பெற்றுக்கொண்ட கிறிஸ்தவன்

ஜனவரி 12
உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? (1.கொரி.4:7)

நம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளாமல் எதையும் கொண்டிருப்பதில்லை. நம்முடைய சரீரத்திற்கும், மனதிற்கும் தேவையானவற்றைப் பிறப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறோம். நாம் எவ்வாறு காணப்படுகிறோம், நாம் எவ்வளவு அறிவோடு சிந்திக்கிறோம் என்பவை, நாம் பெருமைப்படக்கூடாதபடி, நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. நமது பிறப்பில் அவற்றைப் பெற்றுள்ளோம்.

நாம் அறிந்திருக்கிறவை யாவும் நமது கல்வியினால் பெற்றவையாகும். அநேக செய்திகளை நம்முடைய மனதிற்குள்ளாகப் பலர் ஊற்றியிருக்கிறார்கள். புதியதாக ஒரு சிந்தனையைப் பெற்றிருக்கிறோம் என்று எண்ணும்போதெல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு நூலில் அது இருப்பதைக் காணுவோம். எமர்ஸன் என்பார், என்னுடைய மிகச் சிறந்த சிந்தனைகள் யாவும், பழங்காலத்திலிருந்து திருடப்பட்டவையே என்று கூறியுள்ளார்.

நாம் நம்முடைய திறமைகளை எவ்வாறு பெற்றிருக்கிறோம்? சில திறமைகள் நமது குடும்பத்தைச் சார்ந்தவை. அவற்றைப் பயிற்சியினாலும் நடைமுறையினாலும் வளர்த்துக்கொள்கிறோம். உண்மை யாதெனில், நம் மூலமாக ஒன்றும் தொடங்கவில்லை. அவை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

தனக்கிருக்கும் அதிகாரத்தைக் குறித்து, பிலாத்து பெருமை பாராட்டினான். ஆயின், அவனிடத்தில் கர்த்தர், „பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால் என் மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது“ என்று நினைவுபடுத்தினார் (யோ.19:11). சுருங்கக் கூறின், மனிதனுடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய கிருபையாக இருக்கிறது. ஆகவேதான பவுல், எல்லாவற்றையும் நீ பெற்றுக்கொண்டவனாயிருந்தும், சிலவற்றை நீயே சாதித்ததாகப் பெருமை பாராட்டுவதேன்? என்று கேட்கிறார் (1.கொரி.4:7).

இதன் காரணமாகவே, ஹரியட் பீச்சர் ஸ்டோவ் என்பார் தன்னுடைய நூலின் மூலமாக வந்த பெருமையைத் தனக்குரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை, “Uncle Tom´s Cabin” என்ற நூலை நானா இயற்றினேன்? இல்லவே இல்லை. அந்தக் கதையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கர்த்தர் தாமே அதை இயற்றினார். நான் அவருடைய கரத்திலிருந்த ஒரு எளிமையான கருவியே. ஓன்றன்பின் ஒன்றாக அக்கதையின் காட்சிகளை தரிசனத்தில் கண்டேன். அதனைச் சொற்களில் வடித்தேன். அவருக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக என்றே கூறினார்.

பெற்றுக்கொள்ளாமல் எதையும் நாம் உடையவராயிருப்பதில்லை என்று தொடர்ந்து நினiவுகூர்வோமெனில், அவ்வெண்ணம் தற்புகழ்ச்சியிருந்தும், பெருமை பாராட்டுவதிலிருந்தும் நம்மைக் காக்கும். நாம் ஆற்றிய நன்மைகட்கு தேவனே காரணர் என்று அவருக்கு மகிமையைக் கொடுக்க வழிவகுக்கும். ஆகவே, ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். பராக்கிரமன் தன் பாராக்கிமத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். மேன்மைபாராட்டுகிறவன் ப+மியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையைம் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ஒவ்வொருவரும் கூறக்கடவோம் (எரேமி.9:23-24).