April

ஏப்ரல் 11

ஏப்ரல் 11

ஏன் என்னை மறந்தீர் (சங்.42:9)

நமக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் தூரத்தில் இருந்தபோதிலும், வேலை மிகுதியினால் அவர்கள் நம்மை மறந்துவிடலாம். ஆனால் நமது நம்பிக்கைக்குரிய ஆண்டவரோ நம்மை மறப்பதில்லை. இதையே அவர் நமக்கு,   ஸ்திரியானவள் தன் கர்ப்பதின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (ஏசா.49:15-16) என்று உறுதியளித்துள்ளார். இரட்சகரின் காயப்பட்ட கரங்களைக் காட்டிலும் சிறந்த, மேலான பாதுகாப்பளிக்கக்கூடிய நம்பிக்கைக்குரிய இடம் இந்த உலகத்தில் வேறு ஏதாகிலும் இருக்கமுடியுமா? இதை நீ மறந்துவிட்டாயா?

பரலோகத்திலிருந்து நமது தேவன் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய விசுவாசத்தை அவர் சோதித்துப் பார்க்கிறார். ஆனால் அவர்களைக் கைவிட்டுவிடுவதேயில்லை. தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல மிருகங்களையும் நினைத்தருளினார் (ஆதி.8.1). அவர் தம் படைப்புகள் யாவற்றையும் குறித்துக் கவலைப்படுகிறவர். இதை நம் ஆண்டவர் இயேசு, அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் (மத்.10:31) என்று கூறியுள்ளார். அவைகளைப் போஷிக்கிற தேவன் நம்மை மறந்துவிடுவாரா?

தேவ பக்தியுள்ள பயத்தோடும் நாம் அவரை நம்புவதற்கென அவர் தமது முகத்தை அடிக்கடி மறைத்துக்கொள்கிறார். அவர் உண்மையள்ளவரென்று நம்பி அவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கருதி, அவர் தமது நண்பர்களுடைய நட்பை இழக்கச் செய்கிறார். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பதற்கென ஒளியை நமக்குக் கொடுக்கிறார். நம்மை அவர் மறந்துவிட்டாரோ என்று கருதி நாம் வேதனைப்படும் வேளையில் அவர் பாதத்தில் விழுந்து என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன் (சங்.42:11) என்று கதறும் அனுபவத்தைப் பெறவேண்டும்.