February

பெப்ரவரி 27

பெப்ரவரி 27

மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு (யோசு.1:7)

அன்று இராட்சத மக்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழுப்பினதுபோல இன்றும் பலர் இருக்கின்றனர். ஆகவே, பலங்கொண்டு திடமனதாயிரு என்று யோசுவாவுக்குக் கூறப்பட்ட அதே வார்த்தைகள் நமக்கும் தேவைப்படுகின்றன.

தேவனுக்குப் பயந்திரு. இராட்சதருக்குப் பயப்பட வேண்டாம். உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பார். உயர்ந்த கோட்டை மதிற்சுவரைப் பார்க்காதே. வாக்குத்தத்தங்களைப் பார். முடியாதது ஏதுமில்லை. தைரியமுள்ள யோசுவாவும், காலேபும், நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம். நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றனர். (எண்.13:30). துணிவிருந்தால் தொடர்ந்து முன்னேறிச் செல்லலாம். உள்ளத்தில் பயமோ, குழப்பமோ இருக்காது. நாம் நம்பிக்கை இழந்தவர்களாயிருப்பின் நாமும்கூட அந்த மற்றப் பத்து வேவுகாரரைப்போல், அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது. அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் (எண்.13:31) என்றுதான் கூறுவோம். இருவர் மட்டுமே நம்மால் வெல்ல முடியும் என்று தைரியமாகக் கூறினார்கள். துணிவு எப்பொழுதும் தனித்து நிற்கும். அதற்குப் பலம் அதிகம். பெருங்கும்பலைப் பார்த்து பயப்படாதே. அவர்கள் கல்லெறிந்துவிடுவார்களே என்று திகைக்காதே (எண்.14:10) இப்படிப்பட்ட வார்த்தையில்தான் நமக்கு மிகுந்த தைரியம் உண்டாகிறது (எபி.13:5-6) உன்னோடுள்ள தேவனுடைய பிரசன்னத்தைக் கணக்கிடு. மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் பாராதே.

யோசுவாவைப்போன்று நாமும் கொடியவர் நிறைந்ததும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதுமான நாட்டை எதிர்நோக்கியுள்ளோம். தேவன் நம்மைப் பார்த்து, நீ பலங்கொண்டு திடமனதாயிரு என்கிறார். நாம் தேவனுக்கென துணிந்து செல்ல வேண்டும். சில வேளைகளில் வெளியேயிருந்து எதிரிகள் புறப்பட்டு வராமல் நமக்குள்ளேயே இருப்பார்கள் (யோசு.7). கடமை தவறாமை, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல், பாவத்திலிருந்து பிரிந்திருத்தல் போன்றவை நாம் துணிந்து முன்னேற உதவிபுரியும். இருப்பினும் துணிவோடு வல்லமை வேண்டும். துணிவும், வல்லமையும் சேர்ந்து செயல்படும் வேளையில் எதிரிகள் இராட்சதராக இருந்தாலும் எதிர்க்க இயலும்.