April

ஏப்ரல் 5

ஏப்ரல் 5

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி… அவரை…. வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2.கொரி.2:14).

தேவனுடைய வழிநடத்துதலை அறிந்து மகிழ்ந்துவரும் ஆத்துமாவிற்குத் தோல்விகள் வருவது இயல்பு. அப்போஸ்தல னாகிய பவுல் துரோவா பட்டணத்திற்கு வந்தபோது தீத்துவைக் காண விரும்பினார். ஆனால் அவன் அங்கு இல்லை. அதன் பின்பு பவுல் மக்கதொனியா நாட்டிற்குப் புறப்பட்டுப் போனார். அவர் தன்னை வெற்றி சிறக்கப்பண்ணி வழிநடத்துகிற தேவன் கிருபையுள்ளவரென்று நன்கு அறிந்திருந்தார்.

ஸ்தோத்திரம் செலுத்துதல் நம் வழிகளைத் தெளிவாகக் காண்பிக்கும். தீத்துவைக் குற்றப்படுத்தாமலும், தவறான சூழ்நிலைக்கென வேதனைப்படாமலும் பவுல் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். ஏனெனில் அவர் எவ்வேளையிலும், எல்லாவற்றிற்கும் ஸ்தோத்திரம் செலுத்த அறிந்திருந்தார்.

தேவனோடு தொடர்ந்து நாம் செல்லும்போது அவரது வழி நடத்துலை உணர முடிகிறது. ஏமாற்றமடைந்த வேளையில் திகைத்து நில்லாமலும், திரும்பிப் போய்விடாமலும், பவுல் முன்னேறிச் சென்றார் இப்படிப்பட்ட நிலையில் வெற்றியுடன் முன்னேறிச் செல்வது எவ்வாறு என்பதைப் பவுல் நன்கறிந்திருந்தார். பகுத்தறியும் ஆவியுள்ள மனிதன் தேவனுடைய இரட்சிப்புக்காக தரித்து நிற்பதற்கும், பிடிவாதத்தினால் தரித்து நிற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நன்கறிந்து முன்னேறிச் செல்வான்.

தேவனுடைய உதவியை எதிர்பார்த்திரு. சூழ்நிலைகள் நமக்குச் சாதகமாயிருப்பதாகத் தோன்றலாம். அதே வேளையில் அதில் வேதசித்தம் இராமற் போய்விடும். துரோவாப் பட்டணத்தில் அனுகூலமான கதவு பவுலுக்குத் திறக்கப்பட்டிருந்தபோதிலும் அவன் மக்கெதோனியாவிற்கு அனுப்பப்பட்டான்.

உள்ளத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதுதான் அவரது சித்தத்தை அறிவதற்குரிய வழியாகும். ஒப்புக்கொடுத்த ஆத்துமாவைத் திறக்கப்பட்ட கதவோ, அடைபட்ட கதவோ, ஏமாற்றமோ, சந்தோஷமோ, எதுவும் தடைபண்ண முடியாது. அவர்கள் எனது சித்தத்தின்படியல்ல. உம்முடைய சித்தத்தின்படியே நடத்தும் என்று கூறுவர். அப்பொழுது வாழ்க்கைப் பாதை தேவனுக்கென வளமுள்ளதாக இருக்கும் என்பது உறுதி.