April

ஏப்ரல் 29

ஏப்ரல் 29

ஆவியின் கனியோ….. விசுவாசம் (கலா.5:22)

விசுவாசம், உண்மை ஆகிய இவ்விரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்பவை. இங்கு அப்போஸ்தலன் ஆவியின் கனிகள் எனப் பட்டியல் போட்டு கிறிஸ்தவனின் புதிய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வும், சந்தோஷத்தின் ஆவியும் எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானமும், உபத்திரவத்தில் நீடிய பொறுமையும், கிறிஸ்துவில் இருந்ததைப்போன்ற தயவும், நற்குணமும், உண்மையான விசுவாசமும், இதனோடு கிட்டும் சாந்தமும், இச்சையடக்கமும் நம்மிடம் இருப்பதைப் பரிசுத்தஆவியானவர் எடுத்துக்காட்டுகிறார். விசுவாசத்தை உறுதிப்படுத்துவது மட்டுமின்றி, அவரைச் சார்ந்திருப்பவன் பெற்றுக்கொள்ள வேண்டிய குணங்களையும் இணைத்துக் கூறுகிறது.

தீத்து 2:10ல் விசுவாசம் என்பதற்கு எஜமானப் பக்தியாக மொழி பெயர்த்துள்ளனர். மாம்ச சுபாவமான வாழ்வில் ஆவியின் கனிகளைக் காண இயலாது. கனிதரும் மரத்திலிருந்து மாத்திரமே கனிகளை எதிர்பார்க்க இயலும். அதேபோன்று ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமே இக்கனிகளைக் கொடுக்க இயலும். சுபாவத்தின்படி நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவன், உண்மையற்றவன், விசுவாசமற்றவன், யாராயினும் அவனுக்குள் ஆவியானவர் வாசம்பண்ணுவராயின் அவன் உண்மையுள்ளவனாயும் மாற்றம் பெறுவான் என்பது உறுதி.

தேவன் உண்மையுள்ளவராயிருப்பதால் அவன் தேவனுக்கு முன்பும் அயலாரிடத்தும் உண்மையுள்ளவனாயிருப்பான். ஆவியின்மூலம் அவன் தேவனுடைய வழியை அவனுக்குள் பெற்றிருக்கிறானே! பிறரிடம் தவறான விசுவாசம் வைப்பது தேவனுக்கு விரோதமான பாவம். விசுவாசியான ஒருவன் கீழ்ப்படிதலுள்ள மகனாயும், ஆர்வமுள்ள மாணவனாயும், நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாயும், பொறுப்புள்ள பெற்றோராயும், சிறந்த குடிமகனாகவும் திகழவேண்டும். ஏனெனில், இதன்மூலம் அவன் கிறிஸ்தவன் எனப் பிறர் கண்டுகொள்ளட்டும்.