விசுவாசியின் விடுதலை

ஜனவரி 15

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13).

தேவனுடைய பிள்ளை என்னும் சுயாதினம் விலைமதிக்க இயலா நற்பேறாகும். குமாரனின் மூலமாக ஒருவன் விடுதலை அடைந்தவனாயின், அவன் உண்மையிலேயே விடுதலை பெற்றவனாவான். ஆயின், அவன் பொறுப்புமிக்க விடுதலையைப் பெற்றிருக்கிறானேயொழிய, எல்லாவற்றையும் செய்ய உரிமை பெற்றவனல்லன்.

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13).

வீட்டிலுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெற, பிள்ளைகள் விரும்புகின்றனர். பாடத்திட்டத்தின் ஒழுங்கினின்று விடுதலைபெற இளைஞர் விரும்புகின்றனர். வேலை செய்யும் இடங்களில் இருக்கும் கட்டுப்பாட்டிற்கு எதிராகச் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் இப்படிப்பட்ட விடுதலைக்கென்று அழைக்கப்படவில்லை.

விண்மீன்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாதையிலிருந்தோ, தொடர்வண்டி தண்டவாளத்திலிருந்தோ, விமானம் அதற்கென்று கொடுக்கப்பட்ட வழியிலிருந்தோ மாறிச்செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் விபரீதமே.

ஜோவெட் என்பார், சட்டம் இல்லாதவர்களாகக் கட்டுப்பாடின்றி செயல்புரிய அனுமதிக்கப்பட்ட ஒரு ஆட்சியை நாம் எங்கும் காணமுடியாது. விடுதலை அடைந்துவிட்டோம் என்று சொல்லி எவ்வழியில் சென்றாலும் நாம் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். இசையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பாடுகிறவன் இன்னிசையை வெளிப்படுத்துகிறான். புவி ஈர்ப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு கட்டுகிறவன் அழகிய வீட்டை எழும்புகிறான். உடல் நலத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகளை அவ்வப்போது மீறுகிறவன் எத்தகைய விடுதலையை உடையவனாயிருக்கிறான் ? இக்கட்டுப்பாட்டை மீறுகிறவன் உடல் பாதிப்பையே அடைகிறான் எனத் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரமாணத்தினின்றும் விசுவாசி விடுதலை பெற்றுள்ளான் என்பது உண்மையே (ரோ.7:3). அவன் எவ்விதக் கட்டுப்பாடுமற்றவன் என்பது அதன் பொருளன்று. இப்பொழுது அவன் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறான். அன்பினாலே கட்டப்பட்டிருக்கிறான். புதிய ஏற்பாட்டில் காணும் பற்பல கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறான்.

விசுவாசி பாவத்தை எஜமானாகக் கொண்டிருப்பதில்லை. (ரோ.6:7, 18,22). தேவனுக்கு அடிமையாகவும், நீதிக்கு ஊழியம் செய்யவுமே அவ்விடுதலையை அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களிலிருந்தும் விசுவாசி விடுதலைபெற்றுள்ளான் (1.கொரி.9:19). எல்லாருக்கும் அடிமையாகி, அநேகரைக் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள அவ்விடுதலையைப் பெற்றுள்ளான். துர்க்குணத்திற்குக் காரணமாகவே (1.பேது.2:16), மாம்சத்திற்கு ஏதுவாகச் செயலாற்றவோ (கலா.5:13), எவருக்கும் தடையாக விளங்கவோ (1.கொரி.8:9), கர்த்தருடைய திருப்பெயருக்குக் களங்கத்தை விளைவிக்கவோ (ரோ.2:23-24), உலகத்தில் அன்புகூரவோ (1.யோ.2:15-17), தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தவோ விசுவாசிக்கு விடுதலையில்லை.

நிறைவேற்றிவிட்டேன் என்ற எண்ணத்தையும், இளைப்பாறுதலையும் தன்னுடைய சொந்த செயலைச் செய்வதினாலே ஒரு மனிதன் பெறுவதில்லை. கிறிஸ்துவின் நுகத்தை எடுத்துக்கொண்டவனாக, அவரிடத்தில் கற்றுக்கொள்பவனே அதனைக் கண்டடைகிறான். “அவருக்குப் பணிசெய்தலே நிறைவான விடுதலை”.