களைய வேண்டிய கவலை

ஜனவரி 24

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம் (பிலி.4:6)

பற்பல காரணங்களால் மனிதன் கவலைப்படுகிறான். புற்றுநோய், இருதயக்கோளாறு மற்றும் பல நோய்கள் தங்களைத் தாக்குமோ என்ற எண்ணம். உணவினால் ஏற்படும் உடல்நலக்குறைவு. விபத்தினால் உண்டாகும் மரணம், கம்ய+னிஸ்ட் உலகில் பிள்ளைகளின் வளர்ச்சி இவை யாவும் கவலைதரும் எண்ணங்களாகும். இவ்வாறான எண்ணிலடங்கா கவலைகள் மனிதனைப் பற்றிக்கொள்கின்றன.

இருந்தபோதிலும், தேவனுடைய திருமொழி எதுவாயிருந்தாலும், நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படவேண்டாம் என்று உரைக்கிறது. கவலையற்ற வாழ்வினை நாம் வாழவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இதற்குப் பல நற்காரணங்கள் உள்ளன.

கவலை தேவையற்றது. கர்த்தர் நம்மீது கண்ணோக்கமாயிருக்கிறார். அவர் நம்மைத் தமதுள்ளங்கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவர் அனுமதிக்கும் சித்தத்தினாலொழிய வேறெதுவும் நம் வாழ்வில் நடைபெறுவது இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கோ, விபத்துகளுக்கோ, விதிக்கோ நாம் பலியாகிப்போவதில்லை. நமது வாழ்க்கை தேவனால் திட்டமிடப்பட்டு, கட்டளையிடப்பட்டு, வழிநடத்தப்படுகிறது. கவலை வீணானது. ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ, அல்லது தவிர்க்கவோ அதனால் கூடாது. கவலை நாளையதினத்தின் வருத்தத்தை நீக்குவதில்லை. இன்றைய தினத்தின் பலத்தையே அது அழித்துப்போடுகிறது என்று ஒருவர் அழகுறக் கூறியுள்ளார்.

கவலை திங்கு விளைவிக்கக் கூடியது. மனிதர்களுடைய நோய்க்கு பெரும்பாலான காரணம் அவர்களது கவலை, மனத்தாக்கம், உள்ளத்தளர்ச்சி ஆகியவையே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கவலைகொள்வதால் வயிற்றுப்புண் போன்ற பிணிகள் பெருகுகின்றன. கவலை என்பது பாவம். தேவனுடைய ஞானத்தின்மீது கவலை ஐயம் கொள்ளச்செய்கிறது. தேவன் செய்கிறதை, அறியாது செய்கிறார் என்ற எண்ணத்தை அது உண்டாக்குகிறது. அது தேவனுடைய அன்பில் சந்தேகத்தை எழுப்புகிறது. நம்மீது அவர் அக்கறை கொள்கிறதில்லை என்று சொல்கிறது. அது தேவனுடைய வல்லமையில் ஐயம் எழச்செய்கிறது. எனக்கும் கவலையைத் தரும் சூழ்நிலைகளை அவரால் மாற்றமுடியவில்லை என்று கூறுகிறது.

பெரும்பாலான நேரங்களில் நமது கவலையைக் குறித்து பெருமைப்படுகிறோம். ஒருவர் தனது மனைவி இடைவிடாமல் கவலைப்படுவதைக் குறித்துக் கடிந்துகொண்டபோது, நான் கவலைப்படாதிருந்தால் இங்கு ஏதாவது நல்லது நடந்திருக்குமா? என்று அவள் வினாவினாள். கவலையைப் பாவம் என்று அறிக்கையிட்டு, அதனைவிட்டொழிக்கவில்லையெனில் அதனின்றும் நாம் மீளமாட்டோம். அவ்வாறு விட்டொழிப்போமாயின் நாம் நம்பிக்கையுடன் இவ்வாறு கூறமுடியும். நாளைய தினத்தைக்குறித்து கவலைகொள்ளேன், எனது இரட்சகர் என்னைக் கவனித்துக்கொள்வார். ஒருவேளை அதிலும் துன்பமும் வேதனையும் இருக்குமாயின், அதைத்தாங்க தேவையான பலத்தையும் அவர் தந்தருளுவார். நாளைய தினத்தைக் குறித்த கவலை கிருபையையும், பலத்தையும் எனக்குத் தரப்போவதில்லை. அவ்வாறாயின் அக்கவலையை நான் ஏன் இன்று கொண்டிருக்கவேண்டும்?