June

யூன் 3

யூன் 3

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் (சங்.128:1).

தேவ பயமற்ற பொல்லாத இந்த உலகில் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் தைரியத்தை இழக்காமல் 128ம் சங்கீதத்தைப் படித்து, கிறிஸ்தவ தகப்பன்மார்களுக்கும், தாய்மார்களுக்கும் தங்கள் பிள்ளைகள்மூலம் வரும் அசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கென குடும்ப வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தையறிந்து அதை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை ஸ்தாபிக்க தேவையானவற்றை இன்றைய வசனம் நமக்குக் கூறுகிறது. கர்த்தருக்குப் பயந்து அவர் வழியில் நடக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் 2, 3ம் வசனங்களில் தகப்பன், தாய் பிள்ளைகளுக்கென கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை அடையமுடியும்.

கர்த்தருக்குப் யபப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மெய்யாகவே தேவனுக்குப் பயந்து, அவரை நன்கு அறிந்து, அவரில் நம்பிக்கை வைப்போர் சர்வ வல்லவரைச் சார்ந்திருப்பதின் ஆசீர்வாதத்தைப் பெறமுடியும். தேவனுக்குப் பயந்த மனிதனாக ஆபிரகாமைக் காண்கிறோம். அவருக்குப் பயந்து நடந்த பெண்ணாக அன்னாளைக் காண்கிறோம். தேவன் ஆபிரகாமைப் பற்றி அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும், நீங்கள் நீதியையும், நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவங்கள் என்று கட்டளையிடுவான் எனக் கூறினார் (ஆதி.18:19). இது ஒரு விசுவாசமுள்ள குடும்பத் தலைவனைப்பற்றி, தகப்பனைப்பற்றி ஒப்பற்ற நற்சாட்சி! உன்னதமானவரை அவன் தன் நம்பிக்கையாகக் கொண்டிருந்ததால், உன்னதமானவர் அவனை நம்பினார்.

அன்னாளின் உள்ளத்தின் பாரத்தை உணர்ந்த தேவன் அவளுக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார். தேவபக்தியுள்ளவனாக, தேவனுக்குப் பயப்படுகிறவனாக சாமுவேல் வளர்க்கப்பட்டான். சீலோவிலிருந்த கர்த்தருடைய ஆலயத்திற்குச் சிறுவனாக அவளால் அழைத்துக்கொண்டுவரப்பட்ட அவன் அங்கேயே ஆயுள் முழுவதும் தேவனுடைய ஊழயிக்காரனாயிருந்தான். உண்மையுள்ள, ஜெபிக்கும் தாய் அவனை வளர்த்ததினால்தான் பிற்காலத்தில் சாமுவேல் ஒரு சிறந்த வல்லமையுள்ள ஊழியனாக நீண்ட காலம் நிலைத்து நிற்கமுடிந்தது என்பதைக் காண்கிறோம்.

பெற்றோரே! கர்த்தருடைய வழிகளில் உங்கள் பிள்ளைகளை நீங்கள் வளர்க்கிறீர்களா?