January

ஐனவரி 7

மறைபொருள்களைவெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் (தானி.2:28).

மனிதனுடைய அறிவும் ஆற்றலும் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டது. ஆனால் தேவனுடைய ஆற்றலோ அளவற்றது. தேவனை நம்புகிற பிள்ளைகளுக்கோ எல்லா புத்திக்கு மேலான தேவசமாதானம் உண்டு (பிலி.4:7). கிறிஸ்துவின் அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக (எபேசி.3:19) இருப்போம். தேவனுடைய கிருபை, பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை, நம்மை விட்டு விலக்கினார். அவரது மன்னிக்கும் சிந்தை எவ்வளவு பெரிது! (சங்.103:11-12). அவரது வழிகளைப்பற்றி பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும் உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசா.55:9) எனக் கூறுகிறார். இந்த அளவற்ற தூரத்தை யாரால் அளக்க முடியும்?

நேபுகாத்நேச்சார் தன் கல்தேய சாம்ராஜ்யத்திலுள்ள எல்லா ஞானிகளையும் அழைப்பித்து தன் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் தெரிவிக்கும்படி கேட்டான். எவராலும் பதிலுரைக்க இயலவில்லை. இதைப் புரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும் தன்னால் முடியாது என தானியேல் உணர்ந்தான். மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்தில் இருக்கிற தேவன் உண்டென அவன் நம்பினான். நாம் தேடினாலும் ஆராய்ந்தாலும் கண்டுகொள்ள இயலாத யாவற்றையும் தேவன் நாம் அறியும்படி செய்கிறார். இதையே நாம் வெளிப்படுத்தல் எனக் கூறுகிறோம்.

நாம் அறியாமையில் உழல்வதை அவர் விரும்புவதில்லை. தம்முடைய விசேஷித்த வெளிப்பாட்டின்மூலம் வேதத்தில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். தன் பொதுவான வெளிப்பாடாகிய, தான் படைத்த உலகத்தைக் கொண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை யாவற்றின்மூலமும் நாம் அவரது வழிகளையும், அவரது கிரியைகளையும், அவரது இரட்சிப்பையும், அவரது நிலை நிறுத்தும் வல்லமையையும் கற்றுக்கொள்ளுகிறோம். தேவனுடைய மெய்யான வெளிப்படுத்துதலைப் புரிந்துகொள்ள, பயபக்தியும் தாழ்மையும் மிக மிக அவசியம்.

நம்மால் புரிந்து கொள்ள இயலாவற்றை அவர் நமக்கு நமது ஜெபத்திலும், தாழ்மையான நடக்கையிலும் தெளிவுபடுத்துவார். நாம் அறியாதவற்றை தேவன் நன்கறிவார். கற்றுக் கொள்ளவேண்டும். கற்றுக்கொண்டவற்றில் உண்மையாக இருக்கவேண்டும். இதுதான் நம் தலையாய கடமை.