மத்தேயு 3:1-17

3. மேசியாவின் ஊழியங்களுக்கான ஆயத்தமும், தொடக்கமும் (அதி. 3,4)

அ. யோவான் ஸ்நானகன் வழியை ஆயத்தப்படுத்துதல் (3:1-12)

இரண்டாம் அதிகாரத்திற்கும் மூன்றாம் அதிகாரத்திற்கும் இடையே இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. அதைக்குறித்து மத்தேயு எதுவும் குறிப்பிடவில்லை. அந்தக் காலத்தில் நாசரேத்தில் இருந்த இயேசு தமது எதிர்கால ஊழியத்திற்காகத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் யாதொரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆயினும் தேவனுடைய கண்களில் நிறைவான பிரியத்திற்குப் பாத்திரராக விளங்கினார் (மத். 3:17). இந்த அதிகாரத்தின் வாயிலாக அவருடைய வெளியரங்கமான ஊழியத்தின் தொடக்கத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

3:1,2 யோவான் ஸ்நானகன் தனது உறவினராகிய இயேசுவைவிட ஆறு மாதங்கள் மூத்தவராவார் (லூக். 1:26,36 – ஆகிய வசனங்களைக் காண்க). இஸ்ரவேலின் அரசராகிய மேசியாவுக்கு முன்னோடியாக அவர் வரலாற்று அரங்கிற்குள் காலடி எடுத்து வைக்கிறார். அவருடைய ஊழிய எல்லை எவ்வித வெற்றிவாய்ப்பும் அற்ற யூதேயாவின் வனாந்தரப் பகுதியேயாகும். எருசலேம் தொடங்கி யோர்தான் வரையிலுள்ள வறண்ட நிலப்பகுதியெங்கும் அவர் சுற்றித் திரிந்தார். “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது!” என்பதே அவர் அறிவித்த செய்தி. அரசர் விரைவில் தோன்றவிருக்கிறார், தங்களுடைய பாவத்தில் வீழ்ந்து கிடக்கிற மக்கள் மீது அவர் ஆட்சி செலுத்தமாட்டார், அவரால் அவ்வாறு ஆட்சி செலுத்தவும் முடியாது. அவர்கள் தங்களுடைய பாதையை மாற்றிக் கொள்ளவேண்டும், பாவங்களை விட்டொழிக்க வேண்டும். இருளின் அரசிலிருந்து பரலோக அரசிற்கு வரும்படியாக தேவன் அவர்களை அழைத்தார்.

பரலோக இராஜ்யம்

பரலோக ராஜ்யம் என்னும் சொற்றொடரை முதன் முதலாக இரண்டாம் வசனத்தில் நாம் காண்கிறோம். இச்சொற்றொடர் இந்த நற்செய்தி நூலில் முப்பத்திரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்றொடரின் கருத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் ஒருவன் மத்தேயு நற்செய்தி நூலின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாது. ஆகவே இச்சொற்றொடரின் வரையறையும் விளக்கமும் இங்கே தரப்பட்டுள்ளன.

தேவனுடைய ஆளுகையை ஒப்புக்கொள்கிற செயற்களமே (மண்டலம்) பரலோக ராஜ்யம் எனப்படும். “பரலோகம்” என்னும் சொல் தேவனைச் சுட்டிக்காட்டுகிறது. “உன்னதமானவர்” மனிதருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார் என்று தானியேல் கூறியதை தானியேலின் நூலில் காணமுடியும் (தானி. 4:25). அடுத்த வசனத்தில் ‘பரம அதிகாரம்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பரலோகம் ஆளுகிறது என்பது அதன் பொருளாகும். எங்கெல்லாம் மக்கள் தங்களை தேவனுடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கிறார்களோ அங்கெல்லாம் “பரலோக ராஜ்யம்” நிலவுகிறது.

பரலோக இராஜ்யத்திற்கு இரண்டு தோற்றநிலைகள் உள்ளன. அதனுடைய விரிவான பொருளில், யாரெல்லாம் தேவனே சர்வ அதிகாரத்தையும் உடையவர் என்று ஒப்புக்கொள்வதாக அறிக்கை செய்கிறார்களோ அவர்கள் யாவரும் அந்த ராஜ்யத்திற்குட்படுவர். அதனுடைய குறுகிய பொருளில், உண்மையான மனமாற்றத்தைப் பெற்றவர்கள் மட்டுமே அதற்கு உட்பட்டவர்களாவர். ஒரே புள்ளியை மையமாகக் கொண்ட இரண்டு வட்டங்களால் இதனை நாம் வரைந்து காட்டுவோம்.

பெரிய வட்டம் அறிக்கையின் செயற்களமாகும். இங்கு அரசரின் உண்மையான குடிமக்க ளும், அவருடைய அதிகாரத்தை உதட்டளவில் அறிக்கை செய்கிறவர்களும் இடம் பெறுகின்றனர். விதைக்கிறவனின் உவமை (மத். 13:3-9), கடுகு விதை உவமை (மத். 13:31,32), புளித்த மாவு என்னும் உவமை (மத். 13:33) ஆகியவற்றில் இதனைக் காணலாம். சிறிய வட்டமாகிய உள்ளார்ந்த நிலையில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் கொண்டு மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே இடம் பெறுவர். மனமாற்றம் பெற்றவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தின் உள்ளார்ந்த நிலையில் உட்புகுந்தவர்களாக விளங்குவர் (மத். 18:3).

இராஜ்யத்தைப் பற்றி வேதாகமம் தருகிற எல்லாக் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஆராய்ந்து காண்போமாயின், வரலாற்றில் அது அடைந்த ஐந்து வளர்ச்சிப்படிகளை நம்மால் காணவியலும்.

முதலாவதாக பழைய ஏற்பாட்டில் ராஜ்யம் முன்னுரைக்கப்பட்டுள்ளது. தேவன் ஒருக்காலும் அழிந்து போகாத ராஜ்யத்தை நிறுவுவார் என்றும், அதனுடைய இறையாண்மையை வேறு எவரிடமும் தரமாட்டார் என்றும் தானியேல் முன்னுரைத்துள்ளார் (தானி. 2:44). கிறிஸ்துவின் வருகையில் உலகளாவியதும் அழியாமை உள்ளதுமான அரசு நிறுவப்படும் என்பதையும் அவர் முன்கண்டார் (தானி. 7:13,14; எரே. 23:5,6 ஆகிய வசனங்களையும் காண்க).

இரண்டாவதாக யோவான் ஸ்நானகன், இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சீடர்கள் ஆகியோர் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று அறிவித்தனர் அல்லது அப்பொழுதே வந்திருக்கிறது என்று அவர்கள் அறிவித்தனர் (மத். 3:2; 4:17;10:7) “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 12:28-இல் கூறியிருக்கிறார்.

“. . . இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்று லூக்கா 17:21-இல் அவர் கூறியிருக்கிறார். அதாவது உங்கள் நடுவில் இருக்கிறதே என்பதே அதன் பொருளாகும். அரசராகிய இயேசு அங்கே இருந்த நிலையில் ராஜ்யம் அங்கு வந்திருந்தது. பரலோக ராஜ்யமும் தேவனுடைய ராஜ்யமும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களாக இருக்கின்றன என்பதை நாம் பின்னர் விளக்குவோம்.

மூன்றாவதாக, ஓர் இடைக்கால அரசமைப்பாக ராஜ்யம் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேல் நாட்டினராலே அவர் ஏற்க மறுக்கப்பட்ட பின்னர், அரசர் விண்ணுலகிற்குத் திரும்பச் சென்றுவிட்டார். அரசர் இங்கு இல்லையெனினும் அவருடைய அரசுரிமையை ஏற்றுக்கொண்டவர் ஒவ்வொருடைய உள்ளத்திலும் பரலோக ராஜ்யம் நிலைத்திருக்கிறது. அவ்வரசின் அறநெறிகளும் ஒழுக்கத்தின் விதிகளும் நம்முடைய வாடிநக்கை நடைமுறைக்கு ஏற்புடையவையாக விளங்குகின்றன. மலைப்பிரசங்கத்தில் சொல்லப்பட்டுள்ள அறநெறிகள் யாவும் இவற்றுள் அடங்கும். இராஜ்யத்தின் இடைக்கால அமைப்பை மத்தேயு 13-ஆவது அதிகாரத்தில் காணும் உவமைகள் விளக்குகின்றன.

இராஜ்யத்தின் நான்காவது கட்டம், அதனுடைய வெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறது. இதுவே பூமியில் கிறிஸ்து நிறுவப் போகிற ஆயிரமாண்டு ஆட்சிக் காலமாகும். எதிர்காலத்தில் நிகழவிருக்கிற கிறிஸ்துவின் ஆட்சி மறுரூபமலையின் காட்சியில் வெளிப்பட்டது, இங்கே அவர் மகிமையோடு காட்சியளித்தார் (மத். 17:1-8). இந்தக் காலகட்டத்தைக் குறித்து இயேசு கிறிஸ்துவே மத்தேயு 8:11-இல் குறிப்பிட்டுள்ளார்: “அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.”

இராஜ்யத்தின் கடைசிக் கட்டம் நித்திய ராஜ்யமாக விளங்கும். இதனைக் குறித்து, “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யம்..” என்று 2 பேதுரு 1:11 -ஆம் வசனம் கூறுகிறது.

“பரலோக ராஜ்யம்” என்னும் சொற்றொடர் மத்தேயு நற்செய்தி நூலில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் “தேவனுடைய ராஜ்யம்” என்னும் சொற்றொடரை நான்கு நற்செய்தி நூல்களிலும் காண்கிறோம். இச்சொற்றொடர்களின் பொதுவான பயன்பாடுகளைக் காணுமிடத்து எவ்விதவேறுபாடும் இல்லை. இரண்டையும் குறித்து ஒரே விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 19:23-இல் கூறியிருக்கிறார். இதே நிகழ்ச்சியைக் குறித்து மாற்கு (10:23), லூக்கா (18:24) ஆகிய நூலாசிரியர்கள் கூறுங்கால் தேவனுடைய ராஜ்யம் என்று குறிப்பிட்டுள்ளனர் (மத். 19:24-ஆம் வசனத்திலும் “தேவனுடைய ராஜ்யம்” என்னும் சொற்றொடரே பயன்படுத்தப்பட்டுள்ளது).

பரலோக ராஜ்யம் ஒரு வெளித்தோற்றத்தையும், உள்ளார்ந்த உண்மை நிலையையும் கொண்டிருக்கிறது என்று மேலே குறிப்பிட்டுள்ளோம். தேவனுடைய ராஜ்யத்திலும் இவ்விரண்டு கூறுகளையும் காணமுடியும். இஃது இவ்விரண்டு சொற்றொடர்களும் ஒரே பொருளுடையவை என்பதை உறுதி செய்கிறது. தேவனுடைய ராஜ்யத்தில் உண்மையான நிலையும், மாயையான பொய்த் தோற்றமும் உள்ளன. விதைப்பவன் உவமை (லூக். 8:4-10), கடுகு விதை உவமை  (லூக். 13:18), புளித்தமா (லூக். 13:20,21) ஆகிய உவமைகளில் இச்சொல்லாட்சி காணப்படுகிறது. அதனுடைய உண்மையான உள்ளார்ந்த நிலைக்குள்ளாக மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே இடம் பெறுவர் (யோவான் 3:3,5). இறுதியாக ஒரு குறிப்பு: இராஜ்யமும் சபையும் ஒன்றல்ல. இயேசு கிறிஸ்து வெளியரங்கமான ஊழியத்தைத் தொடங்கியபோது இராஜ்யமும் தொடங்கியது; சபையோ பெந்தெகொஸ்தே நாளில்தான் தோன்றியது (அப்.2). இராஜ்யம் பூமி அழிக்கப்படும் வரை தொடரும்; சபையானது எடுத்துக்கொள்ளப்படும் வரைதான் பூமியில் தொடரும் (விண்ணுலகிலிருந்து கிறிஸ்து இறங்கி வந்து விசுவாசிகள் அனைவரையும் தம்மோடு இருக்கும்படி அழைத்துச் செல்லும்போது சபை பூமியிலிருந்து அகற்றப்படும் அல்லது பறித்துக் கொள்ளப்படும் (1 தெச. 4:13-18). கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், சபையானது அவரோடுகூட இப்புவிக்குத் திரும்பிவந்து, அவரோடு கூட ஆட்சிபுரியும். தற்போது உண்மையான உள்ளார்ந்த நிலையில் ராஜ்யத்தின் குடிமக்களாக இருப்போர் மணவாட்டியின் சபையிலும் அங்கங்களாகத் திகழுகின்றனர்.

3:3 மத்தேயு 3 -ஆவது அதிகாரத்தின் விளக்கவுரைக்குத் திரும்புவோம். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயா தீர்க்கதரிசி யோவானின் ஆயத்த ஊழியத்தைக் குறித்து முன்னுரைத்தார் என்ற குறிப்பை இங்கே காண்கிறோம்:

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று (ஏசா. 40:3).

யோவான் கூப்பிடுகிற சத்தமாய் இருந்தார். ஆவிக்குரிய நிலையில் இஸ்ரவேல் நாவறண்டதும் வெறுமையுமான வனாந்தரமாகக் காட்சியளித்தது. மனம்வருந்தி, தங்களுடைய பாவங்களை விட்டொழித்து அந்நாட்டு மக்கள் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டுமென்றும், அவருடைய நிறைவான ஆட்சிக்குத் தடையுண்டாக்கும் எல்லா இடையூறுகளையும் அகற்றி அவருடைய பாதையைச் செவ்வைபண்ணவேண்டுமென்றும் யோவான் அழைப்புவிடுத்தார்.

3:4 யோவான் ஸ்நானகனின் ஆடை ஒட்டக மயிரால் நெய்யப்பட்டிருந்தது. இன்றைய நாட்களில் மென்மையான விலையுயர்ந்த ஒட்டகமுடியினால் செய்யப்படும் ஆடைகளைப்போல அது இல்லாமல், வனாந்தரத்தில் வசிக்கிறவர்கள் அணியும் கரடுமுரடான ஆடையாகவே அது இருந்தது. ஒரு வார்க்கச்சையையும் அவர் இடுப்பில் கட்டியிருந்தார். இந்த உடைகள் எலியாவின் உடைகளைப்போலவே இருந்தன (2 இராஜா. 1:8). ஒருவேளை விசுவாசிக்கும் யூதர்கள் எலியாவின் ஊழியத்திற்கும் யோவானின் ஊழியத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் கண்டு விழிப்படைய இந்த ஆடையின் ஒற்றுமை உதவியிருக்கலாம் (மல். 4:5; லூக். 1:17; மத். 11:14; 17:10-12). வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் யோவானின் உணவாயிருந்தன. தனது வாழ்வில் வசதிகளையும் இன்பங்களையும் துறந்து ஊழியத்திற்காகத் தன்னையே சுட்டெரிக்கக் கொடுத்த ஒருவர் உயிர்வாழ்வதற்குப் போதுமான உணவையே அவர் உட்கொண்டார்.

சாதாரணமாக மனிதர்கள் எதற்காக வாழ்கிறார்களோ, அவற்றையெல்லாம் குறித்து எந்தக் கவலையும் இல்லாதிருந்த யோவானைச் சந்திக்கும்போது நமக்கு குற்றவுணர்வே ஏற்படும், உள்ளம் வேகும். ஆன்மீகச் சத்தியங்களில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பிறர் தங்களுடைய குறைவை உணரச் செய்தது. அவரது துறவற வாழ்க்கை, உலகத்தின் இன்பங்களில் மூழ்கிக் கிடந்த அன்றைய மனிதர்களுக்குக் கடுமையான கடிந்து கொள்ளுதலாகக் காணப்பட்டது.

3:5,6 யோவானின் செய் தியைக் கேட்க எருசலேம் நகரத்தார், யூதேயா தேசத்தார் மற்றும் யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் திரண்டுவந்தனர். சிலர் அவருடைய செய்திக்குச் செவிகொடுத்து யோர்தான் நதியில் அவரால் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக, தாங்கள் வரவிருக்கிற அரசருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவும் கீழ்ப்படியவும் ஆயத்தமுடையவர்கள் என்று வெளிப்படுத்தினர்.

3:7 ஆனால் பரிசேயரையும் வேதபாரகரையும் பொருத்தமட்டில் கதை வேறாக இருந்தது. யோவானின் செய்தியைக் கேட்க வந்த அவர்கள் உண்மையற்றவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களுடைய உண்மையான பண்பை அவர் அறிந்திருந்தார். தாங்கள் நியாயப்பிரமாணத்தில் பற்றுமிக்கவர் என்று பரிசேயர் பெயரளவில் அறிக்கை செய்கிறவர்களாக இருந்தனர். ஆயின் உள்ளார்ந்த நிலையில் அவர்கள் ஊழல் புரிகிறவரும், பிரிவினை செய்கிறவரும், மாய்மாலக்காரரும், சுயநீதி உடையோருமாய்  இருந்தனர். சதுசேயரோ சமுதாயத்தில் மேன்மக்களும், சமயக் கொள்கைகளில் நம்பிக்கை அற்றவர்களுமாயிருந்தனர். சரீர உயிர்த்தெழுதல், தேவதூதர்களின் உளவாம் தன்மை, ஆத்துமாவின் அழிவற்ற தன்மை, நித்திய ஆக்கினைத் தீர்ப்பு ஆகியவற்றை அவர்கள் மறுத்துரைத்தனர். ஆகவே யோவான் அவ்விருவகுப்பாரையும் விரியன் பாம்புக்குட்டிகளே என்று கூறி கடிந்துரைத்தார். அவர்கள் வருங்கோபத்துக்குத் தப்பவிருப்பமுள்ளவர்களாக நடித்தனர். ஆனால் மனந்திரும்புதலுக்கேற்ற உண்மையான அடையாளம் அவர்களிடத்தில் இல்லாதிருந்தது.

3:8 மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்து தங்களது உண்மையுள்ள தன்மையை வெளிப்படுத்தும்படி, அவர்களுக்கு யோவான் அறைகூவல் விடுத்தார். “சில கண்ணீர்த்துளிகளைச் சிந்துவதோ, வருத்தத்தினால் பிதற்றுவதோ, சற்று பயந்து நடுங்குவதோ மனந்திரும்புதல் ஆகாது. எந்தப் பாவங்களுக்காக நாம் மனம் வருந்துகிறோமோ அவற்றை விட்டொழித்து, புதிய தூய்மையான பரிசுத்த வழியில் நடப்பதே மனந்திரும்புதல் ஆகும்” என்று திரு து.சு. மில்லர் கூறியுள்ளார்.

3:9 ஆபிரகாமின் குடிவழிவந்தவர்கள் என்பதால் விண்ணுலகிற்கான நுழைவுச் சீட்டைப் பெற்றுவிட்டோம் என்னும் சிந்தனையை யூதர்கள் விட்டொழிக்க வேண்டும். இரட்சிப்பிற்கான தேவகிருபை பரம்பரைச் சொத்தல்ல. பரிசேயரையும் சதுசேயரையும் மனமாற்றம் அடையச்செய்வதைக் காட்டிலும் யோர்தான் ஆற்றுக் கற்களை ஆபிரகாமின் பிள்ளைகளாக மாற்றுவது தேவனுக்கு எளிது.

3:10 கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிக்கிறது என்னும் யோவானின் கூற்று, தேவனுடைய நியாயத்தீர்ப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்று பொருள்படும். கிறிஸ்துவினுடைய வருகையும் அவருடைய சமுகமும் எல்லா மனிதர்களையும் சோதிக்கும். கனியற்ற மரங்களை வெட்டி வீழ்த்தி அக்கினியில் போடுவதுபோல, கனியற்றவர்களும் அழிக்கப்படுவது உறுதி.

3:11,12 ஏழாம் வசனம் முதல் பத்தாம் வசனம் வரையிலும் பரிசேயருடனும் சதுசேயருடனும் மட்டுமே யோவான் பேசிக்கொண்டிருந்தார் (7-ஆம் வசனத்தைக் காண்க). இப்பொழுதோ அவர் தம்மைச் சுற்றியிருந்த அனைவரோடும் பேசத் தொடங்குகிறார். அவரைக் கேட்டுக்கொண்டிருந்தோரில் உண்மையுள்ளவரும் உண்மையற்றவரும் இருந்தனர்.

தன்னுடைய ஊழியத்திற்கும், விரைவில் வரவிருக்கிற மேசியாவின் ஊழியத்திற்கு இடையே மிக இன்றியமையாத வேறுபாடு இருக்கும் என்பதை அவர் விவரித்தார். மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்தார். தண்ணீர் சடங்குகளுக்குரிய பொருளேயல்லாமல் அது தூய்மைப்படுத்தும் பண்புடையது அன்று. தான் கூறுகிற மனந்திரும்புதல் உண்மையானதாயிருப்பினும் அது ஒரு மனிதனை முற்றிலும் இரட்சிக்காது. தன்னுடைய ஊழியம் ஆயத்தப்படுத்துவதேயொழிய முழுமையற்றது என்றே யோவான் எண்ணினார். மேசியாவின் ஊழியம் யோவானின் ஊழியத்தை முழுவதுமாக மறைத்து விடும், அவர் யோவானிலும் வல்லவர், நிறைவான தகுதியுடையவர், அவருடைய செயல்பாடுகள் எல்லாத் திக்குகளுக்கும் பரவும். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானமும் அக்கினியால் கொடுக்கப்படும் ஞானஸ்நானமும் வெவ்வேறானவை. முதலில் சொல்லப்பட்டுள்ளது ஆசிர்வாதமாகும். பின்னர் சொல்லப்பட்டுள்ளது நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. முதலாவது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது, பிந்தியதோ இனிமேல் நடைபெறவிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள் அனைவரும் முந்தினதில் அனுபவம் பெற்றுள்ளனர். பிந்தினது அவிசுவாசிகளின் பங்காகும். உள்ளான மனந்திரும்புதலுக்கு அடையாளமான வெளிப்படையான ஞானஸ்நானத்தைப் பெற்ற இஸ்ரவேலர் முந்தினதில் பங்கடைவர். பிந்தினதோ பரிசேயரும் சதுசேயரும் உண்மையான மனந்திரும்புதலுக்குரிய சான்று அற்றவர்களும் அடையப்போகிற ஆக்கினைத் தீர்ப்பாகும்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் அக்கினியின் ஞானஸ்நானமும் ஒரே நிகழ்ச்சி என்று சிலர் போதிக்கின்றனர். பெந்தெகொஸ்தே நாளில் அக்கினிமயமாக வந்த நாவுகளை இந்த அக்கினியின் ஞானஸ்நானம் குறிக்கிறதில்லையா என்று அவர்கள் வினவுகின்றனர். பன்னிரண்டாம் வசனத்தில் அக்கினியானது நியாயத்தீர்ப்போடு ஒப்பிடப்பட்டுள்ளதால் மேற்கூறிய பொருளை அது உடையதன்று என அறிவோம். அக்கினியின் ஞானஸ்நானத்தைக் குறித்துச் சொன்னவுடனே, யோவான் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்துப் பேசத்தொடங்கினார். போரடிக்கப்பட்ட தானியத்தைக் காற்றில் தூற்றும் தூற்றுக் கூடைக்கு ஒப்பாகக் கர்த்தர் இங்கே சித்தரிக்கப்படுகிறார். கோதுமையானது (மெய்யான விசுவாசிகள்) தூற்றுக்கூடையின் கீழே நேரே விழுகிறது. விழுந்த மணிகளைக் களஞ்சியத்தில் சேர்க்கிறார்கள். பதரோ (அவிசுவாசிகள்) காற்றின் வேகத்தில் பறந்து சற்று அப்புறம் சென்று விழுகிறது. அதனை ஒன்றுசேர்த்து அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்கள். பன்னிரண்டாம் வசனத்தில் வரும் அக்கினி ஆக்கினைத்தீர்ப்பைக் குறிக்கும். அவ்வசனம் பதினோராவது வசனத்தின் விரிவுரையாக இருக்கிறது. ஆகவே அக்கினி ஞானஸ்நானம் என்பது ஆக்கினைத்தீர்ப்பினால் வரும் ஞானஸ்நானத்தையே குறிக்கும்.

ஆ. யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல் (3:13-17)

3:13 யோவானிடம் ஞானஸ்நானம் பெறும்படி கலிலேயாவிலிருந்து இயேசு ஏறத்தாழ அறுபது மைல் தொலைவு நடந்து யோர்தானின் தாழ்வான பகுதிக்கு வந்தார். யோவான் அளித்த ஞானஸ்நானத்திற்கு இயேசு அளித்த முக்கியத்துவத்தை இது தெரிவிக்கிறது. மேலும் அவரைப் பின்பற்றுவோர் இன்றைய நாட்களில் விசுவாசிகளின் ஞானஸ்நானத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

3:14,15 எந்தப் பாவத்திலிருந்தும் இயேசு கிறிஸ்து மனந்திரும்பத் தேவையில்லை என்பதை உணர்ந்திருந்த யோவான், அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்துரைத்தார். மேலும் தான் அவரிடம் ஞானஸ்நானம் பெறுவதே முறையானது என்று அவர் உரைக்கும்படி அவருடைய மெய்யான உள்ளுணர்வு அவரை ஏவிற்று. இயேசு இதனை மறுத்துரைக்கவில்லை. எல்லா நீதியையும் நிறைவேற்றுவதே ஏற்றதாகும் என்னும் அடிப்படையில் தமக்கு ஞானஸ்நானம் அளிக்கும்படி இயேசு மீண்டும் வேண்டினார். மனந்திரும்புதலுக்கென்று வந்த தெய்வப்பற்றுடைய இஸ்ரவேலரோடு தம்மை ஒன்றிணைத்துக் காட்டுவதற்காக ஞானஸ்நானம் பெறுவதே பொருத்தமானது என்று அவர் எண்ணினார்.

இதனினும் ஆழமான பொருளையும் அவர் பெற்ற ஞானஸ்நானம் எடுத்துரைக்கிறது. மனிதனுடைய பாவத்திற்கு எதிராக தேவன் எதிர்பார்க்கிற நீதியுள்ள பரிகாரங்கள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என்பதை உணர்த்தும் ஆசாரமாக அந்த ஞானஸ்நானம் விளங்கியது. அவர் நீரில் மூழ்கிய செயல் கல்வாரியில் நிறைவேறிய தேவனுடைய கோபாக்கினையில் அவர் மூழ்கியதற்கு நிழலாக இருந்தது. அவர் நீரிலிருந்து வெளியே வந்தது, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு நிழலாகும். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக தேவனுடைய நீதி எதிர்ப்பார்க்கிற அனைத்தையும் நிறைவேற்றி, பாவிகள் நீதிமான்களாக ஆக்கப்படுகிறதற்கு நீதியுள்ள ஆதாரத்தை அவர் ஏற்படுத்துவார் என்பதற்கு இந்த ஞானஸ்நானம் நிழலாயிருந்தது.

3:16,17 ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்து ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானத்திலிருந்து தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். பழைய ஏற்பாட்டுக்காலத்திலே மனிதர்களும் பொருட்களும் புனித நோக்கங்களுக்காக “பரிசுத்த அபிஷேகத் தைலத்தினால்” பரிசுத்தமாக்கப்பட்டன (யாத். 30:25-30). அதுபோல இயேசுவும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாவாக விளங்கினார்.

மூவொரு தேவனாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் பிரசன்னமாயிருந்த அதிதூய நேரமாக அது விளங்கியது. நேசகுமாரன் அங்கிருந்தார். புறாவின் சாயலில் தூய ஆவியானவர் அங்கிருந்தார். வானத்திலிருந்து பிதாவின் சத்தம் கேட்டது. இயேசுவின் மீது அது ஆசிர்வாதத்தைப் பொழிந்தது, “இவர் என் நேசகுமாரன் (சங். 2:7). இவரில் பிரியமாயிருக்கிறேன் (ஏசா.42:1)” என்று திருமறையிலிருந்து வசனங்களை மேற்கோள்காட்டி, தேவனுடைய சத்தம் தொனிக்கிற மிகச்சிறந்த தருணமாக அது விளங்கியது. தனிச் சிறப்புடைய தம்முடைய குமாரனிடத்தில் பிதா கொண்டிருந்த நேசத்தை அவர் வானத்திலிருந்து தம்முடைய பேச்சினால் வெளிப்படுத்திய மூன்று தருணங்களில் இதுவும் ஒன்றாகும் (மத்.17:5: யோவான் 12:28 ஆகியவை மற்ற இடங்களாகும்).

மத்தேயு 2:1-23

2. மேசியா அரசரின் இளமைக் காலம்
(அதி. 2)

அ. அரசரைத் தொழுதுகொள்ள வந்த ஞானிகள் (2:1-12)

2:1,2 இயேசு கிறிஸ்துவின் பிறப்போடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் குறித்துப் படிக்குங்கால், அவற்றின் கால வரிசையைக் கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படுவது எளிது. முதலாம் வசனத்தைப் படிக்கும்போது, மரியாளும் யோசேப்பும் குழந்தையோடு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் இருந்த நாட்களிலேயே ஏரோது இயேசுவைக் கொலைசெய்ய முயன்றான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயின் சான்றுகள் அனைத்தையும் ஒன்றுகூட்டிக் காணுங்கால், ஏரோதின் கொலை முயற்சி ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்தது என்பதை அறிய இயலும். ஞானிகள் இயேசு கிறிஸ்துவை ஒரு வீட்டில் கண்டதாக மத்தேயு 11 -ஆவது வசனத்தில் கூறுகிறார். இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள் யாவரையும் கொலை செய்யும்படி ஏரோது உத்தரவு பிறப்பித்தான் என்று 16-ஆவது வசனம் கூறுகிறது. ஆகவே இராஜரீகப் பிறப்பு நிகழ்ந்த பின்னர் குறிப்பிட்டுச் சொல்லப்படாத சிறிது காலம் கழித்தே, இந்த வேதபகுதியில் காணும் விவரங்கள் நிகழ்ந்தன என்பது புலப்படுகிறது.

மகா ஏரோது ஏசாவின் வழிவந்தவன். ஆகவே அவன் யூதர்களின் பாரம்பரிய எதிரியாக இருந்தான். அவன் யூத மதத்தைத் தழுவியவனாக இருந்தான். ஆயினும் அரசியல் ஆதாயந்தேடியே அவன் மதமாற்றத்தை மேற்கொண்டான் எனத் தோன்றுகிறது. அவனுடைய ஆட்சியின் இறுதிக் காலத்திலேயே யூதருக்கு ராஜாவாகப் பிறந்தவரைத் தேடி கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தனர். யூத மதத்தைச் சார்ந்திராதவரும் இயற்கைச் சக்திகளை மையமாகக் கொண்டு சமயச்சடங்குகளை செய்கிற ஆசாரியர்களாகவுமே இவர்கள் இருந்திருப்பார்கள், இப்படிப்பட்ட ஞானம் உடையவரும், முன்னறியும் ஆற்றல் படைத்தவரும் அரசர்களின் ஆலோசகர்களாக நியமிக்கப்படுவது வழக்கமாயிருந்தது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எத்தனைபேர், எவ்வளவுகாலம் பயணம் செய்தனர் என்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.

கிழக்கிலே தோன்றிய நட்சத்திரத்தினாலே அவர்கள் அரசரின் பிறப்பை எவ்வாறோ அறிந்து கொண்டனர். அதனால் அவரை அவர்கள் வணங்க வந்தனர். மேசியாவின் வருகையைக் குறித்த பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அவர்கள் அறிந்திருக்கக்கூடும். யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்னும் பிலேயாமின் தீர்க்கதரிசனத்தை இவர்கள் அறிந்திருப்பார்கள் (எண். 24:17). கிறிஸ்துவின் முதலாம் வருகையைக் குறித்து தானியேல் நூலில் காணும் எழுபது வாரக் கணக்கை அந்தத் தீர்க்கதரிசனத்தோடு இணைத்துப்பார்த்து அரசரின் பிறப்பை அவர்கள் அறிந்திருப்பார்கள் (தானி. 9:24,25). ஆனால் இந்த அறிவை அந்த மனிதர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் பெற்றிருந்தனர் என்றே தோன்றுகிறது.

அந்த நட்சத்திரம் தோன்றியதைக் குறித்துப்பற்பல அறிவியல் விளக்கங்கள் தரப்படுகின்றன. பல கோள்கள் ஒன்றிணைந்த காட்சியாக அது இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நட்சத்திரத்தின் பாதை ஒழுங்கற்றதாயிருந்தது. அது சாஸ்திரிகளுக்கு முன்பாகச் சென்று, எருசலேமிலிருந்து இயேசு கிறிஸ்து இருந்த வீட்டிற்கு அவர்களை நடத்திச் சென்றது (வச. 9). பிறகு அது நின்றுவிட்டது. வழக்கத்திற்கு மாறாகச் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, உண்மையில் இதனை அற்புதம் என்று கணிப்பதே தகும்.

2:3 யூதருக்கு அரசராகப் போகிற குழந்தை பிறந்திருக்கிறது என்பதைக் கேள்வியுற்ற ஏரோது ராஜா கலங்கினான். இப்படி ஒரு குழந்தை பிறந்திருப்பது அவனுடைய நிலைதடுமாறிய ஆட்சிக்கு வந்த ஆபத்தேயாகும். அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அந்தச் செய்தியை அந்நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்க வேண்டும். ஆயின் இச்செய்தியின் நிமித்தம் அவர்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலைக்குப் பாதிப்பு ஏற்படலாம்; இல்லையேல் அவர்களை அடக்கி ஆண்ட ரோமர்களின் வெறுப்பைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்நகரத்தார் யாவரும் கலங்கினர்.

2:4-6 கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்பதைக் கண்டறிய யூத சமயத் தலைவர்களையெல்லாம் ஏரோது ஒன்று கூட்டினான். பிரதான ஆசாரியனையும் அவனது குமாரர்களையும் சேர்த்து பிரதான ஆசாரியர் என்று இங்கே மத்தேயு குறிப்பிட்டுள்ளார் (ஒருவேளை அவனுடைய குடும்பத்தின் உறுப்பினர்களும் இதில் அடங்குவர்). ஜனத்தின் வேதபாரகர் என்போர் ஆசாரியரல்லாத பொது மக்களில் மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவராவர். நியாயப்பிரமாணத்தைப் பாதுகாத்து, போதித்து வந்த இவர்கள் ஆலாசனைச் சங்கத்தில் நீதிபதிகளாகவும் விளங்கினர். யூதாவிலுள்ள பெத்லகேமிலே அரசர் பிறப்பார் என்று மீகா 5:2-ஆம் வசனத்தை மேற்கோள் காட்டி ஆசாரியரும், வேதபாரகரும் சரியான பதிலைக் கூறினர். மீகாவின் தீர்க்கதரிசன நூல் “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம்” என்று அந்த ஊரைக் குறிப்பிடுகிறது. பாலஸ்தீனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் பெத்லகேம் என்னும் பெயரை உடையதாக இருந்ததால், யூதாவின் எல்லைக்குப்பட்ட எப்பிராத்தா மாவட்டத்தில் உள்ள பெத்லகேம் என்னும் இடம் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2:7,8 நட்சத்திரம் முதலில் காணப்பட்டது எப்போது என்பதை அறிய ஏரோது ராஜா சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து விசாரித்தான். இவ்வாறு அவன் இரகசியமாய் விசாரித்த விதம், அவனுடைய கொடுமையில் இன்பம் காணும் இயல்பினைக் காட்டிக்கொடுத்துவிட்டது. அவனால் சரியான குழந்தையைக் கண்டுபிடிக்க இந்தச் செய்தி அவனுக்குத் தேவைப்படும். தன்னுடைய உண்மையான நோக்கத்தை மூடிமறைக்கும் பொருட்டு, பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படியாகவும், கண்டபின்பு அவனுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் அவர்களிடம் அவன் சொல்லி அனுப்பினான்.

2:9 சாஸ்திரிகள் தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தபோது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் மீண்டும் காட்சியளித்தது. கிழக்கிலிருந்து அவர்கள் வந்த பாதை நெடுகிலும் அவர்களை அந்த நட்சத்திரம் வழிநடத்தவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆனால் இப்பொழுதோ அந்தப் பிள்ளை இருந்த இடம் வரைக்கும் அது அவர்களை வழிநடத்தியது.

2:10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் என்று குறிப்பிடத்தக்கவகையில் சொல்லப்பட்டிருக்கிறது. புறஇனத்தவரான சாஸ்திரிகள் கிறிஸ்துவைக் கருத்தாய்த் தேடினர்; ஏரோது அவரைக் கொல்லத் திட்டமிட்டான்; ஆசாரியரும் வேதபாரகரும் அலட்சியப் போக்குடன் இருந்தனர் (இன்றும்கூட அப்படித்தான் இருக்கின்றனர்); எருசலேம் மக்கள் கலங்கினர். மேசியா எவ்வாறு வரவேற்கப்படுவார் என்பதற்கு இந்த மனப்பான்மைகள் யாவும் முன்அடையாளங்களாக விளங்கின.

2:11 சாஸ்திரிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, பிள்ளையையும் அதன் தாயாகிய மரியாளையும் அங்கே கண்டனர். உடனே அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு விலையுயர்ந்த பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய தாயையும் அவர்கள் கண்டனர் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். பொதுவாக தாயை முதலில் குறிப்பிட்டு, பின்னரே பிள்ளையைப் பற்றிச் சொல்லுவார்கள், ஆயின் இந்தப் பிள்ளையோ தனிச்சிறப்பு வாய்ந்தது. அதற்கே முதன்மையான இடம் வழங்கப்பட வேண்டும் (வசனங்கள் 13,14,20,21 ஆகியவற்றையும் காணுங்கள்). சாஸ்திரிகள் பிள்ளையைப் பணிந்துகொண்டனர். மரியாளையோ யோசேப்பையோ அவர்கள் பணிந்துகொள்ளவில்லை. (யோசேப்பைக் குறித்து ஒன்றும் இங்கு சொல்லப்படவில்லை. வெகுவிரைவில் நற்செய்தி நூலிலிருந்து அவன் முற்றிலுமாகத் தலைமறைவாகிவிடுவான்.) நம்முடைய புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் இயேசு ஒருவரே பாத்திரராக இருக்கிறார்; மரியாளோ யோசேப்போ ஆராதனைக்குரியவரல்லர்.

அவர்கள் கொண்டுவந்த பொக்கிஷங்கள் மேன்மையான பொருள் உடையன. தெய்வீகத்திற்கும் மாட்சிக்கும் பொன் அடையாளமாய் இருக்கிறது; அவருடைய தெய்வீக ஆள்தன்மையின் ஒளிவீசும் நிறைவை இது எடுத்தியம்புகிறது. தூபவர்க்கம் நறுமணம் வீசும் பசைப்பொருளாகவோ தைலமாகவோ இருக்கும்; அவருடைய பாவமற்ற நிறைவான வாழ்வின் நறுமணத்தை இது குறிக்கிறது. வெள்ளைப்போளம் கசப்பான செடியாகும்; உலகத்தின் பாவத்தை சுமக்கும்போது அவர் அனுபவிக்கப்போகிற பாடுகளை இது முன்னறிவிக்கிறது. ஏசாயா 60:6 –இல் சொல்லப்பட்டுள்ளவற்றை, புறஇனத்தாரின் காணிக்கைகள் நினைவுபடுத்துகின்றன. மேசியாவுக்குப் புறஇனத்தவர் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள் என ஏசாயா முன்னுரைத்தான். எனினும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் மட்டுமே அவன் அங்கே குறிப்பிட்டுள்ளான். “. . . யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்”. வெள்ளைப்போளம் அங்கு சொல்லப்படாததன் காரணம் என்ன? ஏனெனில் ஏசாயா கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தே பேசினான். அப்பொழுது அவர் பாடுகளை அனுபவிக்கப் போவதில்லை. ஆகவே அந்தக் கசப்பான வெள்ளைப்போளம் குறிப்பிடப்படவில்லை. இங்கே மத்தேயுவில் அவருடைய முதல் வருகை காட்சியளிக்கிறது, ஆகவே வெள்ளைப்போளம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்தேயுவில் கிறிஸ்துவின் பாடுகளை நாம் காண்கிறோம். ஆனால் பின்னர் வரவிருக்கிற மகிமையைப்பற்றி ஏசாயாவின் இப்பகுதி பேசுகிறது.

2:12 ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சாஸ்திரிகள் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, அதற்குக் கீழ்ப்படிந்து வேறொரு வழியாக அவர்கள் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றனர். உண்மையான இருதயத்தோடு கிறிஸ்துவைச் சந்திக்கும் எவரும் வந்த வண்ணமாகவே திரும்பிச் செல்கிறதில்லை. அவரோடு மெய்யான முறையில் கொள்கிற ஈடுபாடு அம்மனிதனை முழுவதும் மறுரூபப்படுத்துவது திண்ணம்.

ஆ. யோசேப்பும், மரியாளும், இயேசுவும் எகிப்திற்குத் தப்பியோடுதல் (2:13-15)

2:13,14 நம்முடைய கர்த்தர் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தது முதற்கொண்டே அவர்மீது மரணம் என்னும் அச்சுறுத்தல் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவர் சாவதற்காகப் பிறந்தது உண்மையெனினும், குறித்த வேளையில்தான் அது நிறைவேறும். தேவனுடைய சித்தத்தின்படி நடக்கிற எவனும் அவனுடைய வேலை நிறைவேறும்வரை அழிவைச் சந்திக்க மாட்டான்.

யோசேப்பு தனது குடும்பத்துடன் எகிப்துக்கு ஓடிப்போகும்படி சொப்பனத்தில் கர்த்தருடைய தூதனால் எச்சரிக்கப்பட்டான். தனது “தேடிக்கொல்லும்” பணியை தீவிரமாகச் செயல்படுத்த ஏரோது ஆயத்தமானான். ஏரோதின் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடிய அக்குடும்பத்தினர் அந்நிய நாட்டிலே அகதிகள் ஆனார்கள். அவர்கள் எகிப்தில் எவ்வளவு காலம் தங்கியிருந்தனர் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால் ஏரோதின் மரணத்தில் அவர்கள் நாடு திரும்புவதற்கான வழிபிறந்தது.

2:15 இவ்வாறாக, இன்னுமொரு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனம் புதுப்பொருள் என்னும் ஆடையை அணிந்துகொண்டது. “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தேவன் ஓசியா தீர்க்கதரிசியின்மூலமாகக் கூறினார் (ஓசியா 11:1). இஸ்ரவேல்மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பயணம் மேற்கொண்ட நிகழ்ச்சியையே இந்தக் குறிப்பு முதன்மையாகக் கூறுகிறது. ஆனால் அக்கூற்று இருபொருள் கொண்டதாக இருக்கிறது. மேசியாவின் வரலாறு இஸ்ரவேலின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. அந்தத் தீர்க்கதரிசனம் எகிப்திலிருந்து கிறிஸ்து இஸ்ரவேலுக்குத் திரும்பிய நிகழ்ச்சியில் நிறைவடைந்தது.

நீதியோடு இப்புவியில் ஆட்சிபுரிய கர்த்தர் திரும்பும் வேளையில், ஆயிரமாண்டு ஆசிர்வாதங்களில் பங்கடையும் நாடுகளில் எகிப்தும் ஒன்றாகத் திகழும் (ஏசா. 19:21-25; செப். 3;9,10; சங். 68:31). இஸ்ரவேலுக்குப் பரம்பரை எதிரியாக இருக்கும் ஒரு நாடு இவ்வாறு நன்மை பெறுவதற்கான காரணம் என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடைக்கலம் கொடுத்த செய்கைக்கு, தெய்வீக நன்றிக்கடனாக இது இருக்குமோ?

இ. பெத்லகேம் குழந்தைகளை ஏரோது கொன்று குவித்தல் (2:16-18)

2:16 சாஸ்திரிகள் திரும்பிவரத் தவறியபோது, இளம் அரசரைக் கண்டுபிடிக்க தான் வகுத்த திட்டத்தில் வஞ்சிக்கப்பட்டதை ஏரோது உணர்ந்தான். முட்டாள்தனமான கோபம் அவனைப் பற்றிக் கொண்டது. பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்ய அவன் உடனடியாகக் கட்டளையிட்டான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்ற கணக்கில் உடன்பாடு இல்லை. இருபத்தாறு குழந்தைகள் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

2:17,18 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கூக்குரல் எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட சொற்களின் நிறைவேறுதலாயிருந்தது. “ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால், அவைகளினிமித்தம் ஆறுதலடையாதிருக்கிறாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 31:15).

அத்தீர்க்கதரிசனத்தில், ராகேல் இஸ்ரவேலுக்கு அடையாளமாயிருக்கிறாள். படுகொலை நிகழ்ச்சி நடந்த பெத்லகேமுக்கு அருகில் இருந்த ராமாவில் ராகேல் புதைக்கப்பட்டாள். இஸ்ரவேலின் வருத்தமானது ராகேலின் வருத்தம் என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் அவளுடைய கல்லறையின் வழியாகச் சென்றபோது அவர்களோடு சேர்ந்து ராகேலும் அழுததாக இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. இளம் பகைஞரை அழிக்க ஏரோது செய்த முயற்சி அவனுக்கு எந்த ஆதாயத்தையும் உண்டாக்கவில்லை. அவகீர்த்தியின் வரலாற்றில் அவமானச் சின்னமாக ஏரோதின் பெயர் பொறிக்கப்பட்டது.

ஈ. யோசேப்பும் மரியாளும் இயேசுவும் நாசரேத்தில் குடியேறுதல் (2:19-23)

ஏரோது இறந்த பின்பு, இப்பொழுது நாடு திரும்புவது பாதுகாப்பானது என்று கர்த்தருடைய தூதன் யேசேப்புக்கு உறுதியளித்தான். யோசேப்பு இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தபோது ஏரோதின் மகனாகிய அர்கெலாயு அவனுடைய தகப்பனுடைய இடத்தில் யூதேயாவின் அரசனாகப் பதவி ஏற்றிருக்கிறான் என்று கேள்விப்பட்டான். ஆகவே அவன் அந்தப் பகுதிக்குச் செல்லப் பயந்தான். அவனுடைய பயம் சொப்பனத்தில் தேவனால் உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே அவன் வடதிசையிலுள்ள கலிலேயா நாட்டின் புறங்களுக்கு பயணம் மேற்கொண்டு நாசரேத்தில் தங்கினான்.

தீர்க்கதரிசனம் நிறைவேறியுள்ளதாக இந்த அதிகாரத்தில் நான்காவது முறையாகத் மத்தேயு நினைவுறுத்தியுள்ளார். எந்தத் தீர்க்கதரிசியின் பெயரையும் இங்கே அவர் குறிப்பிடவில்லை. மேசியா நசரேயன் என்னப்படுவார் என்று தீர்க்கதரிசிகள் உரைத்தனர் என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில் எங்கும் நேரடியாகச் சொல்லப்படவில்லை. “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அதின் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்” என்னும் ஏசாயா 11:1- ஆம் வசனத்தையே மத்தேயு குறிப்பிடுகிறார் என்று பல வேத அறிஞர்கள் கூறுகின்றனர். நெட்சர் (netzer) என்னும் எபிரேயச் சொல்லே கிளை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நெட்சர், நசரேயன் என்னும் சொற்கள் ஒன்றோடொன்று அவ்வளவு தொடர்புடையவையாகத் தோன்றவில்லை. நாசரேத்தில் வாழும் மனிதர் கள் நசரேயன் என்று அழைக்கப்படுவதுண்டு.அந்த ஊரே மற்ற இடங்களில் வசிக்கும் மக்களால் இழிவாகக் கருதப்பட்டது. நத்தானியேல் இதனைப் பழமொழி போன்ற ஒரு கேள்வியாகக் கேட்கிறான், “நாசரேத்திலிருந்து யாதொருநன்மை உண்டாகக் கூடுமா?” எந்த “முக்கியத்துவமும்”இல்லாத அந்த ஊரின் மீது சுமத்தப்பட்டபழிச்சொற்கள், அங்கு வாழ்ந்த மனிதர்கள்மேலும் விழுந்தன. ஆகவே 23-ஆவது வசனத்தில் அவர் நசரேயன் என்னப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளதின் பொருள் யாதெனில், அவர் அவமரியாதையாய் நடத்தப்படுவார் என்பதேயாகும். நசரேயன் என்று இயேசு கிறிஸ்து அழைக்கப்படுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதாக எந்த வசனமும் கூறவில்லை. ஆயினும், “அவர் அசட்டை பண்ணப்பட்டவரும் மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும்” (ஏசா. 53:3) ஆவார் என்று சொல்லப்பட்டதை அறிவோம். அவர் ஒரு புழு, மனிதனல்ல; மனிதரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறார் என்று வேறொரு வசனம் கூறுகிறது (சங். 22:6). ஆகவே அதே சொற்களைத் தீர்க்கதரிசிகள் கூறவில்லையாயினும் பல தீர்க்கதரிசனங்களில் இந்தக் கருத்து நிலவுவதை மறுத்துரைக்க முடியாது. இந்த விளக்கம் பெரும்பாலும் சரியானதாகத் தோன்றுகிறது.

சர்வ வல்லமையுள்ள தேவன் இப்பூமிக்கு வந்தபோது, அவரை ஏளனப்படுத்தும் வகையில் நிந்தைக்குரிய பட்டப்பெயர் அவருக்குச் சூட்டப் பட்டது என்பது நமக்குப் பெரும் வியப்பளிக்கிறது. அவரைப் பின்பற்றுவோரும் அவருடைய நிந்தையில் பங்கு பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் (எபி.13:13).

மத்தேயு 1:1-25

விளக்கவுரை

1. மேசியா அரசரின் மூதாதையர் மரபு வரலாறும் அவரது பிறப்பும் (அதி.1)

அ. இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் மரபு வரலாறு (1:1-17)

புதிய ஏற்பாட்டை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், சலிப்படையச் செய்வதாகத் தோன்றும் ஒரு குடும்ப அட்டவணையுடன் ஏன் இந்த நூல் தொடங்குகிறது என வியப்படையக் கூடும். இந்தப் பெயர் அட்டவணையிலிருந்து ஏதொரு சிறப்பான குறிப்பையும் காண இயலாது என்று முடிவுசெய்யும் அவர், இப்பகுதியை விடுத்து நிகழ்ச்சிகளின் விவரங்கள் தொடங்கும் பகுதிக்குத் தாண்டிச் சென்றுவிடுவார்.

ஆனால், இந்தக் குடிவழி வரலாறு மிகவும் இன்றியமையாததாகும். தொடர்ந்து வருகிற அனைத்துச் செய்திகளுக்கும் இது ஆதாரமாக விளங்குகிறது. இயேசு கிறிஸ்து தாவீதின் அரசர் வம்சத்தில் பிறந்தவர் என்பதை அறிமுகப்படுத்தாவிடில், அவரே இஸ்ரவேலின் மேசியா – அரசர் என்னும் உண்மையை மெய்ப்பிக்க இயலாது. ஆகவே எங்கு தொடங்க வேண்டுமோ அங்கேயே மத்தேயு தனது நூலைச் சரியாகத் தொடங்கியிருக்கிறார். அதாவது தமது வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பின் வழியாக தாவீதின் அரியணைக்கு இயேசு கிறிஸ்துவே சட்டப்படி உரிமையாளர் என்பதற்கான சான்றுகளுடன் இந்நூல் தொடங்குகிறது.

இயேசு கிறிஸ்து சட்டபூர்வமாக இஸ்ரவேலின் அரசராவதற்கு உரிமைபெற்றவர் என்பதை மத்தேயு கூறும் குடிவழி வரலாறு புலப்படுத்துகிறது. அவர் தாவீதின் குமாரன் என்பதற்கான ஆதாரத்தை லூக்கா பயன்படுத்தியுள்ள குடிவழி அட்டவணை தெரிவிக்கிறது. தாவீதுக்குப் பின்னர் அரசனாக விளங்கிய அவனது குமாரனாகிய சாலொமோன் வழிவந்த அரச வம்சம் மத்தேயுவில் சொல்லப்பட்டுள்ளது. தாவீதின் மற்றொரு மகனாகிய நாத்தான் வழிவந்த உறவுவழி மரபை லூக்கா பின்பற்றியுள்ளார். இந்நூலில் காணும் வம்ச வரலாறு இயேசு கிறிஸ்துவைத் தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட யோசேப்போடு முடிவடைகிறது. ஆனால் லூக்கா நற்செய்தி நூல் மரியாளின் மூதாதையருடைய வம்ச வரலாற்றை எடுத்துரைக்கிறது. அந்த மரியாளிடம் பிறந்த குமாரனே இயேசு கிறிஸ்து ஆவார்.

ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தாவீதுடன் தேவன் நிபந்தனையற்ற ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி தாவீதுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும் அரசையும், தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் அரச வம்சத்தையும் தேவன் வாக்களித்தார் (சங்.89:4, 36,37). அந்த உடன்படிக்கையானது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. அவர் யோசேப்பின் மூலமாக தாவீதின் அரியணைக்குச் சட்டபூர்வமான வாரிசாக விளங்குகிறார். அதே நேரத்தில் அவர் என்றென்றும் உயிரோடிருப்பதால், அவரது அரசு என்றென்றும் நிலைநிற்கும். இஸ்ரவேலின் அரியணைக்கு உரிமை கொண்டாடுவதற்கான இரண்டு அடிப்படைக் காரணங்களான சட்டப்படியான மரபுரிமையையும், பிறப்பின்படியான மரபுரிமையையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டவராக இயேசு கிறிஸ்து விளங்குகிறார். இந்தத் தகுதிகள் வேறு எவருக்கும் இல்லை. மேலும் அவர் எப்போதும் உயிரோடிருப்பதால் இனி எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கொண்டாட முடியாது.

1:1-15 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” என்று இந்நூலில் கூறியிருக்கும்முறையானது “ஆதாமின் வம்சவரலாறு”என்று ஆதியாகமம் 5:1 -இல் கூறியிருப்பதற்கு ஒத்திருக்கிறது. ஆதியாகமம் முதலாம் ஆதாமை அறிமுகம் செய்கிறது. மத்தேயு நற்செய்தி நூல் கடைசி ஆதாமை அறிமுகம் செய்கிறது. முதலாம் ஆதாம் முந்தினதும் மாம்ச சம்பந்தமானதுமான படைப்பின் தலைவனாவான். கடைசி ஆதாமாகிய கிறிஸ்து புதியதும் ஆவிக்குரியதுமான படைப்பின் தலைவராவார்.

இந்த நற்செய்தியின் கருப்பொருளாக இயேசு1 கிறிஸ்துவே விளங்குகிறார். இயேசு என்னும் பெயர் அவர் கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறது. கிறிஸ்து என்னும் பெயர் (“அபிஷேகிக்கப்பட்டவர்”) அவரே நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இஸ்ரவேலின் மேசியா என்று காட்டுகிறது. தாவீதின் குமாரன் என்னும் பட்டம், பழைய ஏற்பாடு கூறும் மேசியா மற்றும் அரசர் ஆகிய பதவிகளோடு அவரைத் தொடர்புபடுத்திக் காட்டுகிறது. ஆபிரகாமின் குமாரன் என்னும் பட்டம், நம்முடைய கர்த்தரே, எபிரெய மக்களுக்கு அருளப்பட்ட வாக்குறுதிகளின் இறுதியான நிறைவேறுதலாக விளங்குகிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்த வம்சவரலாறானது, ஆபிரகாம் முதல் ஈசாய் வரை என்றும், தாவீது முதல் யோசியா வரை என்றும், எகொனியா முதல் யோசேப்பு வரை என்றும் மூன்று வரலாற்றுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது தாவீது வரை தொடர்கிறது. இரண்டாவது பகுதி அரசர்களின் வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. மூன்றாவது பகுதி கி.பி. 586-ஆம் ஆண்டு முதல் சிறையிருப்புக் காலத்தில் வாடிநந்த அரச வம்சத்தாரின் பெயர்களைப் பாதுகாத்து வைத்துள்ளது.

இந்தப் பெயர்ப்பட்டியலில் நமது ஆவலைத் தூண்டும் பல செய்திகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தப் பகுதியில் நான்கு பெண்டிரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தாமார், ராகாப், ரூத், (உரியாவின் மனைவியாயிருந்த) பத்சேபாள். கிழக்கத்திய மரபு வரலாற்றில் பெண்களின் பெயர்களைக் காண்பது அரிது. மேலும் இப்பெயர்ப் பட்டியலில் விலைமகளிரான தாமார், ராகாப் ஆகியோருடைய பெயர்களும், விபசாரம் செய்த பத்சேபாளின் பெயரும் இடம் பெற்றிருப்பதைக் காண்பது மிகுந்த வியப்பினைத் தருகிறது. பாவிகளுக்கு இரட்சிப்பையும், புற இனத்தவருக்குக் கிருபையையும் கிறிஸ்துவின் வருகைகொண்டுவருகிறது என்பதைக் கூறவும், அவருக்குள்ளாக இன வேறுபாடுகளும், ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகளும் நீக்கமடைகின்றன என்பதைக் கூறவும், இப்பெண்களின் பெயர்கள் மத்தேயுவின் முன்னுரையில் சாதுரியமாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன.

எகொனியா என்னும் அரசனுடைய பெயரும் இதில் இடம் பெற்றிருப்பது நமக்கு பேராவலை உண்டாக்குகிறது. இந்த மனிதனுக்கு எதிராக எரேமியா 22:30-இல் கர்த்தருடைய சாபம் கூறப்பட்டுள்ளது:

“இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக் குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போகிறதில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இயேசு கிறிஸ்து உண்மையாகவே யோசேப்பின் உண்மையான மகனாக இருந்திருப்பாரென்றால், அவர் இந்தச் சாபத்திற்கு உட்பட்டிருப்பார். ஆயினும் தாவீதின் அரியணையை தமது உரிமையாகப் பெறுவதற்கு அவர் யோசேப்பின் சட்டப்பூர்வமான மகனாக இருக்க வேண்டும். அற்புதமான கன்னிப்பிறப்பினால் அந்தச் சிக்கல் நீங்கிப்போயிற்று. மேலும் மரியாளின் வழியாக அவர் தாவீதின் உண்மையான மகனுமாவார். மரியாளும் அவளுடைய பிள்ளைகளும் எகொனியாவின் குடிவழியில் வந்தவர்கள் அல்லர்; ஆகவே அவன் மீது சுமத்தப்பட்ட சாபத்திற்கு அவர்கள் நீங்கலாகி இருக்கின்றனர்.

1:16 அவளிடத்தில் என்று தமிழ் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் மூலமொழியாகிய கிரேக்கில் சொல்லப்பட்டுள்ளது போலவே ஒருமையிலும் பெண்பாலிலும் நேர்த்தியாகக் காணப்பட்டு, இயேசு மரியாளினிடத்தில் பிறந்தார் என்பதையும், யோசேப்புக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை என்பதையும் தெரிவிக்கிறது. இத்தகைய சுவைமிக்க பல செய்திகள் இந்தக் குடிவழி வரலாற்றுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதோடு, சில சிக்கல்களும் உள்ளன என்பதை நாம் குறிப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

1:17 இந்த குடிவழிவரலாறு பதினான்கு தலைமுறைகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்தேயு நூல் நமது கவனத்தை ஈர்க்கிறது. ஆயினும் இந்தப் பட்டியலில் சில பெயர்கள் விடுபட்டுள்ளன என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம். எடுத்துக்காட்டாக, யோராம் உசியா (வச.8) ஆகிய அரசர்களுக்கிடையே அகசியா, யோவாஸ், அமத்சியா ஆகியோர் அரசாண்டனர் (2இரா.8-14; 2 நாளா 21-25 ஆகிய பகுதிகளைக் காண்க).

மேலும், மத்தேயு, லூக்கா ஆகியோருடைய வம்ச வரலாறுகள் இரண்டிலும் சலாத்தியேல், செருபாபேல் ஆகிய பெயர்களைக் காண்கிறோம்  (மத். 1:12,13; லூக். 3:27). யோசேப்பு, மரியாள் ஆகிய இருவருடைய மூதாதையர் பட்டியல்கள் இந்த இரண்டு மனிதர்களுடைய பெயர்களில் இணைந்து பின்னர் மீண்டும் பிரிவது விநோதமாயிருக்கிறது. மேலும் இரண்டு நற்செய்தி நூல்களும் எஸ்றா 3:2-இல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பின்பற்றி சலாத்தியேலின் குமாரன் செருபாபேல் என்று குறிப்பிடுவது சிக்கலை அதிகப்படுத்துகிறது. ஆனால் 1 நாளா. 3:19 – இல் அவன் பெதாயாவின் குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது சிக்கல் யாதெனில், தாவீது முதல் இயேசு கிறிஸ்துவரை இருபத்தேழு தலைமுறைகள் என மத்தேயுவும், நாற்பத்திரண்டு என்று லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருவரும் வெவ்வேறு குடும்ப வழிமரபை எடுத்துரைத்தாலும், தலைமுறை எண்ணிக்கையில் இத்தனை பெரிய வேறுபாடு காணப்படுவது விந்தையாகவே தோன்றுகிறது.

இந்தச் சிக்கல்களையும், முரண்பாடாகத் தோன்றும் குறிப்புகளையும் வேத மாணாக்கன் எந்த மனப்பான்மையோடு அணுக வேண்டும்? முதலாவது, தேவ வார்த்தையானது தேவ ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத அடிப்படை உண்மையாகும். ஆகவே வேதத்தில் ஏதொரு தவறும் இருக்காது. இரண்டாவது, வேதம் எல்லைகட்கு அப்பாற்பட்டது, இது தேவனுடைய எல்லையற்ற தன்மையை பிரதி பலிக்கும் தன்மையுடையது. வேதத்தின் அடிப்படை உண்மைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியுமே ஒழிய, அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்துக் கூறுகளையும் முற்றுமுடிய நம்மால் அறிந்துகொள்ளமுடியாது.

ஆகவே இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்கும் நாம், இவற்றிற்கான காரணம் நமது அறியாமையேயொழிய வேதவசனங்களில் எவ்விதத் தவறும் இல்லை என்பதை உணர வேண்டும். வேதாகமத்தில் எழுகின்ற கேள்விகள், நாம் வேதத்தை ஆடிநந்து படிக்க வேண்டுமென்றும் ஆராய்ந்து பார்த்து விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் நமக்கு அறைகூவல்களாகத் திகடிநகின்றன. “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை” (நீதி.25:2).

வரலாற்று அறிஞர்களின் கவனமிக்க ஆராய்ச்சிகளினாலோ, அகழ்வாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளினாலோ திருமறையில் உரைக்கப்பட்டுள்ள எந்தவொரு கூற்றையும் பொய்யென மெய்ப்பித்துக்காட்ட இயலவில்லை. நமக்குப் பிரச்சினைகளாகவும் முரண்பாடுகளாகவும் தோன்றுபவை யாவற்றிற்கும் ஆவிக்குரிய முக்கியத்துவமும், நன்மை பயக்கத்தக்கவையுமான அறிவார்ந்த விளக்கங்களும் உள்ளன.

ஆ. மரியாளின் மகனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து (1:18-25)

1:18 வம்ச வரலாற்றில் காணும் எல்லா மூதாதையரின் பிறப்புகளினின்றும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வேறுபட்டதாகும். அந்தப் பட்டியலில் “அ என்பவன் ஆ-வைப் பெற்றான்” என்னும் முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் மனிதத் தகப்பனின்றி ஒரு பிறப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கருத்தரிப்பைக் குறித்த உண்மைகள் மிகுந்த மதிப்போடும் எளிமையோடும் விவரிக்கப்பட்டுள்ளன.

மரியாள் யோசேப்புக்குத் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள். ஆயினும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் தொடக்ககாலங்களில் திருமண நிச்சயம், உடன்பாடாகக் கருதப்பட்டது. இந்த நாட்களில் நடைபெறும் திருமண ஒப்பந்தங்களைக்காட்டிலும் அது அதிக உறுதியானது. அந்த உடன்பாடானது விவாகரத்தினால் மட்டுமே முறிக்கப்படக் கூடியதாக இருந்தது. அவ்விதமாகத் திருமண நிச்சயம் செய்யப்பட்ட தம்பதிகள் திருமணம் நடைபெறும்வரை கூடி வாழ்வதில்லை. எனினும் அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உண்மையற்ற முறையில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டால் அது விபசாரம் என்று கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்.

திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்த கன்னிமரியாள் பரிசுத்த ஆவியினால் அற்புதமான முறையில் கருத்தரித்தாள். முன்னதாகவே இந்த அதிசயமான நிகழ்வைக் குறித்து ஒரு தேவதூதன் அவளிடத்தில் கூறியிருந்தான்: “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்” (லூக்.1:35). இப்பொழுது மரியாளின் நடத்தையில் ஐயங்கள் எழக்கூடிய சூழ்நிலை உண்டாயிற்று, மக்கள் பழிச்சொற்களால் தூற்றுவார்கள். மனித வரலாற்றில் இதுவரை ஒரு கன்னி பிள்ளை பெற்றதில்லையே! திருமணமாகாத பெண்ணொருத்தி கருத்தரித்திருப்பதைக் காணும் மக்கள் ஒரே ஒரு விளக்கத்தைத்தான் தரமுன்வருவார்கள்.

1:19 மரியாள் அடைந்த இந்நிலைக்கு உண்மையான காரணத்தை யோசேப்பும்கூட இன்னும் அறியவில்லை. தன்னுடைய வருங்கால மனைவியின்மீது அவன் கடுங்கோபம்கொள்ள இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று, அவனுக்கு அவள் உண்மையற்றவளாக நடந்து கொண்டாள் என்று தோன்றியது. இரண்டாவது, அவன் ஒரு குற்றமும் செய்யாதவனாயிருந்தும், குற்றம் புரிவதற்கு உடந்தையாயிருந்தான் என்ற குற்றச்சாட்டு எழவாய்ப்புண்டானது. மரியாள் மீது அவன் கொண்டிருந்த அன்பினாலும், நீதி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தினாலும், அவன் அவளுடன் செய்திருந்த திருமண நிச்சயத்தை, விவாகரத்தின் மூலம் இரகசியமாய் முறிக்க நினைத்தான். அவ்வாறு செய்வதனால் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அவமானத்தை அவன் தவிர்க்கக் கூடும்.

1:20 பெருந்தன்மையுள்ளவனும் சிந்தித்துச் செயல்புரிபவனுமாகிய யோசேப்பு மரியாளை எவ்வாறு பாதுகாப்பது என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டான். “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே” என்று அத்தூதன் வாழ்த்துதல் கூறி அழைத்தான். அவ்வழைப்பு யோசேப்பின் அரச வம்சத்தை அவனுக்கு நிச்சயமாய் நினைவூட்டியிருக்கும். மேலும் அவ்வழைப்பு மேசியாவாகிய இஸ்ரவேலின் அரசர் அற்புதமான முறையில் தோன்றவிருப்பதை அறிந்து ஏற்றிட அவனுடைய உள்ளத்தை ஆயத்தம் செய்தது. மரியாளைத் திருமணம் செய்வதற்கு அவன் அஞ்சவேண்டிய தேவையில்லை. அவளுடைய தூய்மையைக் குறித்த சந்தேகங்கள் ஆதாரமற்றவை. அவள் கர்ப்பந்தரித்திருப்பதோ தூய ஆவியானவரின் அற்புதச் செயலாகும்.

1:21 பின்னர், பிறக்கப்போகும் குழந்தையின் பால், பெயர், பணி ஆகியவற்றை அத்தூதன் விவரித்துக் கூறினான். மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடவேண்டும் (யெகோவா இரட்சிப்பாக இருக்கிறார் அல்லது யெகோவா இரட்சகராக இருக்கிறார் என்பதே அப்பெயரின் பொருளாகும்). அவருடைய பெயருக்கு ஏற்றபடி அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். இவ்வாறு முன்னுரைக்கப்பட்ட குழந்தை கர்த்தரே ஆவார். அவரே மனிதர்களை அவர்களுடைய பாவத்தின் தண்டனையிலிருந்தும், பாவத்தின் வல்லமையிலிருந்தும், இறுதியில் பாவத்தின் சமுகத்திலிருந்தும் விடுவித்துக் காக்க இப் புவிக்கு வருகை தருகிறார்.

1:22 இந்த நிகழ்ச்சிகளை மத்தேயு பதிவு செய்தபோது, மனித இனத்துடன் தேவன் கொண்டிருந்த செயல்பாட்டின் வரலாற்றில் புதிய தொரு காலகட்டம் மலர்ந்துவிட்டது என்பதை அவரால் உணரமுடிந்தது. நீண்டகாலமாகச் செயலிழந்து கிடந்த, மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனச் சொற்கள், இப்பொழுதோ உயிர்பெற்று எழுந்துவிட்டன. ஏசாயாவின் மறைபொருளான தீர்க்கதரிசனம் மரியாளின் குழந்தையில் நிறைவடைந்தது: “தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.” கிறிஸ்து பிறப்பதற்குக் குறைந்தது 700 -ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயாவால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் தேவ ஆவியின் வெளிப்பாடென்று இங்கே மத்தேயு வலியுறுத்திக் கூறுகிறார்.

1:23 ஏசாயா 7:14-இல் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தில், ஒரு தனித்தன்மை வாய்ந்த பிறப்பு (“இதோ கன்னிகை கர்ப்பவதியாகி”), குழந்தையின் பாலினம் (“ஒரு குமாரனைப் பெறுவாள்”), குழந்தையின் பெயர் (“அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”) ஆகியவை இடம் பெற்றிருந்தன. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்பது பொருளாகும் என்று மத்தேயு விளக்கத்தைச் சேர்த்துச் சொல்லுகிறார். கிறிஸ்து இவ்வுலகில் இருந்தபோது “இம்மானுவேல்” என்று அழைக்கப்பட்டதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. எப்போதும் அவர் “இயேசு” என்றே அழைக்கப்பட்டார். ஆயினும் இயேசு என்னும் பெயரின் பொருளில்  (வச.21), தேவன் நம்மோடிருக்கிறார் என்னும் உண்மை உள்ளடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவருக்கு வழங்கப்படும் பதவிப் பெயராக இம்மானுவேல் என்னும் பெயர் விளங்கும்.

1:24 தேவதூதனின் தலையீட்டின் விளைவாக, யோசேப்பு மரியாளை விவாகரத்து செய்யவேண்டும் என்று தான் முன்பு தீர்மானித்திருந்த திட்டத்தைக் கைவிட்டான். இயேசு பிறக்கும்வரை அவர்களுக்கிடையே இருந்த உறவு, நிச்சயம் செடீநுதிருந்த நிலையிலேயே நீடித்தது. அதற்குப் பின்பு அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

1:25 இந்த வசனத்தின் முடிவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், மரியாள் தன் வாழ்நாட்களெல்லாம் கன்னியாகவே இருந்தாள் என்னும் போதனை தவறானது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. யோசப்பின் மூலமாக மரியாள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் என்பதைக் குறிப்பிடும் மற்ற வசனங்களாவன: மத்தேயு 12:46; 13:55,56; மாற்கு 6:3; யோவான் 7:3,5; அப். நடபடிகள் 1:14; 1 கொரிந்தியர் 9:5; கலாத்தியர் 1:19 ஆகியவையே.

மரியாளைத் தனது துணைவியாக யோசேப்பு ஏற்றுக்கொண்டதின் நிமித்தம், அக்குழந்தையைத் தனது வளர்ப்பு மகனாகவும் அவன் ஏற்றுக்கொண்டான். இவ்வாறுதானே இயேசு தாவீதின் அரியணைக்குச் சட்டப்பூர்மான உரிமையாளராக மாறினார். தேவதூதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, குழந்தைக்கு இயேசு என்று யோசேப்பு பெயரிட்டான்.

இவ்வாறு மேசியா-அரசர் பிறந்தார். நித்தியமானவர் கால எல்லைக்குள் காலடி எடுத்துவைத்தார். சர்வ வல்லவர் சிறு பாலகனாக மாறினார். மகிமையின் கர்த்தர், மனித உடல்கொண்டு அந்த மகிமையை மறைத்துக்கொண்டார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ. 2:9).

மத்தேயு எழுதின சுவிசேஷம் – முன்னுரை

மத்தேயு எழுதின சுவிசேஷம்

முன்னுரை

“உன்னதமான கருத்துக்களுக்கு, வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரளான செய்திகளைத் துணையாக்கி, அவற்றை தகைசிறந்த வகையில் உருவாக்கித் தருவதிலும் ஆற்றல் மிக்க வகையில் எடுத்தியம்புவதிலும் மத்தேயு நற்செய்தி நூல் இரு ஏற்பாடுகளிலும் தன்னிகரற்று விளங்குகிறது” – தியோடர் ஸ்ஜான்.

1. வேத நூல் வரிசையில் தனிச்சிறப்பு மிக்க இடம்

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் ஏற்றதொரு பாலமாக மத்தேயு நற்செய்தி நூல் திகழ்கிறது. பழைய ஏற்பாட்டு இறைமக்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமையும், இஸ்ரவேலின் முதலாவது சிறப்புவாய்ந்த அரசனாகிய தாவீதையும் நோக்கி இந்நூலின் முதற்சொற்கள் நம்மை பின்னோக்கிப் பார்க்கச் செய்கின்றன. இதன் சொல்வன்மை யூத மணம் கமழுகிறதாயிருக்கிறது; பற்பல எபிரெய வேதாகம மேற்கோள்கள் இதில் இடம்பெற்றுள்ளன; மேலும் இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இவையாவும் கிறிஸ்தவ நற்செய்தியினை உலகிற்கு வழங்குவதற்குத் தகுதியான முதலிடத்தை இந்நூலுக்கு வழங்குகின்றன. நான்கு நற்செய்தி நூல் வரிசையில், மத்தேயு வெகுகாலமாக முதலிடத்தை வகித்து வருகின்றது. ஏனெனில் இதுவே முதன்முதலாக எழுதப்பட்ட நற்செய்தி நூல் என்று உலகளாவிய கருத்து சமீபகாலம் வரை நம்பப்பட்டு வந்தது. மேலும், தெளிவாகவும் முறையாகவும் மத்தேயு நற்செய்தி நூல் சபைக் கூட்டங்களில் படிப்பதற்கு ஏற்ற நடையில் திகழ்கின்றது. மேலும் யோவான் நற்செய்தி நூலுடன் அவ்விடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இது போட்டியிடுகிறது எனவும் கூறலாம்.

இதுவே முதலில் இயற்றப்பட்ட நற்செய்திநூல் என்னும் பாரம்பரிய நம்பிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆயினும், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் பெரும்பாலோர் யூத மதப் பின்னணி உடையவராயிருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அந்தப் பின்னணியை உடையவராக இருந்த காரணத்தினால், அவர்களுடைய தேவைகளை முதலாவது நிறைவுசெய்வது சாலவும் பொருத்தமானதாகும்.

2. நூலாசிரியர்

இந்த முதல் நற்செய்தி நூலை ஆயக்காரராகப் பணிபுரிந்தவரும், லேவி என்னும் மறுபெயர் கொண்டவருமாகிய மத்தேயு என்பவரே எழுதினார் என்பதற்குப் பண்டைக் காலந்தொட்டே உலகளாவிய புறச்சான்றுகள் விளங்கி வருகின்றன. இவர் இந்நூலை எழுதியிராவிடில், அப்போஸ்தலர்களுக்குள் நன்கு அறியப்படாதவராக இருந்த இவரை இதன் ஆசிரியர் என்று கூறுவது பொருத்தமற்ற கூற்றாக இருந்திருக்கும்.

பன்னிரு அப்போஸ்தலரின் போதனையாகிய “டைடாகே” (னுனையஉhந) என்னும் பழமைவாய்ந்த நூல் மட்டுமின்றி, ஜஸ்டின் மார்டியர், கொரிந்து நகர டயோனிசியஸ், அந்தியோகியாவின் தியோபிலஸ், அத்தேனே பட்டணத்து அத்தேனே கோரஸ் ஆகியோர் இந்நூலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினர். “மத்தேயு தனது ‘தெய்வீகச் சொற்களை’ (டுடிபயை) எபிரெய மொழியில் தொகுத்து எழுதினார். அதற்கு ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்கேற்ப விளக்கம் அளித்தனர்” என்று பாப்பியாஸ் கூறியிருப்பதாக, சபைவரலாற்றாசிரியர் யூசிபியஸ் குறிப்பிட்டுள்ளார். ஐரேனியஸ், பாந்தேனஸ், ஓரிகன் ஆகியோரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தனர். நம்முடைய கர்த்தர் இப்புவியில் இருந்த காலத்தில் வாழ்ந்த எபிரெய மக்கள் பயன்படுத்திய அராமிய மொழியையே எபிரெய மொழி என்று யாவரும் கருதிவந்தனர். அப்படியானனால் டுடிபயை என்னும் தெடீநுவீகச் சொற்கள் என்பன எவை? இந்தக் கிரேக்கச் சொல் பொதுவாக “தெய்வீக மொழிகள்” என்றே பொருள்படும். பழைய ஏற்பாடு இவ்வாறு தேவனுடைய சொற்களை உடையதாக இருக்கின்றது. பாப்பியாசின் சொற்கள் இவ்விதப்பொருளோடு எழுதப்படவில்லை. அவருடையசொற்களை மூன்று விதங்களில் பொருள்கொள்ளலாம்: (1) அச்சொல் மத்தேயு எழுதிய நற்செய்தி நூலைக் குறிக்கும் சொல் எனப் பொருள்படும். யூதர்களைக் கிறிஸ்துவுக்காக வென்றிடும் பொருட்டு மத்தேயு தனது நற்செய்தித் தொகுப்பை அராமிய மொழியில் எழுதினார். யூதக் கிறிஸ்தவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கமும் அவருக்கு இருந்தது எனலாம். சிறிது காலத்திற்குப் பின்னரே அதன் கிரேக்க மொழியாக்கம் செய்யப்பட்டது. (2) அச்சொல் இயேசுவின் திருமொழிகளை மட்டும் குறிக்கிறது எனப் பொருள்படும். அவை பின்னர் மத்தேயுவின் நற்செய்தி நூலில் இடம் பெற்றன. (3) அச்சொல் சான்றாதாரங்களான மேற்கோள்களைக் குறிக்கும் எனப் பொருள்படும். அதாவது பழைய ஏற்பாட்டு வசனங்கள் இயேசுவே மேசியா என்று விளக்கிக் காட்டும் வண்ணம் இந்த நற்செய்தி நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

மேற்கூறியவற்றில் மூன்றாவது கருத்தைவிட முதலிரண்டு கருத்துகளும் ஏற்புடையவையாகத் தோன்றுகின்றன.

கிரேக்க மொழியில் காணப்படும் மத்தேயு நற்செய்தி நூல், வெறுமனே மொழிபெயர்ப்புபோலத் தோன்றவில்லை. ஆனாலும், மேற்கூறிய பாரம்பரியக் கருத்தை, எவரும் எதிர்க்காத நிலையில் உண்மையற்றது என்று சொல்லிவிடமுடியாது. பதினைந்து ஆண்டுகள் மத்தேயு பாலஸ்தீன நாட்டில் நற்செய்தியை அறிவித்து, பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்றதாகப் பண்டைக் காலம்தொட்டு நம்பப்பட்டு வருகிறது. இயேசுவை தங்களுடைய மேசியாவாக ஏற்றுக்கொண்ட யூதர்களுக்காக தனது நற்செய்தி நூலை ஏறத்தாழ கி. பி. 45 -ஆம் ஆண்டில் அவர் அராமிய மொழியில் எழுதிவைத்துவிட்டு, பின்னர் அவரே அனைத்துலக மக்களுக்காக கிரேக்க மொழியில் எழுதினார் எனக் கருதுவதற்கு இடமுண்டு. (ஒருவேளை கிறிஸ்துவின் பிரசங்கங்களை மட்டும் அவர் அராமிய மொழியில் எழுதியிருக்கவும் கூடும்.) அதுபோன்றே அந்நாட்களில் வாழ்ந்த ஜோஸபஸ் என்பாரும் செய்தார். யூதப் போர்களைக் குறித்து அவர் முதற்படியை அராமிய மொழியில் எழுதினார். பின்னர் முதற்படியை ஆதாரமாகக்கொண்டு அந்த வரலாற்றாசிரியர் தனது நூலை கிரேக்க மொழியில் இயற்றினார்.

இந்நூலாசிரியர் பழைய ஏற்பாட்டின் மீது அளவு கடந்த பற்றுடையவரும் தேவபக்தி நிரம்பியவருமான யூதர் என்பதை இந்நூலின் அகச்சான்றுகள் எடுத்தியம்புகின்றன. அவர் வரம்பெற்ற எழுத்தாளராகவும், மிகக் கவனத்தோடு உண்மைகளைத் தொகுத்துரைப்பவராகவும் விளங்கினார். ரோம அரசுப் பணியாளராக விளங்கிய அவர், தமது மக்களுடைய மொழியாகிய அராமியாவிலும், ஆட்சிபுரிவோரின் மொழியாகிய கிரேக்கிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். (தங்களுடைய ஆட்சியின்கீழ் இருந்த கீழை நாடுகளில் ரோமர்கள் இலத்தீன் மொழியைப் பயன்படுத்தவில்லை.) எண்ணிக்கை விவரங்கள், பணத்தோடு தொடர்புடைய உவமைகள், பணத்தோடு தொடர்புடைய சொற்றொடர்கள் இவை யாவும் இந்நூலின் எழுத்தாளர் வரிவசூலிக்கும் தொழிலைச் செய்தவர் என்பதற்குச் சான்றாய் விளங்குகின்றன. அதுபோலவே சுருக்கமாகவும், வரிசைப்படுத்தி முறையாகவும் எழுதப்பட்ட நடை அவ்வுண்மைக்கு உறுதி தருகின்றன. பழைமைக் கொள்கைகளைப் பின்பற்றாத வேத அறிஞர் குட்ஸ்பீட் என்பார் இந்நூல் மத்தேயுவினால் எழுதப்பட்டது என்னும் உண்மையை, அகச்சான்றுகளின் அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு உலகளாவிய புறச்சான்றுகளும், சாதகமான அகச்சான்றுகளும் மத்தேயு இந் நூலை இயற்றியவர் என்பதை வலியுறுத்திய போதும், பழைமைக் கொள்கையைப் பின்பற்றாத  அறிஞர்கள் பலர் ஆயக்காரராகிய மத்தேயு இந் நூலை இயற்றியிருக்க முடியாது என்று கூறுகின்றனர். இரண்டு காரணங்களின் அடிப்படையில் அவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

முதலாவது, மாற்கு நற்செய்தி நூலே முதலில் எழுதப்பட்டது என்று அவர்கள் கருதுகின்றனர். (அந்நூல் “சுவிசேஷ சத்தியம்” என்று பல குழுக்களால் போதிக்கப்பட்டு வருகிறது.) அவ்வாறு இருக்கும்போது, அப்போஸ்தலராகவும், நிகடிநச்சிகளைக் கண்களால் கண்ட சாட்சியாகவும் விளங்கிய மத்தேயு, மாற்கு நற்செய்தி நூலிலிருந்து பெரும்பான்மையான பகுதிகளை எவ்வாறு எடுத்தாண்டிருப்பார் என்பதே அவர்கள் எழுப்பும் கேள்வி. (மாற்கு நற்செய்தி நூலில் 93 சதவீதம் மற்ற நற்செய்தி நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.) மாற்கு நற்செய்தி நூல்தான் முதன்முதலில் எழுதப்பட்டது என்று மெய்ப்பிக்கப்படவில்லை. மத்தேயு நூல்தான் முதன்முதலில் எழுதப்பட்டது என்று பழங்காலச் சான்றுகள் கூறுகின்றன. யூதர்களே முதலில் கிறிஸ்தவக் கோட்பாடுகளைப் பின்பற்றினர். இதன் காரணத்தால் மத்தேயு முதலில் எழுதப்பட்ட நூல் என்பது பொருத்தமான கூற்றாகும். மாற்கு நற்செய்தி நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும் (பழைமைக் கொள்கை சார்ந்த வேத அறிஞர் பலரும் அவ்வாறு கருதுகின்றனர்), செயல் திறம் மிக்க பேதுரு அப்போஸ்தலரின் முந்தைய அனுபவங்களின் இலக்கிய வடிவமே பெரும்பாலும் மாற்கு நற்செய்தி நூலாக வெளிப்பட்டது என்னும் பாரம்பரியக் கருத்தை உடன் அப்போஸ்தலராகிய மத்தேயு ஏற்றுக்கொண்டார் எனக் கூறலாம். (மாற்கு நற்செய்தி நூலின் முன்னுரையைக் காண்க).

மத்தேயுவினால் (அல்லது வேறொரு நேரடிச் சாட்சியினால்) இந்நூல் எழுதப்படவில்லை என்பதற்கான, அவர்கள் கூறும் இரண்டாவது காரணம், தெளிவான விவரங்கள் இந்நூலில் இடம்பெறவில்லை என்பதேயாகும். இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை மாற்கு நேரடியாகக் கண்டார் என்று ஒருவரும் கூறுவதில்லை. ஆயினும் அவர் அங்கு இருந்தார் என்று தோன்றத்தக்கதாக, நிகடிநச்சிகளை அழகுற மொழிந்துள்ளார். அப்படியிருக்க நிகடிநச்சிகளைப் பற்றி எழுதினால் போதும் என்னும் சுருக்கமான முறையில் ஒரு நேரடிச்சாட்சி எழுத எவ்வாறு மனம்வரும்? ஒருவேளை ஆயக்காரரின் குணமே அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அது பொருத்தமுடைய விளக்கமாகவும் தோன்றுகிறது. கர்த்தருடைய சொற்பொழிவுகளுக்கு மிகுதியான இடமளிக்கும் பொருட்டு, தேவையற்ற விவரங்களை விலக்கி லேவி எழுதியிருக்கக் கூடும். மாற்கு நூல் முதலில் எழுதப்பட்டது என்பதும், பேதுருவின் முந்தைய அனுபவங்களின் இலக்கிய வடிவமே அது என்பதும் உண்மையாயின் இவ்விளக்கம் மத்தேயுவே இந்நூலாசிரியர் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

3. எழுதப்பட்ட காலம்

பொதுவான நம்பிக்கைக்கேற்ப, மத்தேயு நூல் முழுமையாகவோ, இயேசு கிறிஸ்து வாய் மலர்ந்து பேசிய சொற்கள் மட்டுமோ அராமிய மொழியில் முதலில் எழுதப்பட்டிருக்குமாகில், கிறிஸ்து விண்ணுலகிற்குச் சென்று ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது கி.பி. 45 -இல் மத்தேயு இதனை எழுதியிருக்கவேண்டும். இவ்வாறே பாரம்பரியமாக நம்பப்பட்டும் வருகிறது. பின்னர் கி.பி 50 அல்லது கி. பி. 55 அல்லது அதற்கும் பிறகு கிரேக்க மொழியில் மத்தேயு தமது நற்செய்தி நூலை வெளியிட்டிருப்பார் என்று கருத இடமுண்டு.

எருசலேம் அழிக்கப்பட்ட கி. பி. 70 –க்குப் பிறகே இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்னும் எண்ணம், பின்னர் நடக்கவிருக்கிற நிகழ்சியை இவ்வளவு விரிவாக இயேசு கிறிஸ்துவினால் உரைத்திருக்க முடியாது என்றுரைக்கும் நம்பிக்கையற்ற மனிதர்கள் மற்றும் தேவ ஆவியானவரின் ஏவுதலால் மறைநூல் எழுதப்பட்டதுஎன்பதை மறுத்துரைக்கும் மனிதர்களின் கருத்தாகும்.

4. நூலின் பின்னணியும் கருப்பொருளும்

இயேசு அழைத்தபோது, மத்தேயு ஓர் இளைஞனாக இருந்தார். பிறப்பின்படி யூதராகவும், பயிற்சியாலும் பழக்கத்தாலும் வரிவசூலிப்பவராகவும் இருந்தவர், கிறிஸ்துவைப் பின்பற்றும்பொருட்டு யாவற்றையும் துறந்தார். அதனிமித்தம் அவர் பெற்ற நன்மைகளில் ஒன்று பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவர் என்னும் மேன்மையாகும். நற்செய்தி நூல்களில் முதல் நூல் என்று நாம் அறிந்திருக்கிற இந்நூலை இயற்றும் வாய்ப்பு பிரிதொரு சிறப்பாகும். மத்தேயு என்பாரும் லேவியும் ஒருவரே என்று பொதுவாக நம்பப்படுகிறது (மாற்கு2:14; லூக்கா 5:27).

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரவேலின் மேசியாவும், தாவீதின் அரியணைக்குச் சட்டப்படியான ஒரே உரிமையாளரும் இயேசுவே என மெய்ப்பிப்பதை மத்தேயு தனது நற்செய்தி நூலின் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் கூறியிருப்பதாக இந்நூல் உரிமை பாராட்டவில்லை. அவருடைய வம்சவரலாற்றில் தொடங்கும் இந்நூல் குழந்தைப் பருவத்தைத் தொட்டுவிட்டு, வெளியரங்கமான ஊழியத்தின் தொடக்கத்திற்குத் தாவுகிறது. அப்பொழுது இயேசுவுக்கு வயது முப்பது. அவர் தேவனுடைய அபிஷேகத்தைப் பெற்றவர் (அதுவே மேசியா, கிறிஸ்து என்னும் சொற்களின் பொருள்) என்பதை மெய்ப்பிக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் ஊழியச் சம்பவங்களையும் மட்டுமே ஆவியானவர் நடத்தியபடி தெரிந்தெடுத்து மத்தேயு இந்நூலில் தொடர்ந்து விளக்கிக் கூறியுள்ளார். பின்னர் வாழ்க்கை வரலாற்றின் உச்சகட்டத்திற்கு இந்நூல் சென்றுவிடுகிறது: கர்த்தர் விசாரிக்கப்படுதல், மரணமடைதல், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல், விண்ணுலகு ஏகுதல். இந்த இறுதிப்பகுதியில் மனிதனுடைய இரட்சிப்புக்கான ஆதாரம் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்னமுறையில் பாவியான மனிதன் இரட்சிப்பைப் பெறுகிறான் என்று அதனை வகைப்படுத்தி இந்நூல் கூறாவிடினும், கிறிஸ்துவின் பலிமரணத்தை விளக்கிக் கூறி இரட்சிப்புக்கான வாய்ப்பை வெளிப்படுத்தி இது நிற்கிறது. எனவேதான் இந் நூல் நற்செய்தி நூல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை, எல்லா விளக்கங்களையும் அளிக்கும் பொருட்டோ, நுட்பமாய் வரையறுத்துத் தரும் நோக்கத்துடனோ எழுதப்படவில்லை. மாறாக, ஒருவர் தனிப்பட்ட முறையில் வேதத்தை ஆராய்ந்து தியானிக்கத் தூண்டும் கருவியாகச் செயல்படுவதே இதன் நோக்கமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, படிப்போரின் உள்ளம் அரசரின் வருகையை எதிர்நோக்கி ஏக்கங்கொள்ளச் செய்வதே இவ்விளக்கவுரையின் நோக்கமாகும்.

 வருவேன் எனும்வாக்கு என்நெஞ்சைச்

சிலிர்க்கச் செய்யுதே

காண்பேன் எனும்நினைவு என்மனதை

மகிழப் பண்ணுதே

என்நேசர் வரும்நேரம் எந்நேரம்

என்னுள்ளம் ஏங்குதே

அவர்பாதம் ஒளிவீச வரும்வேகம்

கண்காண மயங்குதே!

– புனித பவுல் என்னும் நூலிலிருந்து F.W.H. மேயர் என்பாரின் பாடலைத் தழுவியது

 பொருட்சுருக்கம்

 1. மேசியா அரசரின் மூதாதையர் மரபு வரலாறும் அவரது பிறப்பும் (அதி.1)
 2. மேசியா அரசரின் இளமைக் காலம் (அதி. 2)
 3. மேசியாவின் ஊழியங்களுக்கான ஆயத்தமும், தொடக்கமும் (அதி. 3,4).
 4. இராஜ்யத்தின் அரசியல் அமைப்பு (அதி.5-7)
 5. மேசியா நிகழ்த்திய வல்லமையும் கிருபை நிறைந்த அற்புதங்களும்,  அவற்றால் விளைந்த பல்வகை எதிர்ச்செயல்களும் (8:1-9:34)
 6. மேசியா – அரசரின் திருத்தூதுவர் இஸ்ரவேலுக்கு அனுப்பப்படுதல் (9:35-10:42)
 7. எதிர்ப்பும் மறுப்பும் பெருகுதல் (அதி. 11,12)
 8. இஸ்ரவேல் புறக்கணித்ததன் காரணமாக இடைக்கால அரசு முறைமையை அரசர் அறிவித்தல் (அதி. 13)
 9. மேசியாவின் இடையறாத கிருபை கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளுதல் (14:1-16:12)
 10. அரசர் தமது சீடரை ஆயத்தப்படுத்துதல் (16:13-17:27)
 11. சீடர்களுக்கு அரசர் அறிவுரை வழங்குதல் (அதி. 18-20)
 12. அரசராக அறிமுகப்படுத்துதலும், புறக்கணிக்கப்படுதலும் (அதி. 21-23)
 13. அரசரின் ஒலிவமலைச் சொற்பொழிவு (அதி. 24,25)
 14. அரசின் பாடுகளும் மரணமும் (அதி. 26, 27)
 15. அரசரின் வெற்றி (அதி. 28)

williammac1

விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை – நற்செய்தி நூல்களுக்கு அறிமுகம்

நற்செய்தி நூல்களுக்கு அறிமுகம்

“எல்லா எழுத்தோவியங்களிலும் நற்செய்திகள் முதற்கனியாகத் திகழ்கின்றன” – ஆரிகன்

1.மாட்சிமிக்க நற்செய்தி நூல்கள்

இலக்கியம் கற்றறிந்த ஒருவர் கதை, புனை கதை, நாடகம், கவிதை, வாழ்க்கை வரலாறு மற்றும் பல இலக்கிய வடிவங்களை நன்கு அறிந்திருப்பார். ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வருகைபுரிந்தபோது, முற்றிலும் புதியதொரு இலக்கியம் தேவைப்பட்டது. அதுவே நற்செய்தி இலக்கியமாகும். நற்செய்தி நூல்களில் கருத்துமிக்க வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியுள்ள போதிலும் அவை வாழ்க்கை வரலாற்று நூல்களல்ல. பிற இலக்கியங்களில் காணப்படும் சுவைமிக்க கதைகளைப் போன்று நற்செய்தி நூல்களிலும் கெட்டகுமாரன், நல்ல சமாரியன் போன்ற கதைகள் இடம் பெற்றிருப்பினும் இவை கதைப்புத்தகங்களல்ல. நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ள உவமைகள் பல சிறுகதைகளாகவும் புனைகதைகளாகவும் வெளிவந்துள்ளன. நம்முடைய கர்த்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் மற்றும் உரையாடல்கள் பல மிக நுணுக்கமாகவும் சுருக்கமாகவும் நற்செய்தி நூல்களில் தொகுத்துரைக்கப்பட்ட போதிலும் இவை செய்தித்தொகுப்புகள் ஆகா.

“நற்செய்தி நூல்கள்” தனித்தன்மை வாய்ந்த இலக்கிய வகையாகத் திக ழ்கின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்கள் இயற்றப்பட்டபோது, ஆதாரபூர்வமான தொகுப்பின் அச்சு முறிக்கப்பட்டது. புராதன நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்த நான்கு நூல்களை மட்டுமே அதிகார பூர்வமான தொகுப்பின் பகுதிகளாகக் கருதிவருகின்றனர். நான்கு நற்செய்திப் பணியாளர்கள் இயற்றிய நூல்களின் வடிவில், மாற்றுக் கருத்துகளைக் கொண்ட பல நூல்கள் சுவிசேஷம் என்ற தலைப்புடன் வெளிவந்தன. அவையாவும் “ஞானத்தின் அடிப்படையில் தேவனை அணுகுதல்” (Gnosticism) போன்ற கள்ள போதனைகளைப் புகுத்தும்வண்ணம் கள்ள போதகர்களால் இயற்றப்பட்டவை.

எனினும் நான்கு நற்செய்தி நூல்கள் மட்டும் இயற்றப்பட்டதன் காரணம் யாது? ஏன் ஐந்து நூல்கள் எழுதப்படவில்லை? அவ்வாறு இருப்பின் மோசே எழுதிய ஐந்து ஆகமங்களுக்கு ஒப்பாக இவை இருந்திருக்குமே. அல்லது ஒரே ஒரு நீண்ட நற்செய்தி நூல் மட்டும் போதும் என்று எண்ணுவாரும் உளர். மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டவை யாவும் அகற்றப்பட்டு, கர்த்தர் கூறிய இன்ன பல உவமைகளும், ஆற்றிய அற்புதங்களும் இடம் பெற்றிருக்கலாமே? உண்மையில், இரண்டாம் நூற்றாண்டில், நான்கு நற்செய்தி நூல்களையும் இணைக்கும் பணியில் டாஷியன் என்பார் ஈடுபட்டு “நான்கு நூல்களின் வாயிலாக” ((Diatessaron) என்னும் நூலை இயற்றினார்.

உலகின் நான்கு எல்லைகளையும், நான்கு காற்றுகளையும் குறிக்கும் வகையில், நான்கு என்னும் உலகத்தின் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, நான்கு நற்செய்தி நூல்களும் அமைந்துள்ளன என ஐரேனியஸ் என்பார் தத்துவமாகப் புனைந்து எழுதினார்.

2. நான்கு சின்னங்கள்

எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய நூல்களில் காணப்படும் நான்கு அடையாளச் சின்னங்களாகிய சிங்கம், காளை  (எருது), மனிதன் மற்றும் கழுகு ஆகியவற்றுடன் நான்கு நற்செய்தி நூல்களையும் ஒப்பிட்டுப்பாராட்டும் கலைத்திறன் படைத்தோர் பலருள்ளனர். ஆயினும் நற்செய்தி நூல்களையும் அடையாளச் சின்னங்களையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது, அதை வெவ்வேறு வகைகளில் பொருத்திக் காணும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது கலை நுணுக்கத்தின் அடிப்படையில் சரியெனக்கொள்வோமெனில் மத்தேயு எழுதிய இராஜரீக நற்செய்தி நூலை, யூதா கோத்திரத்துச் சிங்கத்தோடு ஒப்பிடுவது பொருத்தமானதாகும். அது போல, காளை பாரத்தைச் சுமக்கும் விலங்காகும். ஆகவே அச்சின்னம் அடிமையின் நற்செய்தி நூலாகிய மாற்குடன் பொருத்தமுடையதாக விளங்குகிறது. லூக்கா எழுதிய நூலில் மனித குமாரன் என்னும் மனிதநிலை சிறப்பாகக் காட்டப்படுகிறது. யோவான் நற்செய்தி நூலில் உயர்வான ஆவிக்குரிய தரிசனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உயரப் பறக்கும் கழுகு அந்நூலுக்குப் பொருத்தமானதாகும். வேதாகம ஒற்றுமை, எதிர்மறைப் பொருட்களை விளக்கிக் காட்டும் கையேடு இதற்கு ஒத்த கருத்தை வெளியிட்டுள்ளது.

3. நான்கு வகையான வாசகர்கள்

நான்கு நற்செய்தி நூல்கள் புதிய ஏற்பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்றதன் காரணத்தை ஆராயுமிடத்து, நான்கு வகையான கூட்டத்திடம் இவை சென்றடைய வேண்டுமென்பதே தூய ஆவியானவரின் எண்ணமாயிருந்தது எனக்கொள்வது சிறப்பான விளக்கமாகும். ஆதிகாலங்களில் அவ்வாறு நால்வகை மக்கள் இருந்தனர். இன்றைய நாட்களில் அதற்கொப்பான நால்வகை மக்கள் இருக்கின்றனர்.

மத்தேயு நற்செய்தி நூல் யூதச்சார்பு மிக்கது என யாவரும் ஒப்புக்கொள்வர். பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள், விரிவான போதனைகள், நம்முடைய கர்த்தரின் குடிவழி மரபு மற்றும் யூத இனத் தொனி ஆகியவற்றை மத்தேயு நூலைப் புதியதாகப் படிக்கும்போதே ஒருவர் எளிதில் கவனித்து விடுவார்.

ரோமப் பேரரசின் தலைநகரத்திலிருந்து மாற்கு நற்செய்தி நூல் எழுதப்பட்டது. ரோமர்களையும், சிந்தனையைக் காட்டிலும் செயலை அதிகமாக விரும்பும் பல கோடி மக்களையும் மனதிற்கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. எனவே மாற்கு அற்புத நிகடிநச்சிகளைக் குறித்து நீண்ட பகுதிகளையும், உவமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும் எழுதினார். சிறப்புற பணியாற்றிய அடிமையின் குடிவழிப் பட்டியலைப் பற்றி ரோமர்களுக்கு என்ன அக்கறை எழக்கூடும்? ஆகவே இந்நூலில் குடிவழிப் பட்டியல் இடம் பெறவில்லை.

கிரேக்க இலக்கியத்தையும் கலையையும் பின் பற்ற விரும்பிய கிரேக்கருக்கும் அதே கருத்துடைய ரோமருக்குமாக லூக்கா தனது நற்செய்தி நூலை எழுதினார் என்பதில் எவ்தித ஐயமுமில்லை. இத்தகையோர் அழகு, மனிதத்துவம், பண்பாடு மற்றும் இலக்கியச் சிறப்பு ஆகியவற்றில் பெரிதும் ஈடுபாடு கொள்வர். இவை யாவற்றையும் மருத்துவராகிய லூக்கா அள்ளித் தருகிறார்.

தற்கால கிரேக்கருக்கு ஒப்பாகக் கலையார்வம்கொண்டவர்கள் பிரான்சு நாட்டினர். “உலகிலேயே மிகவும் அழகிய நூல்” என்று பிரான்சுநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்நூலைக் குறிப்பிட்டதில் வியப்பேதும் இல்லை (லூக்கா நற்செடீநுதி நூலின் முன்னுரையைக் காண்க).

யோவான் நற்செய்தியைப் படிப்பவர் யார்? இஃது உலகளாவிய நற்செய்தி நூலாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தியை இது ஏந்தி வருகிறது. இது நற்செடீநுதியை அறிவிக்கும் நூலாக இருப்பினும் (20:30,31) கிறிஸ்தவச் சிந்தனையாளர்கள் இதில் அதிகப்பற்று கொண்டுள்ளனர். யோவான் நற்செடீநுதி நூல் “மூன்றாம் இனத்தாருக்கு” உரியது. யூதர்களும் புறவினத்தவருமாக இருவகுப்பாரைச் சேராத மூன்றாவது இனம் என்று பெயர் பெற்ற மக்களே கிறிஸ்தவர்கள். இதுவே இந்நூலின் சிறப்பு.

4. மற்றும் பல நால்வகைக் கருத்துகள்

பழைய ஏற்பாட்டில் நால்வகைக் கருத்துகள் பல உள்ளன. அவை நான்கு நற்செய்தி நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கியமான நான்கு செய்திகளோடு தொடர்புடையவையாக விளங்குகின்றன.

“கிளை” என்னும் சொல் நமது கர்த்தரைக் குறிப்பிடும்படி பழைய ஏற்பாட்டில் கீழ்க்காணும் இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது:

“. . . தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை . . .

அவர் ராஜாவாயிருந்து” (எரே. 23:5,6)

“. . . இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை (அடிமை) . . .” (சக. 3:8)

“. . . இதோ, ஒரு புருஷன். அவருடைய நாமம் கிளை என்னப்படும்” (சக. 6:12)

“. . . கர்த்தரின் கிளை அலங்காரமும் . . .”  (ஏசா. 4:2)

“இதோ (காணுங்கள்)” என்னும் சொல் நற்செய்தி நூல்களின் முக்கிய கருத்துகளோடு மிகப்பொருத்தமுடையதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 “இதோ, உன் ராஜா” (சக. 9:9)

“இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன்”

(ஏசா. 42:1)

“இதோ, ஒரு புருஷன்” (சக. 6:12)

“இதோ, உங்கள் தேவன்” (ஏசா. 40:9)

 ஒப்பிட்டுக் காண தெளிவற்றதாயினும், பலருக்கு அதிக நன்மையைத் தந்த இன்னுமொரு ஒப்புமையைக் காண்போம். ஆசரிப்புக் கூடாரத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் நான்கு நிறங்களை, கர்த்தருடைய நால்வகைப் பண்புகளோடு ஒப்பிடலாம். இந்த நால்வகைப் பண்புகளில் ஒவ்வொன்றையும் நற்செடீநுதி நூலாசிரியர் ஒவ்வொருவரும் தத்தம் நூலில் சிறப்புடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

இரத்தாம்பரம், அரசரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் மத்தேயு நூலுக்குப் மிகப் பொருத்தமான நிறமாகும். நியாயாதிபதிகள் 8:26 இந்நிறத்தின் அரசருக்குரிய தன்மையைக் காட்டுகிறது.

சிவப்பு, செந்நிறப் புழுவைப் பிழிந்து எடுக்கப்பட்ட சாயத்தை அந்நாட்களில் பயன்படுத்தினர். “நானோ ஒரு புழு, மனிதனல்ல” (சங். 22:6) என்பதற்கு ஒப்பாக விளங்கிய கொத்தடிமையைப் பற்றிய நற்செய்தியாக மாற்கு விளங்குகிறது.

வெள்ளை, பரிசுத்தவான்களின் நீதியுள்ள செயல்களைக் குறிக்கிறது (வெளி. 19:8). கிறிஸ்துவின் நிறைவான மனிதத் தன்மையை லூக்கா நூல் வலியுறுத்துகிறது.

நீலம், தெளிவான வானம் நீலநிறமுடையது (யாத். 24:10). கிறிஸ்துவின் தெய்வீகம் இந் நிறத்தில் கவர்ச்சிமிக்க பிரதிபலிப்பாகத் திகழ்கிறது. இதனை யோவான் நற்செய்தி நூல் சிறப்புடன் எடுத்தியம்புகிறது.

 5. செய்திகளின் வரிசை ஒழுங்கும் அவற்றின் முக்கியத்துவமும்

நற்செய்தி நூல்களில் காணப்படும் நிகடிநச்சிகள் யாவும் அவை நிகழ்ந்த கால வரிசையின்படியே எழுதப்படவில்லை. அந்த நிகழ்ச்சிகள் போதிக்கும் அறநெறிகளுக்கேற்ப அவற்றைத் தூய ஆவியானவர் வகைப்படுத்தி அளித்துள்ளார் என்பதைத் தொடக்கத்திலேயே அறிவது நல்லது.

லூக்கா நற்செய்தி நூல் உள்ளார்ந்த கருத்தைத் தொகுத்துத் தரும் நூல் என்பதை நாம் தொடர்ந்து படிக்கும்போது அறிந்துகொள்வோம். கர்த்தரைக் குறித்த நிகடிநச்சிகள், அவர் பேசிய உரையாடல்கள், எழுப்பிய கேள்விகள், அளித்த பதில்கள், ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகிய யாவற்றையும், அவை நிகடிநந்த கால வரிசையின்படி ஒன்றன்பின் ஒன்றாக லூக்கா தமது நூலில் எழுதித்தரவில்லை. மாறாக, அந்நிகழ்ச்சிகளின் ஊடாக விளங்கும் உள்ளார்ந்த தொடர்பைக் கருத்திற்கொண்டு அவற்றைத் தொகுத்துள்ளார். இதனை நாம் திருத்தியமைக்காத சேகரிப்பு என்றோ, செய்திதொகுப்போரின் தொடக்ககாலப் பணிநிலை என்றோ அழைப்பது சரியே. ஆனால் இவ்வாறு காரணகாரியங்களின் அடிப்படையில் அவற்றின் கொள்கைகளுக்கு ஏற்ப ஒரு வரலாற்று ஆசிரியன் வரிசைப்படுத்தித் தருவது மிகவும் கடினமான செயலாகும். இதனோடு, ஒப்பிடுங்கால் காலவரிசையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பது எளிது. மிகவும் நேர்த்தியாக இதனைச் செய்யும்படி தேவன் லூக்காவைப் பயன்படுத்தினார்.

வெவ்வேறு அணுகுமுறைகளும் வெவ்வேறு முக்கியத்துவங்களும், நற்செய்தி நூல்களில் காணப்படும் மாறுபாடுகளை விளக்குவதற்கு உதவிபுரிகின்றன. முதல் மூன்று நற்செய்தி நூல்களும் “ஒத்தகண்ணோட்டமுடையவை” என அழைக்கப்படுகின்றன. இவை மூன்றும் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை ஒரேவிதமாக அணுகுகின்றன. ஆனால் யோவான் அதனை வேறுவிதமாக அணுகுகிறார். தத்தம் நூல்களைப் பிறர் எழுதியபின் வெகுகாலம் கழித்தே யோவான் தனது நற்செய்தி நூலை எழுதினார். ஆகவே அவர் ஏற்கனவே விளக்கமாகக் கூறப்பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் கூறாமல் விடுத்து, நமது கர்த்தருடைய வரலாற்றையும் சொற்களையும் இறையியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஆடிநந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக வெளியிட்டார்.

6. ஒத்த கண்ணோட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி

முதல் மூன்று நற்செய்தி நூல்களில் பல ஒற்றுமைகள் இருப்பதற்குக் காரணம் என்ன? நீண்டபகுதிகளில் ஒரே விதமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்நூல்களில் பலவேறுபாடுகளும் காணப்படுவது ஏன்? இவை பொதுவாக “ஒத்த கண்ணோட்டத்தின் சிக்கல்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சிக்கல்கள் புராதன நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், தேவ ஆவியின் ஏவுதலை மறுத்துரைக்கிற மனிதர்களுக்கே அதிக பிரச்சனையாயிருக்கின்றன. சில எழுத்துச்சுவடிகள் காணாமற்போய்விட்டன என்று கூறி, எந்தச் சுவடும் இல்லாத அந்தக் கற்பனைச் சுவடிகளை ஆதாரமாகக்கொண்டு, பற்பல சிக்கல் நிறைந்த புனைகதைகள் எழுந்தன. லூக்கா 1:2 – ஆம் வசனத்தில் இவ்வுண்மை

பிரதிபலிக்கிறதைக் காணலாம். மேலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பல கட்டுக்கதைகளை ஒன்றுசேர்த்து முதல் நூற்றாண்டுத் திருச்சபை கிறிஸ்துவின் வரலாற்றை உருவாக்கிவிட்டது என்று கருதுமளவிற்கு இந்தக் கருத்துக் கணிப்புகள் எல்லையை மீறிச் சென்றுவிட்டன. தேவ வசனத்தையும், கிறிஸ்தவ சபை வரலாற்றையும் தாங்கள் நம்புவதில்லை என்று சொல்லும் இந்தக் கற்பனையாளர்களின் கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், ஒத்த கண்ணோட்டமுடைய நற்செய்தி நூல்களை வகைப்படுத்துவதிலும், பிரித்துணர்வதிலும் இத்தகைய கற்பனையாளர்களின் ஒருவர் கருத்தை பிறிதொருவர் ஏற்றுக்கொள்வதில்லை.

சிக்கல் நிறைந்த கேள்விகளுக்குக் தக்க விடை கர்த்தர் உரைத்த சொற்களில் காணக்கிடக்கிறது: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவான் 14:26).

நடந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்ட மத்தேயு மற்றும் யோவான் அந்தப் பழைய நிகழ்ச்சிகளை இலக்கியமாக எழுதிக்கொடுத்தனர் என்னும் கருத்தை மேற்கூறிய வசனம் உறுதிப்படுத்துகிறது. மேலும், சபை வரலாறு கூறுவதுபோல, பேதுரு கண்ட காட்சிகளை மாற்கு இலக்கியமாக எழுதினார் என்ற உண்மையும் இதில் வலுவடைகிறது. பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாக அவர்களுக்கு நேரடியாக உதவிசெய்ததால் சான்றுகள் எழுத்து வடிவம் பெற்றன (லூக்கா 1:2). மேலும், யூதமக்கள் உண்மைகளைச் சொல் தவறாமல் காத்துவருகின்ற பாரம்பரியம் உடையவர்களாகவும் இருந்தனர். இக்காரணங்கள் ஒத்த கண்ணோட்டமுடைய நற்செய்தி நூல்களில் எழும் சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்கின்றன. மேற்கூறிய சான்றுகளுக்கும் மேலாக, தேவையான உண்மைகள், விவரங்கள், பொருள் விளக்கங்கள் யாவற்றையும், “பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே” நேரடியாக எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டனர் (1 கொரி. 2:13).

ஆகவே, வெளித்தோற்றத்தில் முரண்பாடுகளாகவும் வேறுபாடுகளாகவும் காணப்படுகின்ற விவரங்களை நாம் எதிர்கொள்ளும் வேளையில், “ஏன் இந்த நற்செய்தி நூல் இந்த விவரத்தைச் சொல்லவில்லை, இதனைச் சேர்த்திருக்கிறது, இதனை வலியுறுத்தியிருக்கிறது” என்று நாம் கேட்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இரண்டு குருடர்கள், பிசாசுபிடித்த இருவர் குணமாக்கப்பட்ட நிகடிநச்சிகளில் “இருவர்” என்று மத்தேயு வலியுறுத்திக் கூறுகிறார். ஆனால் மாற்கும் லூக்காவும் இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு நபர் குணப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். சிலர் இதனை முரண்பாடு என்கின்றனர். யூதர்களுக்காக மத்தேயு நூல் எழுதப்பட்டது. ஆகவே குணமாக்கப்பட்ட இரண்டு நபர்களையும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில்,  “இரண்டு அல்லது மூன்று சாட்சிகள்” தேவை என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் மற்றவர்களோ குணமாக்கப்பட்ட இருவரில் முக்கியமான மனிதரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் குணமாக்கப்பட்ட நிகடிநச்சியை விளக்கிக் கூறுகின்றனர் (குருடனாயிருந்தவனின் பெயர் பர்திமேயு).

ஒரு நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் நற்செய்தி நூல்கள் கூறுவதாகத் தோன்றுகின்ற சந்தர்ப்பங்களை ஆராயுமிடத்து, உண்மையில் அவை வெவ்வேறு நிகடிநச்சிகள் என்பதை அறிந்துகொள்ளலாம். இவ்வுண்மையைக் கீடிநக்காணும் எடுத்துக் காட்டின் மூலமாகக் காண்போம்:

மலைப்பிரசங்கம், லூக்கா 6:20-23 ஆகிய வசனங்களில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளதாகக் தோன்றுகிறது. ஆனால் லூக்காவின் இந்தப் பகுதி சமவெளியில் நிகழ்த்தப்பட்ட பிரசங்கமாகும் (லூக்கா 6:17). மலைப்பிரசங்கம் இறையரசின் குறைவில்லாத குடிமகன் எப்படிப்பட்ட பண்புடையவனாக இருக்கிறான் என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள் எவ்வித வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை லூக்கா எடுத்துரைக்கிறது.

லூக்கா 6:40, மத்தேயு 10:24 -ஐப் படியெடுத்ததுபோல் காட்சியளிக்கிறது. ஆனால் மத்தேயு நூல் இயேசுவைக் குருவாகவும், நம்மை அவருடைய மாணாக்கராகவும் சித்தரிக்கிறது. ஆனால் லூக்காவில் சீடராக்குபவரைக் குருவாகவும், அவர் யாருக்குப் போதிக்கிறாரோ அவரை மாணாக்கராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். மத்தேயு 7:22, அரசருக்குப் பணிவிடை செய்வதை வலியுறுத்துகிறது. ஆனால் லூக்கா 13:25-27 ஆண்டவரோடுள்ள ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது.

லூக்கா 15:4-7 -இல் வாளின் முனைகொண்டு பரிசேயர் தாக்கப்படுகின்றனர். ஆனால் மத்தேயு 18:12,13 ஆகிய வசனங்கள் சிறுபிள்ளைகளிடத்தில் தேவன் பாராட்டுகிற அன்பை எடுத்தியம்புகின்றன.

விசுவாசிகள் மட்டும் கூடியிருக்கையில் யோவான் ஸ்நானகன், “அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று கூறினார் (மாற்கு 1:8; யோவான் 1:33). ஆனால் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒன்றாக இருந்தவேளையில், முக்கியமாக பரிசேயரும், அக்கூட்டத்தில் இருந்தபோது, “அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் (ஆக்கினைத்தீர்ப்பு) ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று யோவான் ஸ்நானகன் கூறினார் (மத். 3:11; லூக்கா 3:16).

“நீங்கள் அளக்கிற அளவின்படியே” என்ற சொற்றொடர் மத்தேயு 7:2 -இல் நாம் பிறரை நியாயந்தீர்க்கிற இயல்போடு தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாற்கு 4:24 -இல் அச்சொற்றொடர் தேவ வசனத்தை நாம் ஏற்றுக்கொள்வதைக் குறித்தும், லூக்கா 6:38 -இல் நாம் தாராளமாய்ப் பகிர்ந்தளிக்கிற நற்குணத்தைப் பற்றியும் பேசுகிறது.

இந்த வேறுபாடுகள் முரண்பாடுகளல்ல; குறிப்பிட்ட நோக்கத்துடன் எழுதப்பட்டவை. வேத தியானம் செய்கின்ற விசுவாசிகளுக்கு இவை ஆவிக்குரிய ஆகாரத்தைச் சுவையுடன் அள்ளித்தருகின்றன.

7.நற்செய்தி நூல்களின் ஆசிரியர்கள்

நற்செய்தி நூல்களையும் வேதாகமத்தின் மற்ற நூல்களையும் எழுதியவர்கள் இன்னார் என்று ஆராயும்போது, சான்றுகளை அகச்சான்று கள் எனவும், புறச்சான்றுகள் எனவும் பகுத்துக் காண்பது பொதுவான ஒழுங்கு ஆகும். இதே ஒழுங்குமுறையை இருபத்தேழு புதிய ஏற்பாட்டு நூல்களுக்கும் கடைபிடித்துள்ளோம். நூல்கள் எழுதப்பட்ட காலத்திற்கு அண்மையில் வாழ்ந்தோருடைய குறிப்புகள் புறச்சான்றுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சிலர் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் வாடிநந்த “சபையின் பிதாக்கள்” ஆவர். சிலர் வேதப்புரட்டர்களாகவும் கள்ளப்போதகர்களாகவும் இருந்தவர்கள். இந்த மனிதர்கள் வேத நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டனர், தழுவி எழுதினர், அல்லது நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிக் குறிப்பிட்டனர். இந்தச் சான்றுகள் நமது ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக முதல் நூற்றாண்டின் இறுதியில் வாடிநந்த ரோமாபுரி கிளமெந்து 1 கொரிந்தியர் நூலிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆகவே பவுலின் பெயரைக் களவாடி இரண்டாம் நூற்றாண்டில் எவரும் இந்த நூலை இயற்றியிருக்க முடியாது.

அகச்சான்றுகளாகக் கருதப்படும் மொழி நடை, சொல்லாட்சி, வரலாறு, நூல்களில் காணும் செய்திகள் ஆகியவை, புறச்சான்றுகளோடு ஒப்பிட்டுக் காணப்பட்டு அவை ஆதாரமாக விளங்குகின்றனவா முரண்பாடுகளாக இருக்கின்றனவா என்று ஆராயப்படும். எடுத்துக்காட்டாக, லூக்கா மற்றும் அப்போஸ்தல நடபடிகள் ஆகிய நூல்களின் ஆசிரியர் பண்பாடு மிக்க மருத்துவர் என்பதை இச்சான்றுகள் வலியுறுத்துகின்றன.

இரண்டாம் நூற்றாண்டில் வாடிநந்த வேதப்புரட்டனான மார்சியன் பல நூல்களில் “அதிகார பூர்வமான வேத நூல் தொகுப்பு” என்று ஒரு பட்டியலைக் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குறிப்பையும், பல நூல்களின் முன்னுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அவர் லூக்கா நூலின் சில பகுதிகளையும், பவுல் எழுதியவற்றில் பத்து மடல்களை மட்டுமே அதிகாரபூர்வமானவை என்று ஒப்புக்கொண்டார். எனினும், இவருடைய குறிப்புகள் அந்த நாட்களில் எந்தெந்த நூல்கள் அதிகாரபூர்வமானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன என்பதை அறிவதற்கு உதவுகின்றன.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கார்டினல் முரட்டோரி என்பவர் தொகுத்த அதிகாரபூர்வமான நூல்களின் வரிசை புராதன நம்பிக்கையுடைய மனிதர்களின் கருத்தோடு இசைவாயிருக்கிறது. எனினும் அதில் சில குறிப்புகள் விடுபட்டுள்ளன.

தொடரும்…

விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை – புதிய ஏற்பாடு அறிமுகம்

விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை
புதிய ஏற்பாடு முதல் பகுதி – நற்செய்தி நூல்கள்
ஆசிரியர் : வில்லியம் மெக்டொனால்டு
தமிழாக்கம் : இரா. மாணிக்கவாசகம்

macdonald

இந்நூலாசிரியர் திரு. வில்லியம் மெக்டொனால்டு (1917-2007) அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள புதிய இங்கிலாந்தில் பிறந்தவர். ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் (Harward Business School) வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்து, இராண்டாம் உலகப்போர் முடியும்வரை பணியாற்றினார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பணிக்கான அழைப்பைப் பெற்ற இவர், வெற்றிவாய்ப்பு மிகுந்த தனது இவ்வுலக அலுவலைத் துறந்தார்.

கர்த்தருடைய ஊழியத்தில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்ட மெக்டொனால்டு உலகெங்கும் பயணம் மேற்கொண்டு இறைபோதகராகவும், சுவிசேட பிரசங்கியாராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி கிறிஸ்துவின் மேன்மையைப் பறைசாற்றினார். இவர் எம்மாவு வேதாகமக் கல்லூரியின் தலைவராகச் சில ஆண்டுகள் பணியாற்றி, பல அஞ்சல்வழி  வேதபாடப் புத்தகங்களையும் எழுதினார். திரு. ஜீன் கிப்ஸன் என்பாருடன் இணைந்து “சீடத்துவப் பயிற்சி”முறையைக் கலிபோர்னியாவில் உள்ள சான்லியானஹோவில் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணற்றோர் பயனடைந்து இறைஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

55 ஆண்டுகளுக்கு மேலாக இறைப்பணியாற்றிய இவர் தனது பெரும்பாலான நேரத்தை எழுத்துப் பணியில் செலவிட்டார். சிறந்த இறையியல் போதகராகிய திரு. மெக்டொனால்டு, 84 நூல்களை எழுதியுள்ளார். திருமறையை ஆழ்ந்து கற்று, அதனுடன் அதிக நேரத்தைச் செலவிட்ட இவரது எழுத்துக்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளன.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து தூய திருமறையில் இவ்வாறு காண்கிறோம். “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” (1 யோவான் 2:6). இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுக்கும் இந்நூலாசிரியர், “இயேசுவின் வாழ்க்கை, சுவிசேட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்குமாப்போல், நம்மனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. இத்தகைய வாழ்க்கையை நாம் நமது சொந்த சக்தியினாலோ முயற்சியினாலோ வாழ்ந்துகாட்ட முடியாது.

தூய ஆவியானவரின் வல்லமையினால் மட்டுமே இது சாத்தியமாகும். எத்தகைய தடையுமின்றி நமது வாழ்க்கையைக் கர்த்தருக்கு முற்றுமுடிய ஒப்புவித்து நம்மிலும், நம்மூலமாகவும் அவர் வாழ்வதற்கு இடங்கொடுக்க வேண்டும்.” இவ்வுண்மை திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு வாழ்க்கையில் உண்மையாக விளங்கிற்று.

கர்த்தர் இவரை 2007 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தம்மண்டை அழைத்துக்கொண்டார். வணிகத் துறையில் தன் வாழ்க்கையைத் தொடங்கின இவர், இவ்வுலகச் செல்வங்கள் ஒன்றையும் சேர்த்துவைக்கவில்லை. தனக்குரிய அனைத்தையும் தேவையுள்ளவர்களுக்கு அவர் தாராளமாகக் கொடுத்துவந்தார். அவர் விட்டுச் சென்ற உலகச் செல்வங்கள் ஒன்றுமில்லை. ஆனால் அவர் எழுதிய நூல்கள் இன்று நம்மிடையே இருக்கின்றன. அவை இன்று ஏறத்தாழ 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்வேறு மக்களிடையே பேசி, உணர்த்தி வருகின்றன. அவருடைய முன்மாதிரியும் நமக்கு அறைகூவலாக உள்ளது.

குறிப்பு: வில்லியம் மெக்டொனால்டு அவர்களுடைய நூற்கள் தொடர்ந்து பல மொழிகளில் திருப்பப்பட்டு வருகின்றன. அவருடைய நூற்களைப் பற்றியும், மொழிபெயர்ப்பு விவரங்களைப் பற்றியும் அறிய www. william-macdonald.org என்ற இணையதளத்தைக் காணவும்.

“இந்த எழுத்தோவியங்களின் வரலாறு மற்றும் ஆன்மீகச் சிறப்பு, இவற்றின் அளவு மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்ததாயிராமல் அளவிடற்கரியதாய் ஓங்கி விளங்குகிறது. மேலும் இந்நூல்கள் மனிதனின் வாழ்விலும் வரலாற்றிலும் கணக்கிடக்கூடா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏதேனில் பொழுது புலர்ந்த நாளின் நண்பகலாய் இந்நூல்கள் காட்சியளிக்கின்றன. பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட கிறிஸ்து, நற்செய்தி நூல்களில் வரலாற்றுக் கிறிஸ்துவாகவும், திருமடல்களில் அனுபவங்களின் கிறிஸ்துவாகவும், வெளிப்படுத்தின விசேஷத்தில் மகிமையின் கிறிஸ்துவாகவும் காட்சி தருகிறார்.”

W. கிரகாம் ஸ்கிரோஜி

1.“புதிய ஏற்பாடு” என்னும் பெயர்

ஆழ்கடல்போல் திகழும் புதிய ஏற்பாட்டைக் கற்றிடத் தொடங்குமுன் அல்லது அப்புதிய ஏற்பாட்டில் ஒரு சிறு நூலைப் படிக்கத் தொடங்கு முன் இந்தப் புனிதமான நூலின் இன்றியமையா பொது உண்மைகள் சிலவற்றைச் சுருக்கமாகக் காண்பது நமக்கு மிகுதியான நற்பயனைத் தரும்.

‘டியாதெகே’ ((Diatheke) என்னும் கிரேக்கச் சொல், தமிழில் ‘சாசனம்’ என்றும் ‘உடன்படிக்கை’(ஏற்பாடு) என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எபிரெய மடலில் ஓரிரு இடங்களில் இந்தக் கிரேக்கச் சொல்லுக்கு மொழிபெயர்ப்பாக எந்தத் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்தால் அது சர்ச்சைக்குரியதாகவே காணப்படும். கிறிஸ்தவ வேதநூலின் தலைப்பாக‘ஏற்பாடு’ என்னும் சொல் உடன்படிக்கை என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதே ஆகும். ஏனெனில் தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையே விளங்கும் ஒப்பந்தமாகவும், ஏற்பாடு அல்லது உடன்படிக்கையாகவும் வேதாகமம் திகழ்கிறது.

முந்தின அல்லது பழைய ஏற்பாட்டிலிருந்து (உடன்படிக்கை) வேறுபடுத்திக் காட்டும்வண்ணம் இந்நூல் புதிய ஏற்பாடு எனப் பெயர் பெற்றது.

இரண்டு ஏற்பாடுகளும் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டவையே ஆகும். ஆகவே அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் இவையிரண்டும் பயனுள்ளவை. ஆயினும் நம்முடைய கர்த்தரைப் பற்றியும்> அவருடைய சபையைப் பற்றியும், தமது சீடர்கள் எங்ஙனம் வாழவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பது பற்றியும் சொல்லக்கூடிய வேதபகுதியைக் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசி அவ்வப்போது திருப்புவது இயல்பானதே.

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள உறவைப் பற்றி இரத்தினச் சுருக்கமாகத் திருவாளர் அகஸ்டின் கூறியதாவது:

பழைய ஏற்பாட்டில் புதியது மறைபொருளாய்த் திகழ்கிறது.

2. அதிகாரபூர்வமான புதிய ஏற்பாட்டுத் தொகுப்பு

புதிய ஏற்பாட்டில் பழையது பளிச்சென்று வெளிப்படுகிறது. அதிகாரபூர்வமானது (கிரேக்கு-Kanon) என்னும் சொல் ஒன்றை அளவிடும் அல்லது மதிப்பிடும் விதிமுறையைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரபூர்வமான புதிய ஏற்பாட்டுத் தொகுப்பு எனப்படுவது தேவ ஆவியினால் ஏவப்பட்டு இயற்றப்பட்ட சில நூல்களின் தொகுப்பேயாகும். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்கள் மட்டும் தான் அதிகாரபூர்வமானவை என்று எவ்வாறு சொல்ல முடியும்? அல்லது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இருபத்தேழு நூல்களும் அதிகாரபூர்வமானவை என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? தொடக்க காலத்தில் வேறு கிறிஸ்தவநூல்களும் மடல்களும் இயற்றப்பட்டிருந்தன. (சில நூல்கள் மாறுபட்ட கோட்பாடுகளைப்போதிக்கிறவையாக இருந்தன.) ஆகவே புதிய ஏற்பாட்டுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்கள் மட்டுமே அதிகாரபூர்வமானவை என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்? கி. பி. நான்காவது நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமான தொகுப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், அந்த நூல்கள் எழுதப்பட்டவுடனேயே அதிகாரபூர்வமானவை என்னும் நிலையை அடைந்துவிட்டன. தேவபக்தியுள்ளவர்களும் பகுத்துணரும் ஆற்றல் உள்ளவர்களுமாகிய சீடர்கள் தேவ ஆவியின் ஏவுதலால் இயற்றப்பட்ட வேத நூல்களை அதிகாரபூர்வமானவை என்று தொடக்கத்திலேயே அறிந்துகொண்டனர். பவுல் இயற்றிய நூல்கள் அதிகாரபூர்வமானவை என்று பேதுரு அறிந்து கொண்டார் (2 பேதுரு 3:15,16). ஆயினும் யூதா, 2 யோவான் மற்றும் 3 யோவான் போன்ற நூல்களைப் பற்றி சில சபைகளில் கருத்து வேறுபாடு நிலவியது.

மத்தேயு, பேதுரு, யோவான் மற்றும் பவுல் ஆகிய அப்போஸ்தலர்களாலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மாற்கு, லூக்கா போன்றவர்களாலும் இயற்றப்பட்ட நூல்கள் அதிகாரபூர்வமானவை என்று ஐயத்திற்கு இடமற்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பொதுவாக பற்பல ஆண்டுகளாக அதிகாரபூர்வமானவை என்று கருதப்பட்டு வந்த நூல்களையே, கிறிஸ்தவ ஆட்சிக் குழு அதிகாரபூர்வ தொகுப்பு என்று உறுதிப்படுத்தியது. தேவ ஆவியின் ஏவுதலால் வேதநூல் வரிசையை உண் டாக்கவில்லை. மாறாக தேவ ஆவியின் ஏவுதலால் இயற்றப்பட்ட நூல்களை அந்த ஆட்சிக் குழு வரிசைப்படுத்தியது.

 3. நூல்கள் இயற்றப்பட்ட விதம்

புதிய ஏற்பாட்டை இயற்றிய தெய்வீக எழுத்தாளர் தூய ஆவியானவரே ஆவார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பவுல், யாக்கோபு, பேதுரு, யூதா மற்றும் எபிரெய மடலின் பெயர் அறியப்படா நூலாசிரியர் (எபிரெய நூலின் முன்னுரையைக் காண்க) ஆகியோரை எழுதும்படி ஏவியவரும் அவரே. புதிய ஏற்பாட்டு நூல்கள் எவ்வாறு இயற்றப்பட்டன என்னும் கேள்விக்குச் சிறப்பானதும் சரியானதுமான விடையை அறிய முதலாவது “இருமை ஆசிரியத்துவத்தை “ (dual authorship) நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதிய ஏற்பாடு, ஒருபகுதி மனிதத் தன்மையும் மறுபகுதி தெய்வீகத் தன்மையும் உடையதன்று. மாறாக, அது ஒரே நேரத்தில் முழுவதும் மனிதத் தன்மையும், முழுவதும் தெய்வீகத் தன்மையும் உடையதாகும். அது எழுதப்பட்டபோது மனித ஆற்றல் எவ்விதத் தவறையும் செய்துவிடாதபடி தெய்வீக ஆற்றல் தடுத்து அதனைக் காத்துக்கொண்டது. அதன் விளைவாக எவ்விதத் தவறும் குறையும் இல்லாத கையெழுத்தினால் ஆன மூலநூல் உருவாயிற்று.

“ஜீவ வார்த்தை” என்னும் பெயருடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இருமை இயல்பு எழுதப்பட்ட திருமறைக்குச் சிறந்த ஒப்புமையாகத் திகழ்கிறது. அவர் ஒரு பங்கு தேவனும் ஒரு பங்கு மனிதனும் அல்லர். அத்தகைய பாத்திரங்களை நம்மால் புராணங்களில் மட்டுமே காணவியலும். அவர் ஒரே நேரத்தில் முழுமையான தேவனும் முழுமையான மனிதனுமாகத் திகழ்ந்தார். தமது மனித இயல்பில் அவர் எவ்விதத் தவறும் பாவமும் இல்லாதிருக்க, அவருடைய தெய்வீக இயல்பே காரணமாக இருந்தது.

4. எழுதப்பட்ட காலம்

பழைய ஏற்பாடு ஏறத்தாழ ஓராயிரமாண்டுக் காலத்தில் (கி. மு. 1400 – கி. மு. 400) இயற்றப்பட்டது. அதுபோலன்றி புதிய ஏற்பாடு அரைநூற்றாண்டுக் காலத்தில் (கி. பி. 50 – கி. பி. 100) எழுதப்பட்டது.

இப்பொழுது புதிய ஏற்பாட்டு நூல்கள் தொகுக்கப்பட்டுள்ள வரிசை முறைமை, சபையின் எல்லாக் காலத்திற்கும் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடங்கும் நூல்> அதனைத் தொடர்ந்து சபையைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. அதனைத் தொடர்ந்து சபைக்குத் தேவையான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் சபை மற்றும் உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல்கள் யாவும் எழுதப்பட்ட கால வரிசையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மாறாக> ஒவ்வொரு நூலும் அதனதன் தேவை ஏற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது.

திருமடல்களே காலவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கின்றன. இந்த மடல்களே, “இளம் சபைகளுக்கு எழுதப்பட்டவை” என்று திருவாளர் பிலிப்பு என்பார் பெயர் சூட்டி அழைக்கிறார். யாக்கோபு, கலாத்தியர் மற்றும் தெசலோனிக்கேயர் ஆகிய மடல்களே முதலில் எழுதப்பட்டவை. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் அதாவது கி.பி. 50 -ஆம் ஆண்டின் அண்மையில் இவை இயற்றப்பட்டன.

அவற்றைத் தொடர்ந்து நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. மத்தேயு அல்லது மாற்கு முதலிலும், லூக்கா அவற்றைத் தொடர்ந்தும், இறுதியில் யோவானும் எழுதப்பட்டன. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கடைசியாக வெளிப்படுத்தின விசேஷம் நூலாக மலர்ந்தது.

5. புதிய ஏற்பாட்டின் பொருளடக்கம்

புதிய ஏற்பாட்டின் பொருளடக்கத்தைக் கீழ்க் கண்டவாறு சுருங்கக் கூறலாம்:

வரலாற்று நூல்கள்

நற்செய்தி நூல்கள்

அப்போஸ்தல நடபடிகள்

திருமடல்கள்

பவுல் எழுதிய மடல்கள்

பொதுவான மடல்கள்

திருவெளிப்பாடு

வெளிப்படுத்தின விசேஷம்

இந்நூல்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுபெறும் கிறிஸ்தவன், “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக” விளங்குவான்.

 

அவ்வாறு விசுவாசிகள் யாவரும் சிறந்த அறிவைப் பெறுவதற்கு இந்த விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை பயன்பட வேண்டுமென்பது எங்களது மன்றாட்டாகும்.

6. புதிய ஏற்பாட்டின் மொழிநடை

அன்றைய காலத்துப் பேச்சு மொழியாகத் திகழ்ந்த “கொய்னே” என்னும் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. இக்காலத்தில் ஆங்கிலம் உலகப் பொதுமொழியாகப் பயன்படுவது போன்று, கிறிஸ்தவ விசுவாசத்தின் முதல் நூற்றாண்டில் உலகமெங்கும் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது பொதுமொழியாக இந்த கிரேக்கமொழி திகழ்ந்தது.

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள், பாடல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் யாவும் எங்ஙனம் இனிமையும் அழகும் மிளிர்ந்த எபிரெய மொழியில் மிகப் பொருத்தமான முறையில் வரைந்து தரப்பட்டுள்ளனவோ, அதுபோலவே புதிய ஏற்பாட்டை செவ்வனே எழுதித்தர கிரேக்கமொழி வியத்தகு ஊடகமாக அருளப்பட்டது. அலெக்சாண்டர் மாமன்னன் தனது பேரரசைப் போர்களில் அடைந்த வெற்றியின் மூலம் உலகெங்கிலும் விரிவாக்கம் செய்தான். அவனுடைய போர்வீரர்கள் கிரேக்க மொழியை எளிதாக்கி பொது மக்கள் யாவரும் பேசும்படி பிரபலமாக்கினார்கள்.

கிரேக்க மொழியின் வழுவாத இலக்கணம், சொல்வளம் மேலும் பற்பல சிறப்புகள் யாவும் ரோமருக்கு எழுதிய மடல் போன்ற அருமையான புதிய ஏற்பாட்டு நூல்களின் வாயிலாக இறைமெய்ம்மைகளை எடுத்தியம்ப சீரிய நிலையில்உதவியுள்ளன.

“கொய்னே” (koine) கிரேக்கம் செம்மொழியாகக் கருதப்படக் கூடாதெனினும் அது “கொச்சையான பேச்சு மொழியோ”, சிறிதளவும் இலக்கிய நயம் அற்றதோ அன்று. புதிய எற்பாட்டின் சிலபகுதிகள், எடுத்துக்காட்டாக எபிரெயர், யாக்கோபு, 2 பேதுரு ஆகிய நூல்கள் இலக்கிய நயம் கொண்டவை. மேலும், லூக்கா சில இடங்களில் செம்மொழி நடையைக் கையாண்டுள்ளார். அதுபோல பவுலும் சில பகுதிகளை அழகுற மொழிந்துள்ளார் (எ.கா. 1 கொரி. 13:15).

7. புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகள்

ஆங்கில மொழி, பற்பல வேதாகம மொழி பெயர்ப்புகளைப் பெற்று நற்பேறு பெற்றுள்ளது!

இம்மொழி பெயர்ப்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

1. சொல்லுக்குச் சொல் நேரடி மொழிபெயர்ப்புகள்

J. N. டார்பி 1871 -ல் வெளியிட்ட “New Translation”, 1881 -ல் வெளிவந்த Revised Version அதனுடைய அமெரிக்க வெளியீடாகிய American Standard Version (1901) ஆகியவை சொல்லுக்குச் சொல் நேரடி மொழிபெயர்ப்புகளாகும். வேதாகமத்தைக் கற்க இவை பெரிதும் உதவியபோதிலும் ஆராதனைக்கும், பொது இடங்களில் படிப்பதற்கும், மனப்பாடம் செய்வதற்கும் உகந்தவை அல்ல. ஆகவே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மாட்சியும் அழகும் மிக்க KJV மொழிபெயர்ப்பை விடாமல் பற்றிக்கொண்டுள்ளனர்.

 2. முழுவதும் இசைவான மொழிபெயர்ப்புகள்

எபிரெயம் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிச்சொற்களுக்கு ஒத்த ஆங்கிலச் சொற்களைப்பயன்படுத்தும் இந்த மொழிபெயர்ப்புகள் தேவையான இடங்களில் ஆங்கில மொழிக்குரிய வழக்குச் சொற்களையும் மொழிநடைகளையும் ஆங்காங்கே கையாண்டுள்ளன. இவற்றுள் KJV, RSV, NASB, NKJVஆகியவை அடங்கும். RSV மொழி பெயர்ப்பு புதிய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பைபொருத்தவரை நம்பத்தகுந்ததாக இருப்பினும், பழைய ஏற்பாட்டில் காணப்படும் மேசியாவைக்குறித்த தீர்க்கதரிசனப் பகுதிகளில் கருத்துச் சிதைவுக்கு இடம் கொடுத்துள்ளது. தற்காலத்தில் சில வேத அறிஞர்களும் இம்முறையைக் கையாளுவது ஆழ்ந்த வருத்தத்திற்குரியதாகும்.

விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரையின் ஆங்கிலப் படைப்பு NKJV மொழிபெயர்ப்பை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஏனெனில் அந்த மொழிபெயர்ப்பில் KJV -இன் அழகும், இன்றைய கால ஆங்கிலத்தின் எளிமையும் ஒருங்கே இணைந்து மிளிர்ந்துள்ளன. பல புதிய மொழிபெயர்ப்புகளில் விடுபட்ட பல வசனங்களும் சொற்களும் NKJV மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழில் பவர் மொழி பெயர்ப்பு முழுவதும் இசைவான மொழிபெயர்ப்பு வகையைச் சேர்ந்ததாகும்.

3 . ஆக்கப்பூர்வமான மொழிபெயர்ப்புகள்

இவ்வகை மொழிபெயர்ப்புகள் முழுவதும் இசைவான மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் சுதந்தரமான மொழிநடையைப் பின்பற்றுகின்றன. சில இடங்களில் பொழிப்புரையாக வேத பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனைப் படிப்போர் கவனத்தோடு படிக்கவேண்டியது அவசியம். Moffatt Translation, NEB, NIV, Jerusalem  Bible ஆகியவை இந்த வகுப்பைச் சார்ந்தவை. தற்காலத்தில் பவுலும் யோவானும் ஆங்கிலத்தில் தங்களுடைய எண்ணங்களை எழுதியிருந்தால் எவ்வாறு எழுதியிருப்பார்கள் என்று கருதி மொழிபெயர்க்கப்பட்டவையே இவை. கவனத்தோடு படிப்பவர்களுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் நல்ல பயன்தரும்.

4. பொழிப்புரைகள்

வேத பகுதிகளின் கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக வரைந்தளிக்கும் முறையை இவ்வகை மொழிபெயர்ப்புகள் கையாளுகின்றன. கருத்துகளைத் தெளிவாகச் சொல்லும் பொருட்டு இவ்வகை மொழிபெயர்ப்புகளில் ஏராளமான சொற்கள் தங்குதடையின்றி சேர்க்கப்பட்டுள்ளன. மூலமொழியிலிருந்து மிகவும் மாறுபட்ட சொற்களை இவ்வகை மொழிபெயர்ப்புகள் பின்பற்றியிருப்பதால் இவற்றைக்கொண்டு விளக்கம் அளிப்பதில் மாறுபட்ட கருத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக The Living Bible நற்செய்தி வழங்குவதைக் கருத்திற்கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பல மாறுபட்ட கருத்துகள் இதில் அடங்கியுள்ளன.

J.B.Phillips எழுதிய பொழிப்புரை (அவர் இதனை மொழிபெயர்ப்பு என்றே சொல்லுகிறார்) இலக்கிய நயம் படைத்தது. பவுலும் பேதுருவும் என்ன நினைத்து எழுதியிருப்பார்கள் என்று பிலிப்பு நம்பினாரோ  அவற்றையே தாம் எழுதியிருப்பதாக அவர் கூறுகிறார்.

மேற்கூறிய மொழிபெயர்ப்பு வகைகளில் ஒவ்வொரு வேதாகமத்தை வாங்கி ஒப்பிட்டுப்பார்ப்பது நன்மை பயக்கும். எனினும் முழுவதும் இசைவான மொழிபெயர்ப்பு வேத ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய மொழிபெயர்ப்பைச் சார்ந்தே இந்த விளக்கவுரை எழுதப்பட்டுள்ளது.

தொடரும்…

இரயில் பயணம்

இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று பயணஞ்செய்த பெட்டியில் பெரிய சத்தமும் கூச்சலும் எழுந்தது. எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். இரண்டு பயணிகள் ஒரு இருக்கைக்காக சண்டை யிட்டுக்கொண்டிருந்தனர். இருவரும் பதிவு செய்த சீட்டை எடுத்துக்காட்டினர். இது எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் என இருவரும் உரிமைபாராட்டினர். காரணம் என்ன வென்றால் இருக்கையின் ஒரே இலக்கமே இருவருடைய பயணச்சீட்டிலும் காணப் பட்டது.பயணிகளாலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. ஓருவர் மற்றவருடைய சாமான்களையெல்லாம்எடுத்து நடை பாதை யில் எறிந்தார். சிலர் ரயில்வேயின் தவறு என்றனர். சிலர் கணனியில் இத்தகைய தவறுகள் ஏற்படாது என்றனர். சிறிது நேரத ;தில் டிக்கட் பரிசோதகர் அங்கே வந்தார். முதலில் அவரும் குழப்பமடைந்தாலும் சற்று நேரத்தினுள் தவறு என்ன என்பதைக் கண்டுகொண்டார். சண்டையிட்ட பயணிகளில் ஒருவர் தவறான இரயிலில் ஏறி யிருந்தார். வன்மையாக சண்டையிட்டவரே இப்பெரிய தவறைச் செய்திருந்தார். தவறைச் சுட்டிக்காட்டிய போது அவர் முகம் கறுத்தது. வெட்கித் தலைகுனிந்தார். அடுத்த ஸ்டேசனில் அவர் இறங்க வேண்டியதாயிற்று. எந்தப்பெரிய தவறு. எவ்வளவு அவமானம்! எத்தனை கொடிய விளைவு!

எல்லா இரயில்களும் ஒரே ஊர்களுக்குச் செல்வதில்லை. எல்லாப் பெருந் தெருக்களுமே ரோம் நகரத்தை இணைப்ப தில்லை. எல்லா நதிகளும் ஒரே கடலுக்குள் பாய்வதில்லை. எல்லா இரயில்களும் ஒரேமாதிரியாகவே இருக்கும். எல்லா பெருந்தெருக்களும் ஒரே மாதிரி யாகவே இருக்கும். எல்லா நதிகளும் ஒரேமாதிரியாகவே இருக்கும். ஆயினும் இவை சென்றடையும்; இடங்கள் வௌ; வேறாகவே உள்ளன. நாம் சரியான வண்டியில், சரியான பாதையில் முறைப்படி பயணம் செய்கிறோமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

இல்லையேல் முடிவில் ஆபத்தாக முடிந்து விடும். அந்த இரயில் பயணியைப் போல வாழ்வை நஷ்டத்திலும் இழப்பிலும் அவமானத்திலும் கொண்டுவந்து விடும். உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. அது சரியானதா? தவறானதா? என்பதையும் காலதாமதமின்றி உறுதி செய்வது அவசியம்.

வாழ்க்கையும் ஒரு பயணம் தான்.
“ பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை” எமது வாழ்க்கைப் பயணமும் இந்த இரயில் பயணத்துக்கு ஒத்ததாகவே உள்ளது. அப்படியானால் நாம் செல்லும் இலக்கு என்ன? என்பதை தீர்மானித்து, சந்தேகத்துக்கு இடமின்றி சரியான பாதையையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

வேதம் இரண்டு வழிகளைக் காட்டுகிறது. 1. இடுக்கமான ஜீவவழி  2. விசாலமான மரணவழி இரண்டு பாதைகளும் வெவ்வேறான இடத்துக்கு செல்கின்றன. குறுகிய பாதை கவர்ச்சியின்றி இடுக்கமும் துன்பமும் நிறைந்ததாக இருப்பினும் முடிவோ நித்திய மகிழ்ச்சியுள்ள பரலோக வாழ்வாகும். இவ்வழியில் பயணம் செய்வோர் சிலரே! மாறாக கவர்ச்சியுள்ள விசாலமான பாதையில் பயணிப்போர் பலர். அது பாவமும், சுயநலமும், களியாட்டும், சிற்றின்பமும் நிறைந்த பாதையாக உள்ளது அதன் முடிவோ நித்திய அழிவு.

நித்திய ஜீவ பாதை எது?

அப்படியானால், ஆசீர்வாதமுள்ள ஜீவ பாதை எது?
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். ஆம். அவரே நித்திய வாழ்வுள்ள தேசத்துக்கு வழியாக உள்ளார். மனிதர்களாகிய நாம் வழி தப்பி அலைகிறவர்களாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எம்மைத் தேடி வந்த மேய்ப்பராகிய ஆண்டவரின் அங்கலாய்ப்பை கேளுங்கள்: என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலைய விட்டார்கள்@ ஒரு மலையிலிருந்து மறு மலைக்குப் போனார்கள். தங்கள் தொழுவத்தை மறந்து விட்டார்கள். (எரே.50:6) ஆம்! தவறான வழியில் சென்று கொண்டிருக்கிற நம்மை நல்வழிக்குத் திருப்பி ஜீவனுள்ளோர் தேசமாகிய பரலோகத்துக்கு எம்மை அழைத்துச் செல்லும்படியாக அவரும் ஏழை மானிடனாக பாவமின்றி பரிசுத்தராகப் பிறந்து போதனை செய்து, மனிதகுலத்தின் பாவநோயை நீக்கி பரிசுத்தப்படுத்தும்படியாக மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களைத் தாமே ஏற்று சிலுவையில் பலியாகி மனித இனத்தை பரலோகம் செல்ல தகுதிப் படுத்தினார்.

பரிசுத்த தேவனுடன் சேர முடியாதிருந்த மனித குலத்தின் பாவங்கள், சாபங்கள், அக்கிரமங்கள் எல்லாவற்றையும் பாவ மறியா பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தனது மரணத்தினால் ஒப்புரவாக்கி பரலோகத்துக்கு செல்லும் பாதையை ஏற்படுத்தினார். உலகத்திலுள்ள எந்த மனித னாவது, எந்த இனமாவது, எந்த பாஷைக் காரராவதுவது பரலோகம் செல்ல விரும்பினால் அதற்கு இயேசு கிறிஸ்து ஒருவரே வழியாக இருக்கிறார்.

இந்த உலகத்திலே வேறு எந்த மார்க்கமோ, எந்தக் கடவுளோ, எந்தவொரு அவதாரமோ பரலோகத்துக்கு வழியை அமைக்க முடியாது.
ஆம்! சர்வலோகப் பாவங்களுக்காக பலியான தெய்வம் இயேசு ஒருவரே! உலகத்திலே பலி எடுத்த கடவுளர் உண்டு. எமக்காகப் பலியாகி பாதை அமைத்த இறைவன் இயேசு ஒருவரே!

அன்பானவர்களே! நீங்கள் இயேசுவை பின் பற்றுவீர்களானால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சரியான வழியைத் தெரிந்து கொண்டவர் ஆவீர்கள். நீங்கள் என்றைக்கும் வெட்கப்பட்டுப்போவதில்லை. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வதோடு உங்கள் சந்ததியையும் மீட்டுக்கொண்டவராவீர்கள் நீங்கள் செய்யப்போவது சமய மாற்றமல்ல பாதை மாற்றமே. இது ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமேயன்றி ஒரு சமயக் கொள்கை அல்ல.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப் படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்.4:12)
தங்களின் சரியான பயணத்தை இரட்சகர் இயேசு கிறிஸ்துவுடன் தொடர எங்கள் வாழ்த்துக்கள்!