அவசரம்

ஜனவரி 28

விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16)

ஒலியைக்காட்டிலும் செய்தித்தொடர்பு விரைந்து செல்லும் நாட்களில் நாம் வாழ்கின்றோம். “அவசரம்” என்னும் சொல், தற்காலச் சமுதாயத்தின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொல்லாக விளங்குகிறது. எனினும் அச்சொல்லை நல்லதொரு பொருளில் எப்போதாவது மட்டுமே தேவன் பயன்படுத்தியதாகத் திருமறையில் நாம் காண்கிறோம். இஃது நமக்குச் சிறந்த படிப்பினையைத் தருகிறது. “எப்போதாவது” என்று நான் கூறுவதன் காரணம் யாதெனில், மனம்திரும்பிவந்த கெட்டகுமாரனை மன்னிக்கும் பொருட்டு அவசரமாய் சென்ற தகப்பனைத் திருமறையில் காண்பிப்பதேயாகும். பொதுவாகக் கூறுவோமாயின், தேவன் அவசரமாக எதனையும் செய்வதில்லை.

“இராஜாவின் காரியம் அவசரமானபடியினால்” என்று தாவீது உரைத்தபோது (1.சாமு.21:8) அவன் தந்திரமான ஏமாற்றுவேலை செய்த குற்றமுடையவனாக இருந்தான். ஆகவே, முன்னும் பின்னுமாய்ச் சென்று தீவிரமாய் நாம் அலைந்துதிரிவது சரியானதே என்று நியாயப்படுத்துவதற்கு, அவசரம் என்ற தாவீதின் சொற்களை நாம் பயன்படுத்தக்கூடாது.

சொல்லப்பட்டிருக்கிற உண்மை யாதெனில், நாம் இன்றைக்கு எடுத்துக்கொண்ட வசனம் கூறுகிறபடி, கர்த்தரை உண்மையாக நம்புகிறவன், எதையும் அவசரமாய் செய்யவேண்டியதில்லை. நம்முடைய மாம்சத்தில் கட்டுப்பாடின்றி விரைந்து செயல்புரிவதைப் பார்க்கிலும், ஆவியில் அமைதியோடு நடந்து கொள்வது, நமது முயற்சியின் உடனடித் தேவையைச் சிறப்பாக நிறைவேற்றும்.

ஓர் இளைஞனைக் குறித்துக் காண்போம். திருமணம் செய்துகொள்ள அவசரப்பட்டவன். அவன் உடனடியாகச் செயல்ப்படவில்லையென்றால், அந்தப் பெண்ணை வேறொருவன் அடைந்துவிடுவான் என்பதே அவன் கூறிய காரணம். ஆயின், உண்மை யாதெனில் அந்தப் பெண்ணை தேவன் அவனுக்கென்று நியமித்திருந்தால், வேறொருவனும் அவளை அடையமாட்டான். அவள் தேவன் குறித்த பெண்ணாக இல்லாதிருந்தால், துரிதமாய்த் திருமணம் செய், வாழ்வெல்லாம் வருத்தம் கொள் என்னும் கடினமான முறையில் கற்றுக்கொள்ளவேண்டியவனாயிருப்பான்.

முழுநேர ஊழியம் என்று அழைக்கப்படுகிற வேலைக்குச் செல்ல அவசரம் காட்டும் வேறொரு மனிதனைப் பாருங்கள். உலகம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தான் காத்திருக்கக்கூடாது என்று வாதிடுகிறான். நாசரேத் ஊரில் தங்கியிருந்த வேளையில் இயேசு கிறிஸ்து அவ்வாறு வாதாடவில்லை. வெளியரங்கமான ஊழியத்திற்கு அவரைத் தேவன் அழைக்கும்வரை அவர் காத்திருந்தார். தனிநபர் ஊழியம் செய்யும் தருணங்களில், அவ்வப்போது நாம் அவசரத்தைக் காட்டுகிறவர்களாயிருக்கிறோம். கனி பழுக்கும் முன்னரே பறித்தவிடப் பதறுகிறோம். தூயஆவியானவர் ஒருவனுடைய பாவத்தை முற்றிலுமாகக் கண்டித்துணர்த்தும்வரை நாம் பொறுத்திருப்பதில்லை. அவ்வாறு செய்வதால் பொய்யான அறிக்கையும், மனிதன் தகர்ந்துபோவதுமே எஞ்சி நிற்கும். “பொறுமையானது ப+ரண கிரியை செய்யக்கடவது” (யாக்.1:4).

நமக்கென்று நாமாக ஏற்படுத்திக்கொண்ட பணிகளில் மதியீனமாய் ஓடுவதில் உண்மையான பயன் விளைவதில்லை. பொறுமையோடு கர்த்தரிடத்தில் காத்திருப்பவன் பயனுள்ள ஆவியானவரின் வழிநடத்துதலைக் கண்டடைவான்.