April

ஏப்ரல் 28

ஏப்ரல் 28

….. என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள் (ஆகாய் 2:5).

வேதப் புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப்போன்று நமக்கு உற்சாகமளிக்கக்கூடியதும், விசுவாசத்திற்குச் சவால் விடுவதும்போன்ற அநேக பகுதிகள் உண்டு. சோர்ந்துபோன நம்பிக்கையற்ற ஆத்துமாக்களிடையே தேவனுக்கென ஆகாய் ஊழியம் செய்தார். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதேயாவுக்கு ஒரு சிறு பகுதியினர் மட்டுமே திரும்பி வந்திருந்தனர். எஸ்றாவின் காலத்தில் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, எருசலேம் ஆலயத்தைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் அதற்குப் பின்பு பதினைந்து ஆண்டுகளாக அவ்வேலையில் எவ்விதமான முன்னேற்றமும் காட்டவில்லை. தங்கள் வீடுகள்தான் முதலில் கட்டப்படவேண்டுமென்று ஆர்வமெடுத்து அதற்கென முயற்சித்தனர்.

அப்பொழுதுதான் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான ஆகாய், உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும், கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை…. ஏன்? என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனிமித்தமே என்று எடுத்துரைத்தான் (ஆகாய் 1:5-9).

முதலாவது தேவனுடைய இராஜ்யத்தைத் தேடி தேவனுக்கென மக்கள் கீழ்ப்படிய ஆரம்பித்தவுடனே நீங்கள் திடன்கொள்ளுங்கள்… நான் உங்களுடனே இருக்கிறேன் என்று (ஆகாய் 2:4) தேவன் உறுதியளிக்கிறார். அவர்கள் எதிரிகளைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. பொருள்கள் இல்லையே என வருந்தவேண்டியதில்லை. ஏனெனில் தேவன் அவர்களோடுகூட இருப்பதுவே போதும்!

நாம் நம் கடமையில் தவறி முழு மனதோடும் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கும்போது நம்முடைய துன்பங்கள் அதிகரிக்கும். இதில் தோற்றுப்போவோம் என்று உணருவோம். அப்பொழுது தேவன் அகாய் மூலம் கூறியதுபோன்று நம்மைப் பார்த்தும், என் ஆவியானவரும், உங்கள் நடுவில் நிலை கொண்டிருப்பார், பயப்படாதேயுங்கள் (ஆகாய் 2:5) என உறுதியளிப்பார்!