January

ஐனவரி 13

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10)

ஆனாலும், என்ற வார்த்தை எவ்வளவு பெரிய மாறுதலைக் கொடுக்கிறது. யோபுவைப்போல நாமும் மிகுந்த கலவரமடைந்ததுண்டு. ஆனாலும் நாம் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஏனெனில், இதை அவர் அறிவார் என்று நாம் நம்புகிறோம். அதே வேளையில் ‘நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்” என்றும் பெருமூச்சுடன் கூறுகிறோம். நமக்கென வழியேதும் தெளிவாகத் தென்படவில்லை. நாம் அவர் கூறும் யாவற்றையும் செய்யு விரும்புகிறோம். ஆனால் அதற்குரிய வழிகளை நாம் அறியவில்லை. நாம் முழு மனதோடு, முழு பலத்தோடும் நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும். வேறு எவ்விதத்திலும் நாம் அவரது வழிநடத்துதலையும், வெற்றியையும் காண இயலாது. நாம் போகும் வழியை அவர் நன்கறிந்திருக்கிறார் என்ற நிச்சயம் நமக்கு உண்டு. ஆகவே நாம் தளராமல் முன்னேறிச் செல்லவேண்டும்.

நம்முடைய பாதை உணர்ச்சி வேகத்தில் செல்லக்கூடியதல்ல. அது விசுவாசப் பாதை என்பதையும் நாம் உணரவேண்டும். ‘நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்” (கலா.5:21) என வேதம் கூறுகிறது. இதில் அடிமேல் அடியெடுத்து வைத்து நடக்க தேவ ஆவியானவர் நமக்கு உதவுகிறார். ஏனெனில், அடுத்த அடியெடுத்து வைப்பது எங்கே என்று நாம் அறியாமல் இருப்பதால் அவரே நம்மை வழிநடத்துகிறார்.

குழம்பம் நிறைந்த வேளையில் தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. ஒவ்வொரு வேளையிலும் அவர் நம்மோடுள்ளார். யோபுவைப்போல நாம் அவரது பிரசன்னத்தை அறியாமலில்லை. ‘அவர் என்னைச் சோதித்பின் பொன்னாக விளங்குவேன்” என்று உறுதியுடன் கூறலாம். இன்னல்கள் இனிய பாடலாகவும், இருண்ட இரவு இன்பமான காலைப்பொழுதாகவும் விடியும்!

ஒவ்வொன்றிற்கும் பலன் உண்டு. நெருக்கத்தினாலும் பொறுமையினாலும் நாம் புடமிடப்படுகிறோம். ‘எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்” (யோபு 23:14) என்று நாம் உறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் கூறமுடியும்.