ஊழியத்தின் விலை

ஜனவரி 30

இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8)

உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை நிறைந்தவனாகப் பிறந்தேன். உயிர் எழுத்துக்களை நான் கற்றுக்கொளும்முன்னர், இசைக் குறியீடுகளையெல்லாம் உள்ளுணர்வோடு கற்றுக்கொண்டேன். இது தேவன் தந்த அருளாகும். இதனை நான் என் சுயமுற்சியால் பெறவில்லை. ஆகவே, நான் இசையினை வழங்குவதற்காக நன்றிப்பாராட்டைப் பெற்றிடத் தகுதி படைத்தவனல்லன். இசை, புனிதமானது. அதை விற்கக்கூடாது. இசை மேதைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் பெருங்கட்டணத்தை வசூலிப்பது அவர்கள் சமுதாயத்திற்கு எதிராகச் செய்யும் குற்றமே என்று கூறியுள்ளனர்.

கிறிஸ்தவப் பணியாற்றும் மக்கள் யாவரும் இச்சொற்கள் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பெறுவது அன்று. கொடுப்பதே கிறிஸ்தவ ஊழியமாகும். நான் பெற்றுக்கொள்ள அங்கே என்ன விலை கிடைக்கும்? என்பது நமது கேள்வியாக இருக்கக்கூடாது. மாறாக அதிகமான எண்ணிக்கையில் செய்தியைச் சிறந்த முறையில் எவ்வாறு நான் பகிர்ந்துகொள்ளுவேன்? என்றே கேட்கவேண்டும். கிறிஸ்தவ ஊழியத்தில் காரியங்கள் நாம் விலைசெலுத்த வேண்டியதாக இருக்கவேண்டுமேயொழிய, ஊதியம் பெறுவதாக இருக்கலாகாது.

வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்பது உண்iமாதான் (லூக்.10:7). சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும் என்பது உண்மையே (1.கொரி.9:14). ஆயினும், தன்னுடைய வருகைக்கு ஒரு விலையினை நிர்ணயிப்பது நியாயமாகாது. பாடல்களைப் பயன்படுத்துவதற்கு மிகுதியான பங்கு வீதத்தை வசூலிப்பது சரியல்ல. செய்திகளை அளிப்பதற்கும், பாடல்களைப் பாடுவதற்கும் கட்டணத்தை வசூலிப்பது நன்றன்று.

மாயவித்தைக்காரனாகிய சீமோன், பரிசுத்த ஆவியைக் கொடுக்கத்தக்க அதிகாரத்தை விலைகொடுத்து வாங்க நினைத்தான் (அப்.8:19). தான் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழி இது என்று அவன் நினைத்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இச்செயலால் „சைமோனி“ என்ற சொல் பிறந்தது. மதத்தின் அடிப்படையிலான சிலாக்கியங்கள் வாங்குவதையும் விற்பதையும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலச் சமயத்தலைவர்கள் தங்களை உயர்த்துவதற்கு இம்முறையைக் கையாளுகின்றனர் என்று கூறுவோமாயின் அது மிமையாகாது.

„கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து“ பணத்தை அகற்றிவிட்டால் பெரும்பாலான ஊழியங்கள் நின்றுபோகும். எந்நிலையிலும் கர்த்தருடைய உண்மையும் உத்தமமுமுள்ள ஊழியக்காரார்கள் தங்களுடைய வலிமை முற்றிலுமாகச் செலுத்தித் தீருமட்டும் ஊழியத்தில் முன்னேறிச் செல்வார்கள். இலவசமாய்ப் பெற்றோம். இலவசமாகக் கொடுக்கவேண்டும். நாம் மிகுதியாகக் கொடுக்கக், கொடுக்க, நமது பரலோகின் கணக்கில் நற்பேறு பெருகும். பெரிதான வெகுமதியைப் பெறுவோம். அமுக்கிக் குலுக்கி, சரிந்துவிழும்படி அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள்.