தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்

ஜனவரி 21

கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.  (1.சாமு.16:14)

பொல்லாங்கான செயல்களைத் தேவன் செய்கிறதுபோலத் தோன்றும் வசனங்களை நாம் திருமறையில் காணலாம். எடுத்துக்காட்டாக “அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார் (நியா.9.23) என்று கூறப்பட்ட நிகழ்ச்சி அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்த காலத்தில் நடந்தது. ஆகாப்பின் காலத்தில், மிகாயா அந்தப் பொல்லாத மன்னனிடத்தில், கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார் என்று கூறினான் (1.இராஜா.22:23). யோபு தன்னுடைய இழப்பிற்க கர்த்தரே காரணர் என்றுரைத்ததாகக் காண்கிறோம், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையைப் பெறவேண்டாமோ (யோபு 2:10). ஏசாயா 45:7ம் வசனத்தில் கர்த்தர் தாமே உரைக்கிறார், “சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்கினவர் நானே”. என்றாலும், தேவன் தூயராக இருக்கிற காரணத்தினால், பொல்லாங்கை அவரால் தொடங்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது. நோயும், பாவமும், பாடுகளும், மரணமும் கர்த்தரிடத்தில் இருந்து வருவதில்லை. அவர் ஒளியாய் இருக்கிறார். அவரிடத்தில் இருளானது இல்லவே இல்லை (யோ.1:5).

நோய்க்கும், பாடுகளுக்கும், சோகத்திற்கும், அழிவிற்கும் சாத்தானே தொடக்கமாக இருக்கிறான் என்பதைத் திருமறைப் பகுதிகள் பல தெளிவாக விளக்குகின்றன. பிசாசே, யோபுவின் இழப்பிற்கும், தாங்கவொண்ணா வேதனைக்கும் காரணமாய் இருந்தான். நிமிரக்கூடாத கூனியாக ஒரு பெண்மணி 18 ஆண்டுகள் சாத்தானால் கட்டிவைக்கப்பட்டிருந்தாள் என்று இயேசு கிறிஸ்து கூறினார் (லூக்.13:16). தன் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைப்பற்றி, என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது என்று பவுல் கூறினார் (2.கொரி.12:7). மனுக்குலத்திற்கு ஏற்படும் அனைத்துத் தொல்லைகளுக்கும் சாத்தானே காரணன். அவ்வாறாயின், பொல்லாங்கைத் தேவன் தோற்றுவிக்கிறார் என்று தோன்றும் வசனங்களை எங்கனம் விளக்குவது? தேவன் சிலவற்றை அனுமதிக்கிறார். அவற்றைத் தேவனே செய்கிறார் என்று தெரிவிக்கும் வசனங்களைத் திருமறையில் காணலாம் என்பதே அதன் பொருளாகும். அவருடைய ஆணையிடும் சித்தம் என்றும், அவருடைய அனுமதிக்கும் சித்தம் என்றும் இதனைப் பகுத்துக் காணவேண்டும். தம்முடைய பிள்ளைகளுக்கென்று முதலவதாகத் தெரிந்துகொள்ளாத அனுபவங்களில் ஊடாக அவர்கள் செல்லும்படி அவர் அனுமதிக்கிறார். வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் அலைந்து திரியும்படியாக அனுமதித்தார். ஆனால் அவருடைய கட்டளையாகிய சித்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் நேரான வழியில் அவர்களை வாக்குறுதி அளிக்கப்பட்ட நாட்டிற்குக் கொண்டுவந்திருப்பார்.

பொல்லாங்கான ஆவிகளையும் மனிதர்களையும் அவர் அனுமதித்தாலும், கடைசி வார்த்தை அல்லது தீர்ப்பு எப்பொழுதும் தேவனுடையதே. அவருடைய மகிமைக்காக அதனைத் தமது மேலான அதிகாரத்தினால் மாற்றுகிறார். அதன் நிமித்தமாகத் தங்களைச் சீர்படுத்திக் கொண்டிருக்கும் நற்பேற்றை நல்குகிறார்.