July

யூலை 14

யூலை 14

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன ? (மத்.6:28)

போதுமென்ற மனது வேண்டும் என்பதையே போதகர் இயேசு அதிகமாக வலியுறுத்திக் கூறியுள்ளார். தேவன் படைத்த யாவற்றிலும், சிறியவைகளான பூக்களையும், பறவைகளையும்பற்றி அவர் அதிக கரிசனை எடுத்துக்கொள்ளும்போது தம் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனைக் குறித்து அவருக்கு அக்கறையில்லாமல் போய்விடுமா என்று கூறி பிதாவின் அன்பை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

காட்டுப் புஷ்பங்கள் தேவனால் படைக்கப்பட்ட பூமியில் வேரூன்றித் தங்களுக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்தும், சூரிய வெளிச்சத்திலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன. தாங்கள் காட்டுப்புஷ்பங்களாகவே இருக்க விரும்புகின்றனவேயன்றி அவை அதைக்காட்டிலும் வேறுபட்டவைகளாகக் காட்டிக்கொள்ள உழைக்கிறதுமில்லை. அவைகள் நூற்கிறதுமில்லை. வேஷமான வாழ்வு உள்ளான வேதனையை அதிகரிக்கும். நாம் நமக்களிக்கப்பட்ட இடத்தில், நாம் இருக்கும் விதமாகவே இருப்போம். நமக்கு இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழுவோம்.

நமது இராஜா மலரினும் மெல்லிய உள்ளம் கொண்டவர். காட்டுப் பூச்செடிகள் பூமியில் வேரூன்றியிருப்பினும் அதன் பூக்கள் வானத்தை நோக்கியே இருக்கின்றன. பறவைகள் தங்களுக்குக் கிடைத்ததைப் பெற்று மகிழ்ச்சியடைகின்றன. தங்களுக்குப் படியளக்கும் தேவைனத் தினமும் காலையில் தங்கள் கீச்சுக்குரலில் பாடித் துதிக்கின்றன. இதைப்போன்றே நாமும் கவலையற்றவர்களாக வாழவேண்டும் என நமது ஆண்டவர் விரும்புகிறார். இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும். முறுமுறுக்காமல், முகமலர்ச்சியுடனும், சோர்ந்துவிடாமல் அவருக்கு துதி செலுத்தியும் வாழுவோமாகில் மனநிறைவு கிட்டும். கவலையின்றி வாழலாம்.

காட்டுப் பூக்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் படைத்த தேவன் நம்மையும் படைத்தார். உன்னதமானவரின் பிள்ளைகளாகிய நாம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்!