார்.