April

ஏப்ரல் 25

ஏப்ரல் 25

….. இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்… (வெளி 21:5).

பரிசுத்த ஆவியானவர் நமக்காக இவ்வார்த்தைகளை எழுதி இவை சத்தியமும், உண்மையுமானவைகள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மெய்யாகவே மெய்யாகவே என்று நமது ஆண்டவரும் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளார் அல்லவா! நம்மை வியப்பில் ஆழ்த்தும்படியான செய்தி இங்கு என்ன கூறப்பட்டுள்ளது? புதிய எருசலேமில் தேவன் மனுஷரின் மத்தியில் வாசம்பண்ணுவார். அவர்களின் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (காலங்கள் தோறும் அவர் தம்முடைய பிள்ளைகளுக்கும், நமக்கும் இதைத்தானே செய்து வருகிறார்). அங்கு மரணமில்லை (அடக்க ஆராதனையும் கிடையாது), அங்கு துக்கமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமில்லை!

வேதனையில்லாத இடத்தில் குழந்தைகளாயுமில்லாமல், முதியோராயுமில்லாமல், இளமையுடன் வாழும் வாழ்க்கையில் தம் பிள்ளைகளைப் பற்றிய மன வேதனை இராது. ஏனெனில் முந்தினவைகள் ஒழிந்துபோயின (வெளி 21:4). வேதாகமம் நமக்குக் கூறும் இந்த இடத்தில் வேதனையின்றி, சமாதானத்துடன் வாழுவோமென்று அறிவோம். ஏனெனில் இதை ஜீவனுள்ள தேவன் நமக்கென வாக்களித்துள்ளார். இது கற்பனைக் கதையல்ல!

உண்மையும், சத்தியமுமுள்ள இந்த வார்த்தைகளைச் சொன்னவர் உண்மையுள்ள சாட்சியானவர் (வெளி 1:5). உண்மையும் சத்தியமுமுள்ளவர் என்னப்பட்டவர் (வெளி 19:11). அவர் நம்மைப் பார்த்து, ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான். நான் அவன் தேவனாயிருப்பேன். அவன் என் குமாரனாயிருப்பான் (வெளி 21:7) என்று கூறுகிறார்.