July

யூலை 11

யூலை 11

அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டு,…. நிறைவேற்றினீர் (நெகே.9:8).

தேவனுடைய சிநேகிதன் என்கிற பெயரைக் காட்டிலும் ஆபிரகாமுக்கு வேறு சிறந்த பட்டம் தேவையா? (யாக்.2:23). தேவனுடைய ஐக்கியம் தேவை என்று உணர்ந்து வரும் எந்த மனிதனையும் அவர் தனது சிநேகிதனாக ஏற்றுக்கொள்வார் என்று அவனுக்குப் போதித்தவர் யார்? கல்தேயர் தேசத்து ஊர் பட்டணத்தைச் சேர்ந்த அந்த மனிதன் இவ்வளவு பெரிய சிறப்பைப் பெற காரணம் யாது?

தேவன் அவன் இருதயத்தை உண்மையுள்ளதாகக் கண்டார். எப்படியெனில் தன் இனத்தாரையும், சுற்றத்தாரையும் விட்டு விட்டு தான் முன்பின் அறியாத நாட்டிற்குத் தேவன் தன்னை நடத்திச் சென்றபோது புறப்பட்டுச் சென்றான். அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார் என்று விசுவாசித்தான், ஆதியந்தமில்லாத தேவனிடத்தில் உண்மையுள்ளவனாயிருந்தான். அவரிட்ட கட்டளைகட்கு கீழ்ப்படிந்தான். மோரியா மலையில்மீது ஈசாக்கைப் பலியிட ஒப்புக்கொண்டதினால் தன் கீழ்ப்படிதலை முழுவதுமாக வெளிப்படுத்தினான். அதிகமான சோதனைகளிலும் அவன் தன் சிநேகிதரை அதிகமாக நம்பி அவரையே சார்ந்திருக்கும்படியினால் அவன், தேவனுடைய சிநேகிதன் என்றும், விசுவாசிகளின் தகப்பன் என்றும் சிறப்பான பட்டங்களைப் பெற்றான்.

நாமும்கூட உண்மையுள்ளவர்களாயிருந்து சந்தேகமின்றி நம்முடைய பரலோக வழிகாட்டியைப் பின்பற்றிச் செல்வோமாக. அவர் நம்மை அறியாத இடத்திற்கு நடத்திச் சென்றாலும் கீழ்ப்படிய வேண்டும். அவரால் கூடாதென நாம் கருதும் காரியங்களிலும் விசுவாசத்துடன் இருக்கிறோமா? உண்மையுள்ள இருதயத்திற்குத் தேவன் செய்யும் காரியங்களுக்கு எல்லையே இல்லை. ஆகவே உண்மையுடனிருந்தால் தேவனுக்குச் சிநேகிதனாக வாழமுடியும்.