July

யூலை 6

யூலை 6

நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள் (ஏசா.45:17).

இஸ்ரவேலர் உலகம் முழுவதிலும் சிதறடிக்கப்பட்ட பின்பு, அநேக வருடங்களுக்குப்பின் மீண்டும் தங்கள் இராஜ்ய த்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டு, அரசாட்சி செய்வார்கள் என்று பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் அநேக தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ளன. நாம் கீழ்க்கண்ட தீர்க்கதரிசனங்களை நினைவு கூரவேண்டும். உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதறடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்ப சேர்த்துக்கொள்ளுவார் (உபா.30:3). அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களைத் அங்கீகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது. மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ? (ரோ.11:15).

தேவனுடைய பிள்ளைகள் எங்கெல்லாம் சிதறடிக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் நூற்றாண்டுகளாக அவமானத்தை அனுபவித்து வேதனைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர். தேவனுடைய காரியங்கள் யாவும் மெதுவாகவே நடப்பதுபோல் தோன்றும். கடந்தகால நிகழ்ச்சிகளைச் சற்று திரும்பிப் பார்ப்போமாயின் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்களித்த யாவற்றையும் நிறைவேற்றிக்கொண்டே வருகிறார் என்பதைக் கண்டுகொள்ளலாம். உலகம் முன்னேற்றம் அடைய அடைய யூதர்களுக்குத் துன்பங்களும், தொல்லைகளும் அதிகரிக்கும் என்று வேதம் கூறியுள்ளது. ஆயினும் அவர் திரும்ப வரும் நாளிலே அவர்களுடைய எதிரிகளை நிர்மூலமாக்குவார். அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்ப்பார்கள் (சக.12:10) என அவர் வாக்களித்துள்ளார். ஆகவே அவர்கள், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும், கலங்காமலும் இருப்பார்கள் என்பது உண்மையாகவே நிறைவேறும்.