தகுதியற்ற முந்தின இயல்பு

ஜனவரி 6
என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. (ரோமர் 7:18)

ஒரு இளம் விசுவாசி தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இப்பாடத்தைக் கற்றுக்கொள்வானெனில், அவனுடைய பிற்கால வாழ்க்கையில் இடுக்கண் நிறைந்த இவ்வுலகினின்றும் தன்னைக் காத்துக்கொள்ளுவான். பொல்லாங்கானதும், மறுபடியும் பிறவாததுமான நம்முடைய முந்தின இயல்பில் ஒரு நன்மையும் இல்லை என்று வேதம் கற்பிக்கிறது. நமது மாமிசத்தில் கொஞ்சமும் நன்மையில்லை. நம்முடைய மறுபிறப்பின் போது அதில் ஒரு துளிகூட மாற்றம் ஏற்படுவதில்லை. தொடர்ந்து சீரான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தாலும் அதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படுவதில்லை. உண்மையில் அதில் முன்னேற்றத்தை உண்டுபண்ண வேண்டுமென்று தேவன் முயற்சி செய்கிறதுமில்லை. அதனைச் சிலுவையில் மரணத்திற்குள்ளாகத் தீர்த்திருக்கிறார். மேலும் அதனைச் சாவுக்குரிய இடத்திலேயே நாம் வைத்திருக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்.

இந்த உண்மையை நான் நம்புகிறவனானால், என்னுடைய முந்தின இயல்பில் நன்மையைத் தேடுகிற வீணான செயலைச் செய்யமாட்டேன். அங்கு ஒரு  நன்மையும் காணமாட்டாய் என்று தேவன் கூறியிருப்பதால் அங்கே அதை நாடமாட்டேன்.

இந்த உண்மை என்னை ஏமாற்றத்திலிருந்து விடுவிக்கும். என்னிடத்தில் ஒரு நன்மையும் இல்லை என்பதை நான் அறியும்போது அதன் நிமித்தம் நான் ஏமாற்றமடையமாட்டேன். முன்னதாகவே அங்கே அது இருக்கவில்லை என்பதை அறிந்திருக்கிறேன். என்னைக் குறித்து நானே ஆராய்ந்து பார்க்கிறதிலிருந்து என்னைக் காத்துக்கொள்வேன்.  சுயத்தில் வெற்றியில்லை என்னும் கூற்றை அடிப்படையாக வைத்தே என் எண்ணங்கள் அமையும். உண்மையில் சுயத்தில் மூழ்கியிருத்தல் தோல்வியையே தரும். இவ்வுண்மை என்னை மனோதத்துவ நிபுணர்கள்  தரும் ஆலோசனைகளிலிருந்து காத்துக்கொள்ளும். அவர்கள் தரும் அறிவுரைகளில் சுயத்தையே நோக்கிப் பார்க்கும்படி கூறுவார்கள். அவ்வகை முயற்சிகள் இக்கட்டுகளை மிகுதியாக்குமேயொழிய, தீர்ப்பதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நொருங்கியிருப்பதற்கு இது எனக்குக் கற்றுக்கொடுக்கிறது. ராபர்ட் முர்ரே மேக்செய்னி அவர்கள் உங்களுடைய சுயத்தை நீங்கள் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், கிறிஸ்துவை பத்துமுறை நோக்கிப் பாருங்கள் என்று கூறியுள்ளார். இது சரியான அறிவுரையாகும். பரிசுத்தமாக்கப்பட்ட சுயம், மகிமைநிறைந்த கிறிஸ்துவுக்கு ஈடாகாது என்று வேறொருவர் கூறியுள்ளார். சுயத்தை விட்டு நீங்கி இரட்சகரின் தாபரத்தில் தங்குவது எத்தனை இன்பமானது என்று ஒரு கவிஞர் வரைந்துள்ளார்.
தற்காலப் பிரசங்கங்களும், கிறிஸ்தவ நூல்களும் சுயத்தைப் பற்றிய சிந்தனையைத் தூண்டிவிட்டு அத்தகைய மதுமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்படி கற்பிக்கின்றன. தன்னால் சாதிக்க இயலும் என்ற எண்ணம், உள்ளத்தில் ஏற்படும் தடைகளின் காரணங்கள், மனதில் ஏற்படும் எண்ணங்கள் இவற்றோடு ஈடுபாடு கொள்ளவேண்டுமென்று அவை கற்பிக்கின்றன. இந்த வழிமுயைறானது தடுமாற்றம் என்னும் சோகத்தை விளைவித்து, வாழ்க்கையின் நொருங்கிப்போன நிலைலையே ஏற்படுத்தும்.

என்னைக் குறித்துச் சிந்திப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னை மறந்து, என்னுடைய எண்ணங்களுக்குப் பாத்திரராகிய தேவனையே நோக்கிப் பார்ப்பேனாக.