January

ஐனவரி 9

பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் (ஏசா.58:0-11).

தேவ பக்தியுள்ள போதகர் ஒருவர் தீராத பிரச்சனை ஒன்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, தேவனுடைய வழிநடத்துதலை அறிய அதிக தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். பல காரியங்களில் அவர் தேவசித்தம் இன்னதென தெளிவாகக் கண்டுகொண்டவர். இந்த இக்கட்டான வேளையில் தேவசித்தம் இன்னதென அறிய ஒருநாள் முழுவதும் உபவாசத்திலும், ஜெபத்திலும் செலவிட்டார். ஆனாலும் எவ்விதமான பதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை.

கடைசியாக அவர் தன் சபையைச் சேர்ந்த ஓர் ஏழை விதவை நோய்வாய்ப்பட்டிருந்ததைக் கேள்விப்பட்டார். போதகரை வந்து ஜெபிக்கும்படி இந்த அம்மாள் சொல்லியனுப்பினார்கள். ஆகவே, அவர் தன் முயற்சியை விட்டுவிட்டு அந்த அம்மாளுக்கென ஜெபிக்கும்படி சென்றார். அதன் பின்பு அவர் வேதம் வாசித்து ஜெபித்த அந்த ஐந்து நிமிட நேரத்திற்குள் நான் தேவனுடைய தெளிவான, சரியான ஆலோசனையைப் பெற்றுக்கொண்டேன் எனக் கூறினார்.

தேவனுடைய வழி நடத்துதலுக்கென ஆலோசனை பெற காத்திருப்பது முக்கியமானது. தேவசித்தம் அறிய உபவாசமும், ஜெபமும் உதவும். சில நேரங்களில் நாம் நமது உணர்வுகளுக்கு முதன்மையான இடமளிப்பதை விட்டுவிட்டு, திக்கற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதுதான் தேவனுடைய தீர்மானமாக இருக்கிறது.

ஏசாயா 58ம் அதிகாரம் இளகிய மனதுதான் உண்மையான உபவாசம் எனக்கூறுகிறது. அன்றாட வாழ்வில் தேவையானவர்களுக்கு உதவி செய்யாமல் தேவைனப்பற்றி தியானிப்பது வெளிவேஷம். நாம் துயரப்படுவோருக்கும், நெருக்கப்படுவோருக்கும் உதவி செய்யவேண்டும். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு, சீக்கிரத்தில் துளிர்ந்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும். கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும் (ஏசா.58:8). நம் இக்கட்டிலிருந்து விடுதலையடைய சிறந்த வழி, பிறருடைய தேவையை உணர்ந்து உதவி செய்யவேண்டும்.