July

யூலை 3

யூலை 3

…. தேனைச் சாப்பிடு, அது நல்லது…. அப்படியே ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும் (நீதி.24:13-14).

நம் வாழ்க்கையை அறிவோடும், ஆற்றலோடும் நடத்துவதற்கும், நம்மை ஒழுக்கமுள்ளவர்களாய்க் காட்டுவதற்கும் ஞானம் தேவை. முன் யோசனையோடும், ஆலோசனையோடும், கவனத்தோடும், ஜாக்கிரதையோடும், நிதானத்தோடும் காரியங்களைச் செய்வதற்கு ஞானம் உதவுகிறது.

ஞானம் எங்கேயிருந்து வரும்?… அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும்…. இருக்கிறது? (யோபு 28:20-21) என்று யோபு கூறுகிறார். இக்கேள்விக்குப் பதிலாக, இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம். பொல்லாப்பைவிட்டு விலகுவதே புத்தி (28:28) என்றும் அவரே கூறியுள்ளார். ஆண்டவருக்குப் பயப்படுதல் என்றால் என்ன? பாவத்தில் விழாமல், அவருக்குரிய கனத்தைச் செலுத்தி, நம்பிக்கை வைத்து, உன்னதமானவரை உறுதியாக பற்றிக்கொள்வதுதான் அவருக்குப் பயப்படுவதேயன்றி நடுநடுங்குவதல்ல. இதையே சங்கீதக்காரன், சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார் (சங்.25:9) எனக் கூறுகிறான். இதன் மூலம் ஞானமாய் நடந்துகொள்ள நாம் செய்யவேண்டியவற்றை அறிந்துகொள்கிறோம். ஞானமுள்ளவர்கள் நல்லொழுக்கமுடையவர்களாயும் நடந்து கொள்வார்கள். ஞானமுள்ளவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன் (யாக்.3:13) என்று யாக்கோபு கூறுகிறான்.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். (யாக்.1:5). தேவன் நமக்குத் தாராளமாய்க் கொடுக்கிறவர். ஆகவே நாம் அவரிடம் தாழ்மையுள்ள இருதயத்தோடும், உறுதியான விசுவாசத்தோடும் அவருடைய உதவியை நாடவேண்டும். முதலில் ஞானம் நமக்குத் தேனைப்போன்று இனிமையாக இருக்கும். பின்பு யாவரும் நலமானதாயும், எல்லாவற்றிற்கும் மேலானதாயும் இருக்கும். ஆகவே, ஞானத்தைத் தேடு!