June

யூன் 4

யூன் 4

….. உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள் (சங்.22:5).

தோல்வி, துக்கம், துன்பம், இழிவு, இழப்பு போன்றவற்றை எளிதாகச் சகித்துக்கொள்ள முடியுமா?

இருள் சூழ்ந்து, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் வேளையில் ஆண்டவரைப் பார்த்து, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக் கெட்காமலிருக்க முடிந்ததா? இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில்தான் கல்வாரி சிலுவையில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தொங்கிக்கொண்டிருந்தார். அவரைப் போன்று நாமும் அவ்வித சரீர வேதனைகள் அனுபவிக்காவிடினும், அதைப்போன்ற சூழ்நிலைகளுக்குள் சென்று வருகிறோம். மற்றவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது பாடும் வேளையில் நாமோ துன்பத்தில் சிக்கித் தவிக்கிறோம்! ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட தாவீது உம்மை நம்பி வெட்கப்பட்டு போதிருந்தார்கள் என்கிறார். பொல்லாத மனுஷர் எழும்பி எல்லாவற்றையும் வென்று வரும் வேளையில் தேவன் மவுனமாயிருப்பதாகத் தோன்றுகிறது. இதே நிலையில்தான் நமது இரட்சகரும் இருந்தார். நம்மை நம்புவது தவறு. ஏனெனில் நானோ ஒரு புழு. மனுஷனல்ல. மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதுதான் நம் நிலைமை (சங்.22:6).

கெத்சமனே தோட்டத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டது. தன் நண்பர்களாலும், சீடர்களாலும் கைவிடப்பட்டது, சிலுவைப் பாடுகள் இவை யாவும் ஆண்டவர் இயேசுவின் உள்ளத்தில் ஆழமாகப் பாய்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்முடைய இரட்சிப்பிற்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் யாவற்றையும் வென்றார். அவருடைய அடிச்சுவட்டில் நடக்க நாம் வெட்கப்படாதிருப்போமாக. அவருடைய பாடுகளில் பங்கு பெறுவோம். அவரில் நம்பிக்கை வைப்போம். தம்மை நம்பும் ஒவ்வொருவருக்கும் தேவன் ஆசீர்வாதமளிக்க ஆயத்தமாயுள்ளார்.