April

ஏப்ரல் 16

ஏப்ரல் 16

….. ஒருவன் என் பின்னே வரவிரும்பினால்…. (லூக்.9:23).

மனந்திரும்புதலின் அனுபவத்திற்குள் வந்தவன்தான் இயேசுவின் சீடனாக முடியும். தேதவனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணிக்கொண்டிருந்த பழைய விழுந்துபோன நிலையினை, உணர்ந்து, மனஸ்தாப்பப்பட்டு இரட்சகரண்டை வந்தோம். நம் மனம் விரும்பிய வாழ்வில் அவனவன் தன் தன் வழியிலே போனோம் (ஏசா.53:6). அதனால் எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானோம் (ரோ.3:23). ஆகவே வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின் கீழ் அடைத்துப்போட்டது (கலா.3:22).

கட்டுப்பாட்டுக்குள் வருவது யாருக்கும் சற்று கடினமே. நம் பாவங்களை ஒப்புக்கொள்வதற்கென தாழ்மையுள்ள உள்ளமே நமக்கு அமைவது கடினம். ஆனால் கல்வாரியில் பாவ நிவாரணத்திற்கென செலுத்தப்பட்ட பலியினை நோக்கும்போது உள்ளம் நிச்சயமாக உடைந்து ஒப்புக்கொள்ளும் என்பது உறுதி. அன்று தாவீது இராஜா, நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் (2.சாமு.12:13) எனக் கூறினான். அதற்குத் தேவனுடைய ஊழியன் கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்று பதில் கூறி ஆறுதலளித்தான்.

தெய்வீக வல்லமையையும், பிரகாசத்தையும் கண்ட பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்து, ஆண்டவரே, நான் பாவியான மனுஷன். நீர் என்னை விட்டுப் போகவேண்டும் என்றான் (லூக். 5:8). இயேசுவின் பாதத்தருகே நின்று அழுது, மனந்திரும்புதலின் கண்ணீரால் கழுவிய ஒரு பெண், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது. சமாதானத்தோடே போ (லூக்.7:48,50) என்ற இரட்சகரின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டாள். பாவியான ஆயக்காரன், தன் மார்பில் அடித்துக்கொண்டு பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, துக்கத்துடன், தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் (லூக்.18.13). என்று ஜெபித்தான். அவனே நீதிமானாக்கப்பட்டவனாக தன் வீட்டிற்குத் திரும்பினான்.