July

யூலை 21

யூலை 21

தானியேலே, பயப்படாதே! நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது. உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன் (தானி.10:12).

வேதாகமம் முழுவதிலும் தேவன் நம்முடைய பிள்ளைகளிடத்து காட்டும் அன்பைக் காணமுடிகிறது. ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாக இருந்தான். மோசே உன்னதமானவரோடு முகமுகமாய்ப் பேசினான். தேவனால் அதிகம் நேசிக்கப்பட்ட மக்களுக்குள் தானியேலும் ஒருவனாக இருந்தான் (தானி.10:19).

மாசற்ற தேவனுடைய ஊழியக்காரனாகிய தானியேல் மூன்று வாரங்களாக தன்னைத் தாழ்த்தி, பாரத்தோடும், உண்மையோடும், துக்கத்தோடும் ஜெபித்தான். முதலில் பதில் ஏதும் கிட்டுவதாகத் தெரியவில்லை. மூன்று வாரங்களுக்குப் பின்பு விளக்கம் கூறுவதற்கென தேவதூதன் அனுப்பப்பட்டான். தானியேல் ஜெபிக்க ஆரம்பித்த முதல் நாளிலேயே அவனது ஜெபம் கேட்கப்பட்டது. வான மண்டலத்தில், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும் அவனுக்கென போரிட வேண்டியிருந்தபடியால், தாமதமாகப் பதில் கிடைத்தது (வச.13). இதன்மூலம் நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்தைப்பற்றி நாம் தெளிவாகக் கண்டுகொள்ள முடிகிறது. தேவனையும், மனிதனையும் பகைப்பதற்கென்று பிசாசுகள் நிறைந்த ஒரு முழு உலகமே இருக்கிறது. ஆகவேதான் விசுவாசிகள் யாவரும் பிசாசினுடைய தந்திரங்களை எதிர்த்துப் போரிடும்படிக்காக தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று போதிக்கப்படுகின்றனர். (எபேசி.6:11-18).

கிறிஸ்தவனுடைய ஜெபத்திற்குக் கிடைக்கும் தாமதமான பதிலுக்குத் தேவனுடைய கவலையீனம் காரணமல்ல. தேவன் நம்மைக் குறித்து அக்கறை கொண்டுள்ளார். நாம் ஜெபத்தில் தரித்திருக்கவேண்டும். வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபேசி.10:36). பயப்படவேண்டாம், உங்கள் ஜெபத்திற்குப் பதில் கிடைத்துவிட்டது.