July

யூலை 22

யூலை 22

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங்.34:4).

தேவனை நம்புகிறவர்கள் பயப்பட வேண்டியதில்லை. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். (சங்.34:4) என்று தாவீது சாட்சி கொடுக்கிறார். காலங்கள் தோறும் ஏன்? இன்றும்கூட எல்லாவற்றையும் நாசமாக்குவது பயம்தான். புற்றுநோய், மாரடைப்பு போன்றவற்றைவிட பயம் மிகவும் கொடிய வியாதி. இவ்வியாதிகளுக்குக் காரணமாயிருப்பதும், நமது இக்கட்டுகளுக்கு அடிப்படையாக இருப்பதுவும் பயமே!

இந்தப் பயங்களிலிருந்து விடுதலையடைவது எப்படி? தாவீது கர்த்தரைத் தேடினான். ஏசாயா தான் தேவனிடம் கேட்டதைக் கூறுகிறான். பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் (ஏசா.41:10).

பலப்படுத்தி, சகாயம் பண்ணுவார்! ஏனெனில் நம் எதிரிகள் நம்மை நெருக்குகிறார்கள். தொடர்ந்து ஏசாயா கூறுகிறார்: இதோ உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள். உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற் போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய். உன்னோடே யுத்தம் பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள் (ஏசா.41:11-12).

அவர்கள் ஒன்றுமில்லாமற் போய்விட்டனர். அவர்கள் இல்பொருளாகிவிட்டனர். ஆகவே நீ அவர்களைப் பார்த்துப் பயப்படாதே. இல்பொருளைக் கண்டு பயப்படுவது யார்?