February

பெப்ரவரி 21

பெப்ரவரி 21

‘கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்” (சங்.81:16)

நமது தேவன் பேசாதவர் அல்ல. அவர் நம்மோடு பேசுவதற்கென எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டியது நமது கடமை. தேவன் நம்மோடு எவ்விதம் பேசுவார்? நமது சரீரக் காதுகளால் அவரது சத்தத்தைக் கேட்க முடியாது. அவரது மெல்லிய, அமர்ந்த சத்தத்தைப் பரிசுத்தஆவியானவரின் உதவியால் தேவ வார்த்தையின் மூலம் நமக்குக் கேட்கும்படி செய்கிறார். ஆவியானவர் நமக்கு வேதத்தைத் தெளிவுபடுத்தி, நம் வாழ்வில் அதன் பொருளை உணர்ந்து செயல்பட உதவுகிறது.

தேவன் தமது ஊழியர்கள் மூலமாயும் நம்முடன் பேசுகிறார். ஆவியானவர் ஏவும்போது அவர்கள் எவ்வித பயமுமின்றி தேவ செய்தியைக் கூறுவர். எடுத்துக்காட்டாக, சாமுவேல் தீர்க்கதரிசி சவுலைப் பார்த்து, கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், சர்வாங்க தகன பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும் ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம் (1சாமு 15:22) எனக்கூறியதைச் சற்று நினைத்துப் பாருங்கள். காலங்கள் தோறும் தேவன் நம்முடைய உள்ளங்களை ஆராயும்படிக்கு இதே கேள்வியைத்தான் நம்மிடம் கேட்டுக்கொண்டே வருகிறார்.

அன்றைய மக்களுக்குத் தேவன் கூறிய யாவும் இன்றைய மக்களுக்குப் பொருந்தும். நாம் அவருக்குச் செவிகொடுத்து, கவனமாக அவரது கட்டளைகளைக் கேட்டு, மறுப்புக் கூறாது கீழ்ப்படிந்து, அவரது வழியில் நடந்து அவரது சித்தத்திற்கு முழுவதுமாக ஒப்புவித்தால் நமது பகைவரை வென்று நாம் முன்னேறுவோம் (சங் 81:14,15). தேவன் நமக்கு யாவற்றையும் நிறைவாகக் கொடுப்பவர். நாம் விபரிக்கமுடியாத மகிழ்ச்சியைக் கொடுப்பவர்……… கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவார். தேவனுக்குக் காத்திருந்து அவரது சத்தத்திற்குச் செவிகொடுப்பவர்கள் எதிர்பாராதவையில் திருப்தியாவார்கள். கன்மலையிலிருந்து தேன் பெருக்கெடுத்து வரும் என்பதில் ஐயமில்லை!