June

யூன் 2

யூன் 2

….. உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? (மாற்.8:17).

பிரச்சனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினவுடனே நாம் இனிமேல் அவரது கிருபையையும், வல்லமையையும் குறித்து சந்தேகப்படுவதில்லை என்று தீர்மானிப்பது இயல்பு. இன்னொரு இக்கட்டு வரும்போது இதை மறந்து விசுவாசியாமற்போய்விடுகிறோம். இது ஏன்?

இயேசுவின் சீடர்களுக்கும் இவ்விதமான அனுபவம் கிட்டிற்று. அவர்களை ஆண்டவர் கைவிட்டதேயில்லை. படகிலே அவர்களிடம் ஒரேயொரு அப்பம் இருந்ததினால், அந்தச் சந்தர்ப்பத்தில், பற்றாக்குறை அவர்களது விசுவாசத்தை நீக்கிவிட்டது. நீங்கள் யோசனைபண்ணுகிறனெத்ன? என்று அவர்களைக் கேட்ட ஆண்டவர் நம்மைப் பார்த்தும் இதே கேள்வியைக் கேட்கிறார்.

உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் யோசிக்கிறீர்களா? தேவையானவற்றைக் கொடாதபடியால் அவருக்கு உன் மீது அக்கறையில்லை என்று கருதுகிறாயா? அல்லது அவரிடம் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதா? நீடித்த பஞ்ச காலத்தில் அவர் எலியாவையும், சாறிபாத் விதவையையும் போஷிக்காமல் விட்டுவிட்டாரா? இல்லையே!

உங்களுக்குக் கண்களிலிருந்தும் காணாதிருக்கிறீர்களா? எனக் கேட்டார். சீடர்கள் யாவரும் தெளிவான கண் பார்வையுடையவர்கள். அவர்களால் ஒரேயொரு அப்பத்தை மட்டுமே காணமுடிந்தது. தேவனுடைய பெரிதான அன்பைக் கண்டு உணரமுடியவில்லை. எலிசாவின் வேலைக்காரன் தன்னைச் சுற்றிலும் இருக்கிற சீரியரின் படை வீரரைத்தான் கண்டான். அதேபோன்றுதான் சீடர்களும் இருந்தனர். தேவன் அவனது கண்களைத் திறந்ததும் மலை முழுவதும் தூதர்படையால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். (2.இராஜா.6:15-17). நமக்கு கண்களிலிருந்தும் காணாதவர்களாயிருக்கிறோமா?

நம் கையிருப்பும், பலமும் குறையும்போது நாம் கவலைப்பட்டு பயப்படுகிறோம். யோசனையில் ஆழ்ந்துவிடுகிறோம். தேவன் நம்மோடிருக்கிறார். அவர் நம்மைக் கைவிடுவதுமில்லை. விட்டு விலகுவதுமில்லை. சோதனை வேளையில்தான் தேவனுடைய உதவும் கரத்தை உணரமுடிகிறது. உணவுப் பற்றாக்குறையில் உயரேயிருந்து ஆசீர்வாதத்தைப் பொழிகிறார். ஆகவே நாம் சிந்தித்துக் கலங்கவேண்டியதில்லை.