எளிமையில் மேன்மை

ஜனவரி 17

மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8)

அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை செய்கின்ற யாவருக்கும் பொருத்தமுடையவை என்னும் பொருளை ஏந்தி வருகின்றன (எபேசி.6:5-8).

எந்தக் கனமான ஊழியத்தையும், அது எவ்வளவு சாதாரணமாக இருக்கலாம். தேவனுடைய மகிமைக்கு என்று செயல்ப்படுத்த முடியும் என்பதை அந்த அறிவுரைகள் நமக்கு முதலாவதாகத் தெரிவிக்கின்றன. அந்த அடிமைகள் தரையைச் சுத்தம்செய்வார்கள், உணவு ஆயத்தம் செய்வார்கள். பாத்திரங்களைக் கழுவுவார்கள். கால்நடைகளைப் பராமரிப்பார்கள் அல்லது பயிரை விளையச் செய்வார்கள். இவை யாவற்றையும் அவர்கள் நாள்தோறும் செய்தாலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கென்று செய்யவேண்டுமென்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறான் (வச 6). அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்யும் வேளையில் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யவேண்டும். கர்த்தருக்கென்றே ஊழியம் செய்யவேண்டும் (வச 8). நன்மை செய்து கர்த்தரிடத்தில் அதற்குரிய பலனை அடைவார்கள் (வச 7).

நாம் செய்கின்ற வேலைகளை உலகசார்ந்தது என்றும், புனிதமானது என்றும் பாகுபடுத்திச் சிந்திக்கிறோம். வார நாட்களில் நாம் செய்கின்ற அலுவல்கள் யாவும் உலகு சார்ந்தது என்றும், நாம் செய்யும் பிரசங்கங்கள், சாட்சி கூறுதல், திருமறை நூலைக் கற்பித்தல் போன்றவை யாவும் புனிதமானது என்றும் கருதுகிறோம். ஆயின், கிறிஸ்தவன் அங்ஙனம் பாகுபடுத்திப் பார்க்கவேண்டியதில்லை என்று இப்பகுதி நமக்குக் கற்பிக்கிறது. புகழ்பெற்ற இறைப்பணியாளரின் மனைவி, இதனை நன்கு உணர்ந்தவராக தனது சமையல் அறையில், இறை ஊழியம் நாள் ஒன்றுக்கு மும்முறை இங்கு செய்யப்படுகிறது என்று எழுதி வைத்திருந்தார்.

மற்றுமொரு அருமையான பாடத்தையும் இங்கு நாம் கற்றிடலாம். சமுதாயத்தில் எவ்வளவுதான் தாழ்வான நிலையில் ஒருவர் இருந்தாலும் கிறிஸ்தவத்தின் மிகச்சிறந்த நற்பேறுகளும், பலங்களுக்கும் அவரை விலக்கிவைக்கமுடியாது. ஒருவருடைய வேலையில் அவர் அணியவேண்டிய ஆடை உயர்தர ஆடையாக இருக்காது. ஆயினும் அவருடைய வேலை கண்ணியமானதாக இருக்குமென்றால் அது கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டுவரும். அவர் மேலான பலன்களை நிறைவாய்ப் பெறுவார். அடிமையானவனானாலும் சுயாதீனமுள்ளவனானாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவான் (வச 7).

இவ்வுண்மையை விசுவாசித்து, எல்லாவற்றிலும் உண்மைப் பார்க்கவும், எதைச்செய்தாலும், அதை உமக்கென்;று செய்யவும் என் தேவனே கற்றுத் தாருமென்று ஜார்ச் கெர்பட்டைப்போல ஜெபம் செய்வோம்.