July

யூலை 28

யூலை 28

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்.5:4).

நூற்றாண்டு காலங்களாக எதிர்பாத்திருந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆவியானவரால் எவப்பட்ட எசாயா, துக்கம் நிறைந்தவராகவும், பாடு அனுபவிக்கிறவருமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். நமது ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரது தாய் கணவனை இழந்த கைம்பெண்ணாகவிருந்தாள். தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் நிலைமையையும், தலைவனைப் பறிகொடுத்து பரிதபிக்கும் குடும்பங்களின் நிலையினையும் இளைஞனாக இருந்த இயேசு நன்கு அறிந்தவர். உன்னைக் குறித்தும் அறிந்திருக்கிறார்.

இவரது வாழ்வில் கண்ட துக்ககரமான சம்பவங்கள்தான் எத்தனை? நாசரேத்தூரில் வீடுகளில் நடந்த பரிதாப சம்பவங்களைக் கண்டார். சிறுவனாக இருந்தபோது இவரோடு விளையாடினவர்கள் சிலர் வியாதியில் இறந்துபோயிருந்தனர். ஊழிய காலத்தில் அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகுகிறார். நாயினூரில் விதவை ஒருத்தி தன் மகனைப் பறிகொடுத்து வேதனைப்பட்டுக் கதறினதையும், தன் உறவினர் யோவான்ஸ்நானகன் கொடுங்கோலனால் கொல்லப்பட்டதையும் கண்டார். அவரை ஏற்றுக்கொள்ளாமல் அவரது கிருபையைத் தள்ளிப்போட்ட உள்ளங்களையும், அவரது இரக்கத்தையும், நற்கிரியைகளையும் பரிகாசம் செய்த மக்களையும் பார்த்தார். நாசரேத்தூரில் சிறுவனாக வாழ்ந்த காலமுதல் கல்வாரிச் சிலுவையில் முழு மனிதனாக சாகும்வரையில் அவர் மெய்யாகவே துக்கம் நிநை;தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார்.

தம்முடைய அனுபவத்தின் கசப்பின் நடுவே தோன்றும் இனிமையையும், கண்ணீரின் நடுவே தோன்றும் களிப்பையும் கண்டவர் கூறுகிறார். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள். ஆம், இரட்சகர் இயேசுவின் இளகிய உள்ளத்தால் ஆறுதலடைவோம்!