பிறர் மேன்மை கருதுதல்

ஜனவரி 2
ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். (பிலி.2:3)

மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாகக் கருதுவது மனிதனின் இயல்பல்ல. வீழ்ந்துபோன மனுக்குலம் தற்பெருமைக்கு விழும் தண்டனையை ஏற்றுக்கொள்ளாமல் அதனை எதிர்த்து நிற்கின்றது. அது மனித இயல்பிற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. தற்பெருமையற்ற வானுலக வாழ்வினை வாழ்வதற்கு நாம் சொந்த பலமற்றவர்களாயிருக்கிறோம். ஆயினும் தெய்வீக வல்லமையால் அவ்வாறு வாழ இயலும். நாம் நமது சுயத்தை அழித்து, மற்வர்களை மேன்மையாகக் கருதக்கூடிய தன்மையை அடையத் தேவையான பலத்தை, நமக்குள்ளாக வாசம்செய்யும் தூய ஆவியானவர் நமக்குத் தந்தருளுகிறார்.

இந்த திருவசனத்திற்கு கிதியோன் நல்லதொரு சான்றாக விளங்குகின்றார். முந்நூறு ஆட்களைக்  கொண்டு கிதியோன் மீதியானியர்களைத் தோற்கடித்த பிறகு, கடைசித் தாக்குதலை நடத்த எப்பிராயீம் மனிதர்களை அழைத்தான். எதிரிகள் தப்பியோடும் வழிகளை அவர்கள் அடைத்து மீதியான் நாட்டு இளவரசர்கள் இருவரை சிறபை;பிடித்தனர். முன்னரே, ஏன் தாங்கள் அழைக்கப்படவில்லையென்று அவர்கள் முறையிட்டனர்.

ராப்பா பட்டணத்தை யோவாப் வென்றான். எனினும், தனது தன்னலமற்ற எண்ணத்தினால், தாவீது தனது மனிதர்களோடு வந்து அப்பட்டணத்தை முற்றுகையிட்டு பிடிக்கும்படி அவனுக்குச் சொல்லியனுப்பினான் (2.சாமு.12:26-28). மனநிறைவு கொண்ட யோவாப், அந்த வெற்றிக்குரிய பெருமை தாவீதையே சேரவேண்டும் என்று கருதினான். யோவாபின் பெருந்தன்மையுள்ள செய்கைகளில் இதுவும் ஒன்று.

அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் காட்டிலும் பிலிப்பு பண்டணத்தாரை மேன்மையாகக் கருதினானர். அவர்களுடைய விசுவாசமாகிய பலியின் மேலும், ஊழியத்தின் மேலும் ஊற்றப்படுகின்ற பானபலியைப் போன்று தனது ஊழியம் அமைந்திருக்கிறது என்று அவர்களுடைய ஊழியமோ அதனைக் காட்டிலும் மேலானது, தேவனுக்கு உகந்ததுமாக இருக்கிறது என்று கூறினார் (பிலி.2:17)

சிறது காலத்திற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறகிறேன். புகழ்பெற்ற இறையியல் சொற்பொழிவாளர் சிலருடன், தேவனுடைய மனமகிழ்ச்சிக்குரிய ஊழியர் ஒருவர், மேடைக்குச் செல்ல அதற்கருகில் இருந்த அறையில் காத்திருந்தார். குறித்த நேரம் வந்தவுடன் மேடையின் வாசல் வழியாக அவர் நுழைந்தபோது, அரங்கில் இருந்தோர் எழுந்து நின்று இடிமுழக்கம்போல கரவொலி எழுப்பினர். அந்த ஊழியரோ உடனடியாகப் பின்புறமாகச் சென்று, தன்னைத் தொடர்ந்து வந்தவர்களை முன்சென்று அந்தப் பாராட்டைப் பெற்றக்கொள்ளும்படியாகத் தன்னை மறைத்துக்கொண்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னலமற்ற குணத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். நாம் உயர்த்தப்படும்படி அவர் தம்மைத் தாழ்த்தினார். நாம் ஐசுவரியராகும்படி அவர் தரித்திரரானார். நாம் வாழும்படி அவர் மரித்தார்.

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.