February

பெப்ரவரி 22

பெப்ரவரி 22

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புக்கு ஒளஷதமுமாகும் (நீதி16:24).

கடுமையான வார்த்தைகளால் எந்தவிதமான நன்மையம்கிட்டாது. இதனால் பல உறவுகள் முறிவடையும். பலருடைய வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.பிறரைப் பரியாசம் செய்யும்போது, நாம் எவரோடும் இணைந்து வாழமுடியாது. பிறரைப்புண்படுத்திப் பேசும் நமக்கு ஆசீர்வாதம் கிட்டுவது அரியதாயிருக்கிறது. பிறரை இழிவாகப்பேசுவதால் லாபம் ஏதும் கிட்டாது. நம் புத்தியீனத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம்.

இனிய சொற்களோ இதற்கு மாறானது. இனியசொற்களால் இரக்கத்தையும், தாழ்மையையும், கிருபையையும் வெளிப்படுத்துகிறோம். மெதுவானபிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும். கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும் (நீதி.15:1)என்று சாலோமோன் ஞானி எக்காலத்திற்கும் பொருந்தும்படி கூறி வைத்துள்ளார். இதையேமற்றொருவர், உன் வார்த்தைகளை மெதுவாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள். இன்னொருநாள்அவைகளின் பலனை நீ புசிப்பாய் எனக் கூறியுள்ளார்.

நம்முடைய வார்த்தைகளைப்பற்றி வேதத்தில்ஏராளமாய்க் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக்காக்கிறான். தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான் என்கிறதுநீதிமொழிகள் 13:3. உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுககளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள் என்று தாவீது (சங்.34:13) ஆலோசனை கூறுகிறான்.நமது இரட்சகர் இயேசு, இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் எனக் கூறியுள்ளார். இரக்கமுள்ளவார்த்தைகள் அன்பும், தாழ்மையுமுள்ள இருதயத்தை வெளிப்படுத்தும்.

குணசாலியான ஸ்தீரீயைப்பற்றி கூறும்போது அவள்,தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறதுஎன நீதிமொழிகள் 31:26ல் காண்கிறோம். கசப்பு நிறைந்த வார்த்தைகளைக் கொடியபாம்பின் நஞ்சுக்கு ஒப்பிடலாம். ஏன் அதைவிட கொடியது என்றும் கூறலாம். தேனைப்போன்றமதுரமான வார்த்தைகளால் இனிமையை உருவாக்க முடியும். இது நம் வாழ்விற்குத் தேவையானஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.