April

ஏப்ரல் 2

ஏப்ரல் 2

எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது (ரூத் 2:10)

மோவாபியப் பெண் ரூத் சுகத்தோடும், சந்தோஷத்தோடும் தன் கணவனோடு தனக்குரிய வீட்டில் வாழ்ந்து வந்தாள். திடீரென மரணம் தன் கொடிய கரத்தை நீட்டினதால் அவள் தன் கணவனையும், தனக்குரிய யாவற்றையும் இழந்தாள். அவளது மாமியார் நகோமி மட்டும் அவளோடு இருந்தாள். அவளும் மோவாப் நாட்டைவிட்டுத் தன் சொந்த வீட்டிற்கு பெத்லேகேமுக்குச் செல்லத் தீர்மானித்தாள். ரூத்தும் அவளுடன் செல்லத் தயாராளாள். அவள் தேவனுக்கு முன்பாகவும், தன் விதவை மாமியாருக்கும் மிகுந்த உண்மையுடன் நடந்து கொண்டாள். அவளுடைய நினைவுகளும், செயல்களும் உண்மையாயிருந்தன.

அவளுக்குத் தன் ஜாதியைக் குறித்த பெருமையோ, அழகைக் குறித்த பெருமையோ கிடையாது. அவள் அறுக்கிறவர்கள் பின்னே சிந்தினதைப் பொறுக்கி எடுக்கும் ஏழைப் பெண்ணாயிருந்தாள். தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்ததாலும், கீழ்ப்படிதலுள்ளவளாக இருந்ததாலும் போவாஸ் அவள் வழியில் குறுக்கிட்டான். அவனோ பணக்காரன். ஆனால் அவளோ ஏழை. பெத்லகேமின் தலைசிறந்த குடும்பத்தில் பிறந்தவனவன். அவளோ ஏழை. பெத்லகேமின் தலைசிறந்த குடும்பத்தில் பிறந்தவனவன். அவளோ ஒரு வெளிநாட்டுப் பெண். அவன் சுதேசி, அவளோ பரதேசி. அவன் அவளைக் கண்காணித்தான்! அவளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அவள் நான் அந்நிய தேசத்தாளாயிருக்க நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

ஏனென்றால் போவாஸால் கூறமுடியும்! அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜென்ம தேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்குத் தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான் (2:11.12).

ரூத் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தாள். நகோமியிடம் உண்மையாக இருந்தாள். இவை பலனற்றுப்போகவில்லை. கடமை தவறாமல் கண்ணும் கருத்துமாக நாமும் இருப்பின் நம் கனவுகள் யாவும் நனவாக மாறும் என்பதில் ஐயமில்லை.