April

ஏப்ரல் 27

ஏப்ரல் 27

…. நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார் (யோபு 23:9)

நாமோ ஒரு வரையறைக்குட்பட்டவர்கள். தேவனோ முடிவில்லாதவர். ஒருநாளில் என்ன நேரிடும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் காலைமுதல் இரவுவரை என்ன நடக்கும் என வேண்டிய காரியங்களையும், செல்ல வேண்டிய வழிகளையும் அறிய முற்படுகிறோம். இதன் முடிவு குழப்பமாகவும், இருண்டும் தோன்றுகிறது. வழி நடத்துதலுக்கென நாம் கூப்பிடும் சப்தம்தான் எதிரொலிக்கிறது.

நாம் செல்லவேண்டிய வழியைத் தேவன் அறிவார். அது இருண்ட பாதையாயினும் அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. இருளும் ஒளியும் அவருக்கு ஒரேமாதிரியாகத் தோன்றுகிறது. கஷ்டமான வழியாயினும் அவர் சோர்ந்து போவதில்லை, இருபத்திரண்டாம் மைலிலிலும் நம்மை நடத்துகிறார். வழியில் தனிமையை உணரலாம். ஆயினும் அவரது அன்பின் பிரசன்னம் நம்மோடு இருந்து வழி நடத்துகிறது என்பதைச் சில வேளைகளில் உணர்த்தவும் செய்கிறார், மறைக்கவும் செய்கிறார்.

ஒரு நாளில் அவர் நம்மை ஏன் இப்படியெல்லாம் நடத்தி வந்தார் என்பதை உணருவோம். வாழ்க்கைப் பாதை எப்பொழுதும் மாற்றமடைவதில்லை. ஆகவே நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து முன்னேறிச் செல்வோமாகில் நாமும் உள்ளான மாறுதலைக் கண்டடைவோம். நம்மோடுகூட வழிநடத்தும் தேவனுடைய உதவி நமக்கு இருப்பதினால் நாம் உற்சாகத்துடன் இலக்கை நோக்கித் தொடருவோம்.

எங்கே செல்வது, என்ன செய்வது என அறியாமல் இருட்டில் நடப்பதுபோல் தடவித் திரிகிறாயா? தேவன் உன்னோடு இருக்கிறார் என அறிந்து, அவர் உன்னை இருளிலே வழிநடத்தி, பிரகாசமான இடத்திற்கு அழைத்துச் செல்வார் என்று உறுதி பூண்டு முன்னேறிச் செல். சோர்ந்து உட்கார்ந்துவிடாதே!