இறை அன்பு

ஜனவரி 25

தேவன் அன்பாகவே இருக்கிறார் (1.யோ.4:8)

இப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் “அன்பு” என்னும் பொருளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே”அகாபே” (Agape) என்னும் சொல்லாகும். நட்புபாராட்டுதலைக் குறிக்க ஃபிலியா (Philia) என்ற சொல்லும், காதல் என்னும் பொருளுடைய “ஈரோஸ்” (Eros) என்னும் சொல்லும் அம்மொழியில் ஏற்கெனவே இருந்தன. ஆயினும், தேவன் தமது ஒரேபேறான குமாரனைக் கொடுத்ததினாலே காண்பித்த அன்பைக் குறிக்க வேறுசொல் அம்மொழியில் இல்லாதிருந்தது. இந்த அன்பை ஒருவரிடத்தில் ஒருவர் காண்பிக்க வேண்டுமென்று தேவன் கற்பித்தார்.

இவ்வன்பு வேறோரு உலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இதனுடைய பரிமாணம் வித்தியாசமானது. தேவனுடைய அன்பிற்குத் தொடக்கமில்லை. அதற்கு முடிவுமில்லை. அது எல்லையற்றது. அதனை அளக்க இயலாது. அது முற்றிலும் தூய்மையானது. இச்சையால் கறைபடாதது. தியாக மனப்பான்மையுள்ளது. என்னவிலைகொடுக்கவேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பதில்லை. கொடுப்பதினாலே அது தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. “தேவன்…. அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்… என்று வாசிக்கிறதினாலே இதனை அறிவோம். பிறருடைய நலனை இவ்வன்பு இடைவிடாமல் நாடுகிறது. அன்புகூரத் தகுதியுடையவர்களிடமும், தகுதியற்றவர்களிடமும் இது செல்லுகிறது. பகைஞரிடத்திலும், நண்பர்களிடத்திலும் அன்புபாராட்டப்படுகிறது. யாரிடம் இவ்வன்பு செலுத்தப்படுகின்றதோ, அவருடைய தகுதியையும், குணநலத்தையும் சார்ந்திடாமல், அன்புசெலுத்துகிறவருடைய நற்குணத்தையே சார்ந்திருக்கிறது. இது முற்றிலும் தன்னலமற்றது. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. சூழ்நிலையை இது தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளாது. எத்தனை தவறுகள் இழைக்கபட்டுள்ளன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. தனக்கு எதிராகச் செய்த திரளான குற்றங்களையும், அவமானச் செயல்களையும், தயவாகத் திரையிட்டு மூடுகிறது. எப்போதும் மற்றவர்களைக் குறித்தே சிந்திக்கிறது. தன்னைக் காட்டிலும் பிறரை மேன்மையுள்ளவராகக் கருதுகிறது.

ஆனாலும், அன்பு உறுதிபடைத்ததாகும். தேவன் தாம் அன்புகூருகிற தமது மக்களைச் சிட்சிக்கவும் செய்கிறார். தீங்கையும் அழிவையும் பாவம் வருவிக்கின்ற காரணத்தினால், அதனை அன்பினால் பொறுத்துக்கொள்ள இயலாது. மேலும், தான் அன்புகூருகிறவரை தீங்கினின்றும், அழிவினின்றும் அது காக்கவிரும்புகிறது.

தம்முடைய ஒரேபேறான குமாரனைக் கல்வாரிக் குன்றில், சிலுவைமரத்தில் மரணமடைய ஒப்புக்கொடுத்த அன்பே, அன்பின் வெளிப்பாடுகளில் மிகவும் சிறந்தது. “பிதாவே உமது உள்ளத்திற்கு இனிமையானவர், அன்பின் குமாரன், அவரே உம் செல்வம், அவரையே நொறுக்கத்தந்தருளினீர்”, எம்மீது காட்டிய உமதன்பு பெரியது.