சிறுமந்தை

ஜனவரி 5
உன்னோடு இருக்கிற ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள். (நியா.7:2)
நாம் ஒவ்வொருவரும், எண்ணிக்கையின் மிகுதியில் ஆர்வம் கொண்டவர்களாகவும், எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியைக் கணக்கிடுகிறவர்களாகவும் இருக்கிறோம். எண்ணிக்கை குறைவுக்கு காரணம் நிந்தையென்று கருதுகிறோம். பெருங்கூட்டம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகவும், மதிப்பிற்குரியதாகவும் எண்ணப்படுகிறது. எண்ணிக்கையைக் குறித்து எப்படிப்பட்ட மனப்பான்மை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதைக் காணலாம்.

மிகுதியான எண்ணிக்கையை தூய ஆவியானவரின் செயலாக்கத்தின் கனியாக இருக்குமாயின் அதனைத் தரக்குறைவாக நாம் எண்ணக்கூடாது. அப்படிப்பட்ட செயலாற்றலினாலே, பெந்தேகொஸ்தே நாளிலே 3000 ஆத்துமாக்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு தகுதிபெற்றனர். மிகுதியான எண்ணிக்கை தேவனுக்கு மகிமையாகவும், மனுக்குலத்திற்கு நற்பேறாகவும் அமையுமாயின் அதன்பொருட்டு நாம் களிகூர வேண்டும். பெரும் கூட்டமாக மக்கள் தேவனுக்கு இதயபூர்வமாகப் புகழ்மாலையை ஏறெடுக்கவேண்டும் என்றும், மீட்பின் செய்தி உலகமெங்கும்பரவவேண்டும் என்றும் நாம் விரும்பவது நன்று.

மாறாக பெரும் எண்ணிக்கை பெருமையைக் கொண்டுவருமானால் அ து நன்றன்று. கிதியோனின் படையைத் தேவன் சிறிதாக்கினார். அவ்வாறு செய்யவில்லையென்றால், என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேலர் சொல்ல ஏதுவாகும் (நியா.7:2). தற்காலக் கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கை அடைவதற்குத் தாறுமாக ஒடுகின்றனர். அது அவர்களுடைய பெருமைக்கே வழிவகுக்கும் என்று தமது கருத்தைக் கூறுகிறார் E. ஸ்டான்லி ஜோன்ஸ்.

கர்த்தரைச் சார்ந்திராமல் மனிதனுடைய பலத்தையே சார்ந்து செயல்படுவதற்கு மிகுதியான எண்ணிக்கை வழிவகுக்குமானால் அது தவறேயாகும். மக்கள் தொகையை எண்ணும்படி தாவீது கட்டளையிட்டான். அவனுடைய தீமையான எண்ணம், யோவாபின் அறிவுரையினாலும் தடைசெய்யப்படவில்லை (2.சாமு.24:2-4).

பெரும் எண்ணிக்கையைச் சேர்ப்பதற்காக, தகுதியைக் குறைப்பதோ, உபதேசங்களைச் சரிவரக் கைக்கொள்ளாதிருப்பதோ, தேவ செய்தியின் தரத்தைக் குறைப்பதோ, தெய்வீக ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காதிருப்பதோ விரும்பத்தக்கதல்ல. கர்த்தரைக் காட்டிலும் பெருங்கூட்டத்தில் நமது மனதைச் செலுத்தினால் இவ்வாறு நடைபெற ஏதுவுண்டு.

பெருங்கூட்டம் உள்ளான ஐக்கியக் குறைவை ஏற்படுத்துமானால் அதனை நிறைவானது என்று கூறமுடியாது. பெருங்கூட்டத்தில் தனிநபர் அறியப்படுவதில்லை. அத்தனிநபர் வருகிறாரா இல்லையா என்பதும் தெரிவதில்லை. அவரது மகிழ்ச்சியும் துக்கமும் மற்றவர்களுக்குத் தெரியாது. ஒரே சரீரம் என்ற தத்துவம் இங்கு தோற்றுப்போகிறது. பெருங்கூட்டம் வரங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யுமாயின் அது நன்றன்று. இயேசு கிறிஸ்து 12 சீடர்களைத் தெரிந்தெடுத்ததில் முக்கியத்துவம் இல்லாமலில்லை. பெருங்கூட்டம் தங்கள் சொந்தக் கருத்துக்களிலிருந்து அசைவதில்லை.

மீதியாக நிலைநிற்கும் சிறுகூட்டத்தைக் கொண்டே தேவன் செயல்புரிகிறார் என்பது பொதுவான கோட்பாடாகும். பெருந்திரள் அவரைக் கவருவதுமில்லை. சிறுகூட்டத்தை அவர் வெறுப்பதுமில்லை. பெருங்கூட்டத்தைக் கண்டு நாம் பெருமைப்படவேண்டாம். நமது சோம்பேறித்தனத்தாலும் மாறுபாடான நடத்தையினாலும் சிறுகூட்டமே உள்ளது என்றால் அதில் மனநிறைவும் கொள்ளவேண்டாம்.