இல்லறத்தில் நல்லறம்

ஜனவரி 9

…..தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து,…… (1.தீமோ.5:4)

வீட்டிலே பிசாசு, வெளியிலே தேவதூதன் என்னும் வழக்கை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெளியிடங்களில் தன்னைக் கிருபை நிறைந்தவராகக் காண்பிக்கிற ஒருவர், வீட்டிலே கடுமையாகவும் இரக்கமற்ற முறையிலும் நடந்து கொள்பவராயிருந்தால், அது அவருடைய கொடுரத்தைக் காட்டுகிறது.

இது குறிப்பிட்ட ஒரு கூட்டத்தாருக்கு மட்டுமே உரியதன்று. இளைஞர் இதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். தொலைக்காட்சியில்   புகழ்பெற்றவராக விளங்கும் ஒருவர் அனைவராலும் விரும்பத்தக்க மாதிரியாகத் திகழ்வார். ஆயின், அவரே தன் வீட்டில் மூர்க்கமான தகப்பனாக விளங்கலாம். தம்முடைய தொழிலில் கூட்டாளிகளுடன் இனிய முகத்துடன் பழகும் ஒருவர், வீட்டிலே தமது சொந்த இயல்பை வெளிப்படுத்தி, எளிதில் கோபமடைகிறவராகக் காணப்படுவார். மேடைகளில் பளிச்சிடும் இறைப்பணியாளர்கள், வீட்டறைகளில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வர்.

வீழ்ந்துபோன தன்மையை நாம் கொண்டிருப்பதால் நமக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறோம். அவர்களே நமது தேவைகள் அனைத்தையம் சந்திப்பவர்கள். நாம் நல்ல பக்தியுடன் இருக்கும்போது நமக்கு நெருக்கமானவர்களிடம் அன்புகூருகிறோம். வீலர் வில்காக்ஸ் இதனை அழகுற எடுத்தியம்புகிறார்.  பேருண்மை யாதெனில், நாம் அன்புகூருகிறவர்களை மனவருத்தம் அடையச்செய்கிறோம். அறியாதவர்களைப் புகழ்ந்து பேசுகிறோம். விருந்தினர்களை மனமகிழ்வு அடையச்செய்கிறோம். ஆயின், மிகவும் அன்புகூரத்தக்க நெருக்கமானவர்களைத் துன்புறுத்துகிறோம். இதே எண்ணம் கொண்ட வேறொரு கவிஞர், அறிமுகமில்லா அந்நியரை வாழ்த்துகிறோம். விருந்தினரிடம் புன்னகை பூக்கிறோம். ஆனால், மிகவும் அன்பானவர்களிடம் கசப்பான சொற்களைப் பேசுகிறோம் என்று எழுதியுள்ளார்.

சபையிலும், ஜெபக்கூட்டத்திலும், கிறிஸ்தவப் பணியிலும் சமய நெறியைக் கடைப்பிடிப்பது எளிது. ஆனால், அனுதின வாழ்க்கையில் கிறிஸ்தவச் சமயநெறியை வெளிப்படுத்திக் காட்டுவது முற்றிலும்  மாறானது. வீட்டில் தேவபக்தியாய் நடந்து கொள்வது  கிறிஸ்தவத்தில் மிகவும் இன்றியமையாததாகும். மற்றவர்களுக்கு  முன்னர் நீதியை நிறைவேற்றுபவர்கள், வெளியிடங்களில் முன்மாதிரியாகத் திகழ்பவர்கள், தங்களுடைய வீட்டில் தேவபக்தியைக் காட்டாது தோற்றுப்போகின்றனர். அது ஆழ்ந்த வருத்தத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு குடும்பத்தலைவனை அறிவேன். வாராந்திர ஜெபக்கூட்டத்திற்கு தவறாமல் வருகை புரிபவர், ஊக்கமாக ஜெபிப்பார். அவர் அளிக்கும்   செய்தி அனைவரும் கற்றுக்கொள்ளத்தக்க வகையில் புத்திபுகட்டுவதாக இருக்கும். ஆனால், வீட்டிற்குச் சென்றபின், அவருடைய மனைவியோ, மக்களோ அவரிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கும் அஞ்சுவர். அங்கே அவர் கோரமாகவும் மூர்க்கமாகவும் நடந்துகொள்வார்.

சாமுவேல் ஜான்ஸன் என்பவர், ஒவ்வொரு மிருகமும் அதற்கு வேதனை உண்டாகும் போதெல்லாம் அருகில் இருக்கும் மிருகத்தைப் பழிவாங்கும். இவ்வியல்பு மனிதனிடமும் காணப்படுகிறது. ஆயின்  இதனை நாம் தவிர்க்கவேண்டும் என்ற அறிவுரை வழங்கியுள்ளார்.

பொது இடங்களில் நடந்துகொள்ளவதல்ல, வீட்டிலே நாம் நடந்துகொள்வதே நமது கிறிஸ்தவ நடத்தைக்கு அளவுகோலாக விளங்குகிறது.