நம்முடையவைகள்

ஜனவரி 14

எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23)

பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில் தேவையற்ற முறையில் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டனர். சிலருக்கு பவுல் நிறைவான தலைவராகத் தெரிந்தார். சிலரோ அப்பொல்லோவை விரும்பினர். இன்னும் சிலருக்கு பேதுருவே சிறந்ததொரு தலைவராகத் தெரிந்தார். இவர்கள் யாவரும் கொரிந்து பட்டணத்து விசுவாசிகள் அனைவருக்கும் உரியவர்களாயிருக்க, அவர்களில் ஒருவரை மட்டும் தெரிந்தெடுப்பது பொருத்தமற்றது என்று பவுல் கூறுகிறார். பவுல் என்னுடையவர் „ பேதுரு“ என்னுடையவர் „அப்பொல்லோ“ என்னுடையவர் என்று கூறுவதற்கு மாறாக „பவுலும், அப்பொல்லோவும், கேபாவும் என்னுடையவர்கள்“ என்றே அவர்கள் கூறியிருக்கவேண்டும்.

எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23)

இன்றைய நாட்களில் இது நமக்களிக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறது. லூத்தர், வெஸ்லி, பூத், டார்பி அல்லது சபைக்குச் சிறந்த ஈவாகக் கொடுக்கப்பட்ட பலரில் ஒருவரையே நான் பின்பற்றுவேன் என்று தவறிழைக்கிறவர்களாக இருக்கிறோம். இவர்கள் யாவரும் நம்முடையவர்கள். இவர்கள் நமக்குத்தந்த வெளிச்சத்திற்காக நாம் களிகூரலாம். ஒரு மனிதனைப் பின்பற்றுகிறவர்களாக நாம் இருக்கக்கூடாது.

கர்த்தருடைய ஊழியர்கள் மட்டுமே நம்முடையவர்கள் அல்ல. இந்த உலகே நம்முடையதுதான். நாம் தேவனுடைய சுதந்திரர்களாகவும், கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்களாகவும் இருக்கிறோம். ஒருநாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு திரும்பி வந்து, இவ்வுலகை ஆளுகை செய்வோம். அதுவரை மனந்திரும்பாத மனிதர்கள் இவ்வுலகம் அவர்களுடையதே என்று கூறி, இங்கே அரசாளுவர். உண்மை அதுவன்று. அவர்கள் இவ்வுலகத்தைக் கவனித்துக் கொள்ளுகிறவர்களாகவே இருக்கின்றனர். நாம் திரும்பிவந்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்வரை இவ்வுலகை நடத்துகிறவர்களாக இருப்பர்.

வாழ்வு நம்முடையதாக இருக்கிறது. நாம் உயிரை உடையவர்களாயிருக்கிறோம் என்பது இதன் பொருளன்று. எல்லா மனிதர்களும் உயிர் உடையவர்களாயிருக்கின்றனர். நாம் அளவிடக்கூடா நீடுவாழ்வை உடையவர்களாயிருக்றோம் என்பதே இதன் பொருளாகும், அது நிலைபேறான வாழ்வாகும். கிறிஸ்துவின் வாழ்வையே நாம் பெற்றிருக்கிறோம். நமது வாழ்வு மாயையோ அல்லது மனம் கலங்கி கவலைகொள்கிற ஆவியோ அன்று. அது அர்த்தமுள்ளது, நோக்கமுடையது, பலன் உள்ளதாகும்.

மரணம் நம்முடையது. மரண பயம் கொண்டவர்களாக, இனிமேல் நாம் அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்களல்லர். இப்பொழுதோ, நம்முடைய ஆத்துமாவைப் பரலோகத்திற்கு எடுத்துச்செல்லும் தூதனாகவே மரணம் விளங்குகிறது. ஆகவே மரணம் நமக்கு ஆதாயமாக விளங்குகிறது.

இவை யாவற்றிற்கும் மேலாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள், கிறிஸ்து தேவனுக்கு உரியவர். இதனைக் குறித்துச் சிந்திக்கும்போது, கை கிங் என்பார் நகைச்சுவையாய்க் கூறிய கூற்றினை நினைவுகூர்கிறேன். என்ன நற்பேறுபெற்ற பிச்சைக்காரர்கள் நாம்.