January

ஐனவரி 5

… ஒருவன் என் பின்னே வர விரும்பினால்… (லூக்.9:23).

சீஷனாவதற்குச் சில ஒழுங்குகள் தேவை. ஒழுக்கமுள்ளவன் தான் சீஷன். தன்னுடைய அறியாமை, மூடநம்பிக்கை, பாவம் இவற்றோடு ஆண்டவரிடம் வந்து கற்றுக்கொள்பவன் அல்லது பயிற்சி பெறுபவன் தான் சீஷன். அவன் இரட்சகரிடம் வந்து மன்னிப்பையும், சத்தியத்தையும் பெற்றுக்கொண்டு, அவரிடம் கற்றுக்கொள்ளுகிறான். ஒழுக்கமில்லாதவன் அவரது சீஷனாக இருக்கமுடியாது. அவரது பெயரைச் சொல்லுகிற நாம் அந்த ஏழை நசரேயனுக்குப் பின்செல்ல வேண்டும். இரட்சிப்பு இல்லாமல் அவரது புத்திரராக இருக்க முடியாது. புத்திரனாக இல்லாமல் ஒழுக்கமுள்ள வாழ்வை நடத்த இயலாது.

தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுமென்பதற்கென்றே அவர் தம்முடைய பிள்ளைகளை ஒழுங்குபடுத்துகிறார். அவர் அவர்களுக்குப் போதித்து, பயிற்றுவித்து, மேன்மைப்படுத்தி, இனிமையாக்கி, பலப்படுத்தி, நிலைப்படுத்த விரும்புகிறார். அவர்களும் அவரைப்போல் இருதயத்தில் தாழ்மையும், எளிமையும் உள்ளவர்களாகி அவரை மேன்மைப்படுத்த வேண்டும். அவருடைய சொந்த ஜனமாகிய நமக்கு பின்வரும் ஆறுதல் தேவை. என் மகனே கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்து போகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் (எபி.12:5-6) என வேதம் கூறுகிறது. நமக்கு எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல், துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் (எபி.12:11).

குழப்பத்துடன், கண்ணீருடம் பரம குருவின் முன்பு ஒருவன் தாழ்மையாக முழங்காற்படியிடுகிறான். நம்முடைய ஆத்துமாக்களைக் குறித்து இரக்கமும் மெய்யான அன்பும் கொண்ட அவர், சீஷனுக்குத் தேவையான ஒழுக்கத்தைப் போதிக்கிறார். அவரது அன்பு எல்லாத் தடைகளையும் உடைத்தெறியும். நாமும் மெதுவாக, ஆண்டவராகிய இயேசுவே, எந்தக் கஷ்டத்திலும், எப்பேர்ப்பட்ட சிலுவையையும் எடுத்துக்கொண்டு, உம்முடைய சீஷனாக பின்பற்றும்படி செய்யும் என ஜெபிப்போம்.